Last Updated : 26 Dec, 2015 01:03 PM

 

Published : 26 Dec 2015 01:03 PM
Last Updated : 26 Dec 2015 01:03 PM

பரிசோதனை ரகசியங்கள் 14: காசநோய்க்கு என்ன பரிசோதனை?

காசநோய் என்பது மாசடைந்த காற்று மூலம் பரவுகிற தொற்றுநோய். இந்த நோயை உண்டு பண்ணும் பாக்டீரியாவுக்கு ‘மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' (Mycobacterium tuberculosis) என்று பெயர். உடலில் இது அதிகமாகப் பாதிப்பது நுரையீரல்களைத்தான். என்றாலும் குடல், தோல், எலும்பு, மூளையுறை, சிறுநீரகம், நிணநீர்த் தாரைகள் ஆகியவற்றையும் பாதிக்கும்.

இந்தக் கிருமிகள் நோயாளியின் சளியில் வெளியேறும். இந்த நோயுள்ளவர் வாயை மூடாமல் இருமும்போதும் தும்மும்போதும், சளியைக் காறித் துப்பும்போதும், இவை சளியுடன் காற்றில் பறக்கும். அதை சுவாசிக்கும் மற்றொருவருக்கு இவை பரவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, இந்த நோய் உடனே தொற்றிக்கொள்ளும்.

அறிகுறிகள்

இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், மாலைநேரக் காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல் எடை குறைதல், நெஞ்சு வலி, இரவில் உடல் வியர்ப்பது, எந்த நேரமும் களைப்பு ஆகியவை காசநோயின் முக்கிய அறிகுறிகள்.

பிரைமரி காம்ப்ளெக்ஸ் (Primary complex)

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் காசநோயை ‘பிரைமரி காம்ப்ளெக்ஸ்' என்கிறோம். குழந்தைக்கு அடிக்கடி சளியுடன் காய்ச்சல் வருவது, அடிக்கடி மூச்சிளைப்பு ஏற்படுவது, பசியின்மை, உடல் எடை குறைவது அல்லது வயதுக்கு ஏற்றபடி உடல் எடை அதிகரிக்காதது, கழுத்தில் நெறிக்கட்டிகள் நீடிப்பது போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

பரிசோதனைகள் என்ன?

1. ரத்தப் பரிசோதனைகள்

ரத்த அணுக்களுக்கான வழக்கமான பரிசோதனைகள் எல்லாமே மேற்கொள்ளப்படுவது உண்டு. அவற்றில் மொத்த ரத்த வெள்ளையணுக்களின் அளவும் (Total WBC count), இ.எஸ்.ஆர். (ESR) அளவும் அதிகமாக இருக்கும். ஆனால் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு காசநோயை உறுதிப்படுத்த முடியாது. ஒரு கச்சேரிக்குப் பக்க வாத்தியங்களைப் போல, இவை காசநோய்க்கான பரிசோதனைகளில் துணைப் பரிசோதனைகளே!

2. மேன்டோ பரிசோதனை (Mantoux test)

# ‘டியூபர்குலின்’ எனும் புரதத்தை 0.1 மி.லி. அளவில் முன் கையில் ஊசி மூலம் செலுத்துவார்கள்.

# சரியாக 48 அல்லது 72 மணி நேரம் கழித்து ஊசி போட்ட இடத்தில் வீக்கம் உள்ளதா என்று கவனிப்பார்கள்.

# 10 மி.மீ. அளவுக்கு மேல் விட்டமுள்ள வீக்கம், உடலில் காசநோய்க் கிருமிகள் இருந்ததை அல்லது உள்ளதைத் தெரிவிக்கும்.

# ஊசி போட்ட இடம் சிவந்திருந்தால் பயப்பட ஒன்றுமில்லை.

# அந்த இடத்தின் மத்தியில் புண்ணாகியிருந்தால், காசநோய்க் கிருமிகள் இருப்பது உறுதியாகிறது.

3. மார்பு எக்ஸ் ரே

மார்பு ‘எக்ஸ் - ரே’ படத்தில் நுரையீரல் காசநோயை (Pulmonary Tuberculosis) உறுதி செய்யலாம். சில நேரம் இது புதிதாக வந்துள்ள நோய் பாதிப்பா, பழைய நோய் பாதிப்பின் தழும்பா எனச் சந்தேகம் வரக்கூடும். அப்போது நோயை உறுதி செய்ய சளிப் பரிசோதனை உதவுகிறது.

