Last Updated : 02 Dec, 2015 02:45 PM

 

Published : 02 Dec 2015 02:45 PM
Last Updated : 02 Dec 2015 02:45 PM

சின்னஞ்சிறு உலகம்: கதைப் புதையல்

எல்லோருக்கும் வணக்கம்!

நான்தான் புழு... புத்தகப் புழு பேசறேன். எங்கேன்னு தேடுறீங்களா? உங்க உடம்போட ஒப்பிடுறப்போ, நான் ரொம்ப ரொம்ப ரொம்பக் குட்டிதான். ரொம்ப நாள் எடுக்கப்படாத, பயன்படுத்தப்படாத புத்தகங்கள்ல நான் குடியிருப்பேன். சில நேரம் புழுவாகவும், பல நேரம் வெள்ளிப்பூச்சியாகவும் வளர்ந்திருப்பேன்.

புத்தகப் புழுக்களுக்குப் புத்தகங்களை அரிச்சு திங்கிறதுதான் வேலைன்னு, புத்தகம் வாசிக்கிறவங்க எங்களைத் திட்டுவாங்க. ஆனா, நான் கொஞ்சம் வித்தியாசமான புழு, நான் புத்தகங்களை அரிச்சுத் திங்க மாட்டேன். அதிலுள்ள அறிவை மட்டும், என் மூளைக்குக் கடத்திக்கிறேன். அப்பப்பா! இந்த உலகத்துல எவ்வளவு புத்தகங்கள் இருக்கு. தமிழ் புத்தகங்கள், அதுலயும் குழந்தைப் புத்தகங்கள்னு பார்த்தாகூட, நிறைய குவிஞ்சு கிடக்கு.

இத்தனையையும் எப்போ வாசிச்சு முடிக்கிறது? அதுக்காகத்தான் இனிமே மாசம் ஒரு தடவை நான் வாசிச்ச முக்கியமான புத்தகங்களைப் பத்தி உங்களுக்குச் சொல்லப் போறேன்.

இந்த மாசம் நான் வாசிச்ச புத்தகம் எது தெரியுமா? ஒரு புத்தகம் இல்லை, கதைப் புதையல்ங்கிற எட்டு புத்தகங்கள் கொண்ட தொகுப்பை நான் வாசிச்சேன். கொ.மா.கோ. இளங்கோ என்கிற எழுத்தாளர் எழுதின இந்தப் புத்தகத்தை, ‘புக்ஸ் ஃபார் சில்ரன்’ வெளியிட்டிருக்காங்க.

எல்லா புத்தகங்களும் சின்னச் சின்ன வரிகளில் கதையும், நிறைய கறுப்பு-வெள்ளை ஓவியங்களுடனும் வந்திருக்கு. உலகப் புகழ்பெற்ற கதைகளோட தமிழ், ஆங்கில வடிவம் ரெண்டையுமே தந்திருக்காங்க. ஒவ்வொரு கதையும் வித்தியாசமான வகைல, சுவாரசியமா இருக்கு.

ஃபெர்டினன்ட்

இதுல எனக்குப் பிடிச்ச முதல் கதை ஃபெர்டினன்ட். ஸ்பெயினில் நடக்கும் காளைச் சண்டையைப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? இந்தச் சண்டைக்காக மலைப்பகுதிகள்ல இயற்கையா வளரும் காளைகளைத் தேர்வு செய்வாங்க. இந்தச் சண்டைல மனுஷனோட மோதும் காளைகள் ரொம்ப ஆக்ரோஷமா இருக்கும். காளைகளைத் துன்புறுத்துறதால இந்தக் காளைச் சண்டை பத்தி நிறைய விமர்சனங்களும் உண்டு. அதோட தொடர்ச்சியா காளைச் சண்டைகள் பத்தி புகழ்பெற்ற எழுத்தாளர் மன்ரோ லீப், சமயோசிதமா கிண்டலடிச்ச கதைதான் ஃபெர்டினன்ட்.

ஒரு சண்டைக் காளை, சண்டைபோடப் பிடிக்காம பூக்களோட நறுமணத்தை முகர்ந்து பார்த்துக்கிட்டு, இயற்கை அழகுல கிறங்கிக் கிடந்தா எப்படி இருக்கும்? அதுதான் ஃபெர்டினன்ட் காளை.

குட்டன் ஆடு

ஃபெர்டினன்ட் காளை இப்படின்னா, மன்ரோ லீப் எழுதிய குட்டன் என்ற கதையில் வரும் செம்மறியாடு, ஆடுகளிலேயே வித்தியாசமானது. செம்மறியாட்டுக் கூட்டம் வழக்கமா எதைப் பத்தியும் யோசிக்காம ஒரு ஆடு போன பாதையிலேயே எல்லாமும் போகும். ஒண்ணு செஞ்சதையே மத்த எல்லாமும் செய்யும். ஆனா, அப்படி ஒருத்தரையே எல்லோரும் பின்பற்றினா என்ன நடக்கும்னு குட்டன் ஆடு கதை சொல்லுது. குட்டன் வழக்கமான ஆடு இல்ல, சிந்திக்கிற ஆடு. மனுஷங்களும் செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் போல இருக்காம, குட்டன் ஆட்டைப் போல இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?

உயிர் தரும் மரம்

செடிகளை எல்லாம் ஆடு கடிச்சு சாப்பிடும்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, இந்த மனுஷங்க எல்லாம் மரத்தை என்ன பண்றாங்க? அதைப் பத்தி சொல்லுது, ஓவிய-எழுத்தாளர் ஷெல் சில்வர்ஸ்டீன் எழுதியுள்ள ‘உயிர் தரும் மரம்’ என்கிற புத்தகம். மனுசங்களோட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தாவரங்கள், ஏதோ ஒரு உதவியைச் செய்துகொண்டே இருக்கின்றன. ஆனா, மனுசங்க அதைப் புரிஞ்சு நடந்துக்கிறாங்களான்னு கேள்வி கேட்குது இந்தப் புத்தகம்.

மந்திர விதைகள்

அந்தப் புத்தகம் கேட்கும் கேள்விக்கான சரியான பதிலை, ‘மந்திர விதைகள்’ புத்தகத்துல வர்ற ஜாக் என்கிற சிறுவன் சொல்றான், செஞ்சு காட்டுறான். ஜப்பானிய ஓவிய-எழுத்தாளர் மித்சுமாசா அனோ வரைஞ்சு எழுதினது இந்தக் கதை. ஒரு வருஷத்துக்குப் பசியே ஏற்படுத்தாத இரண்டு மந்திர விதைகள் அவனுக்குக் கிடைக்குது. அந்த இரண்டு விதைகளை, அவன் புத்திசாலித்தனமா பயன்படுத்துறான். ஒரு கட்டத்துல புயல், வெள்ளத்துல எல்லாமே அடிச்சுக்கிட்டுப்போன பிறகுகூட, மந்திர விதைகளை ஜாக் சமயோசிதமா காப்பாத்துறான், அந்த விதைகளும் தொடர்ந்து அவனை வாழ வைக்குது.

இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் உள்ள ஒற்றுமை என்னன்னா உங்களுக்குப் பிடிச்ச ஆடு, மாடு, பூனை, வாத்து, மரம், செடிகளை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்ட கதைகள் இவை. அதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கும்னு சரியா தெரிஞ்சுக்கிட்டு புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இந்தக் கதைகளை எழுதியிருக்காங்க. நீங்களும் வாங்கிப் படிச்சுப் பாருங்களேன்.

கதைப் புதையல், ஆசிரியர்: கொ.மா.கோ. இளங்கோ, வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 18, தொடர்புக்கு: 044-2433 2424

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x