4. சளிப் பரிசோதனை

# சளியை எடுப்பதற்கு முன்பு வாயை நன்றாகக் கொப்பளித்துச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

# காலையில் எழுந்ததும் எடுக்கப்படும் முதல் சளியைப் பரிசோதிப்பதுதான் சரியான முடிவைத் தரும். பலமாக இருமிச் சளியை எடுக்க வேண்டும். மூன்று சளி சாம்பிள்களைப் பரிசோதிப்பது நல்லது.

# ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. குழந்தைகள் விஷயத்தில் இன்னும் சிரமம். குழந்தைகள் இருமும்போது சளியை அகலமான கோப்பையில் பிடித்துக்கொள்வது நல்லது. அல்லது தொண்டைச் சளியைப் பஞ்சுக் குச்சியால் (Swab) துடைத்து எடுத்துக்கொள்ளலாம்.

# சளியை இதற்கென்றே உள்ள கிருமி நீக்கம் செய்யப்பட்ட குப்பியில்தான் சேகரிக்க வேண்டும். வீட்டிலுள்ள பழைய பாட்டில்களில்/தீப்பெட்டிகளில் சேகரித்துக் கொண்டு செல்லக் கூடாது.

# கண்ணாடி நழுவுச்சட்டத்தில் சளியை நிறமூட்டி (AFB Staining) நுண்ணோக்கி மூலம் கிருமிகளை நேரடியாகப் பார்த்து, நோயை உறுதி செய்யலாம். இதன் முடிவை, உடனே தெரிந்துகொள்ளலாம்.

# கிருமிகளை வளர் ஊடகங்களில் வளர்த்தும் (Sputum Culture) காசநோயை முடிவு செய்யலாம். ஆனால், இதன் முடிவு தெரிய 3 வாரங்கள்வரை காத்திருக்க வேண்டும்.

5. ஜீன் எக்ஸ்பெர்ட் எம்.டி.பி. / ஆர்.ஐ.எஃப். பரிசோதனை (Gene Xpert MTB/RIF Test)

# இதில் MTB என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்பதையும் RIF என்பது காசநோய் சிகிச்சைக்குத் தரப்படுகிற ரிஃபாம்பிசின் மருந்தையும் குறிக்கின்றன.

# இதுவும் ஒரு சளிப் பரிசோதனைதான். ஆனால், நவீனத் தொழில்நுட்பம் கொண்டது.

# பாக்டீரியாவிலுள்ள மரபணு வகையை (Gene type) அறியும் பரிசோதனை.

# பொதுவாக, காசநோயின் ஆரம்பத்தில் நோயாளியின் சளியில்தான் பாக்டீரியாக்கள் வெளிப்படும். ஆகவே, ஒருவரின் சளியைப் பக்குவப்படுத்தி, சுத்தப்படுத்தி, அதன் திரவத் தன்மையை அடர்த்தியாக்கி, அதில் காசநோய் பாக்டீரியா இருக்கிறதா என்று முதலில் ஆராய்கிறார்கள்.

# அப்படி இருந்தால், அந்தப் பாக்டீரியாவின் மரபணுவிலிருந்து டி.என்.ஏ.வைத் தனியாகப் பிரித்தெடுக்கிறார்கள். இதற்கு 'சோனிகேஷன்' (Sonication) எனும் டெக்னாலஜி உதவுகிறது. அதாவது, குறிப்பிட்ட அதிர்வெண்கள் கொண்ட கேளாஒலிகளை மரபணுவுக்குள் அனுப்பும்போது, அதிலுள்ள டி.என்.ஏ. தனியாகப் பிரிந்துவிடும். அதை பி.சி.ஆர். தெர்மல் சைக்ளர் (PCR Therma# Cycler) எனும் கருவிக்குள் செலுத்தி, அதில் உள்ள மரபணுவின் வகையைக் கண்டுபிடிக்கிறார்கள். டி.என்.ஏ.வில் காசநோய்க் கிருமியின் மரபணு வகை இருக்கிறது என்றால், அந்த நோயாளிக்குக் காசநோய் இருக்கிறது என்று 98 சதவீதம் உறுதி செய்கிறார்கள்.

இந்தப் பரிசோதனையின் சிறப்பம்சங்கள்:

# சளியில் இந்தப் பாக்டீரியாக்கள் ஒன்றிரண்டு இருந்தால்கூடக் கண்டுபிடித்துவிடும்.

# இந்தப் பரிசோதனையின் முடிவைச் சில மணி நேரங்களில் கொடுத்துவிடலாம்.

# காசநோயைக் குணப்படுத்துகிற ரிஃபாம்பிசின் மருந்துக்கு இந்த பாக்டீரியா கட்டுப்படுமா, கட்டுப்படாதா என்பதும் இதில் தெரிந்துவிடும்.

# சமீபகாலமாக இந்த மருந்துக்குக் குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நோயைக் குணப்படுத்துவது சிரமமாக உள்ளது. ஆகவே சிகிச்சையின் ஆரம்பத்திலேயே இக்கிருமிகள் ரிஃபாம்பிசினுக்குக் கட்டுப்படுமா கட்டுப்படாதா என்று தெரிந்துகொண்டால், சரியான சிகிச்சையை மேற்கொள்ள முடியும். இதன்மூலம் சிகிச்சைக்கான கால அளவு, செலவு மற்றும் வேதனைகளைக் குறைத்துவிட முடியும்.

# தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இப்பரிசோதனை செய்யப்படுகிறது.

6. ரேடியோமெட்ரிக் ‘பேக்டெக்’முறை பரிசோதனை (Radiometric BACTEC Method)

# காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க உதவும் மற்றொரு பரிசோதனை இது.

# இது காசநோய்க் கிருமிகளை நேரடியாகப் பார்க்கும் பரிசோதனை அல்ல.

# இக்கிருமிகள் வளர்சிதை மாற்றமடையும்போது கார்பன் டைஆக்ஸைடு அதிகமாக உற்பத்தியாகிறது. அதன் அளவை அளந்து இந்த நோயைக் கணிக்கிறார்கள்.

# மேலும் இக்கிருமிகள் எந்த மருந்துக்குக் கட்டுப்படும் என்பதையும், இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும்.

# ஒரு வாரத்தில், இதன் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

# ஜீன் எக்ஸ்பெர்ட் எம்.டி.பி. / ஆர்.ஐ.எஃப். பரிசோதனை வருவதற்கு முன்பு, இது மிகப் பிரபலமாக இருந்தது.

7. அடினோசின் டிஅமினேஸ் (Adenosine deaminase) பரிசோதனை

# அடினோசின் டிஅமினேஸ் என்பது ஒரு புரதப் பொருள். இது வெள்ளையணுக்களில் உற்பத்தியாகிறது.

# நுரையீரல் உறை, இதய உறை, வயிற்று உறை, மூளை என்று உடலில் மற்ற இடங்களில் காசநோய் பாதிப்புள்ளதைக் கண்டறிய இது உதவுகிறது.

# மேற்சொன்ன உறுப்புகளில் அசாதாரணமாகச் சுரக்கிற நீரை சிரிஞ்ச் மூலம் சிறிதளவு உறிஞ்சி எடுத்துப் பரிசோதிக்கிறார்கள்.

# அவற்றில் காசநோய் கிருமிகள் இருக்குமானால், அடினோசின் டிஅமினேஸ் புரத அளவு அதிகமாக இருக்கும்.

# இந்தப் புரதம் சில குழந்தைகளுக்குப் பற்றாக்குறையாக இருக்கும். அப்போது அவர்களுக்கு ‘சிட்’ (SCID- severe combined immunodeficiency disease) என்ற பரம்பரை நோய் ஏற்படும். அப்போது இந்த நோயை உறுதிசெய்ய, இதன் அளவை பரிசோதிப்பது உண்டு.

8. பி.சி.ஆர். பரிசோதனை (PCR Polymerase Chain Reaction Test)

# நோயாளியின் சளி அல்லது ரத்தத்தில் காசநோய் பாக்டீரியாவின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து நோயை நிர்ணயிக்கும் பரிசோதனை இது.

# 90 சதவீதம் மிகச் சரியாக நோயைக் கணிக்க உதவுகிறது.

# மிக நுண்ணிய தொழில்நுட்பம் கொண்டது.

# இதன் செலவு கொஞ்சம் அதிகம்.

(அடுத்த வாரம்: தைராய்டு பிரச்சினைக்கு என்ன பரிசோதனை?)
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x