Last Updated : 10 Jun, 2014 10:00 AM

 

Published : 10 Jun 2014 10:00 AM
Last Updated : 10 Jun 2014 10:00 AM

யோகாவும் தியானமும்: எது உண்மை?

‘நலம் வாழ' (22.4.14) இணைப்பில் எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன் ‘யோகாவும் தியானமும் நோய்களைக் குணப்படுத்துமா?' என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அதற்கு மாற்று வாதங்களை முன்வைத்துப் பல கடிதங்கள் வந்தன, அவற்றில் இரண்டு இங்கே.

யோகாவைப் புரிந்துகொள்வோம்!

யோகாவும் தியானமும் நோய் களைக் குணப்படுத்துமா என்ற தலைப்பில் கட்டுரையாளர் தவறான கருத்துகளை எழுதியுள்ளார்.

யோகாவை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

உடல், மன ஆரோக்கியத்துக்கான எளிய தியான யோகா பயிற்சிகள்

மரபணுக்களில் மாற்றம் ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறப்பு யோகா பயிற்சிகள்

நோய்கள் வந்த பின் குணப்படுத்தக்கூடிய சிறப்பு யோகா, தியானக் கிரியா பயிற்சிகள்.

உணவு, உறக்கம் குறைத்து உலகப்பற்றுகள் நீங்கிப் பொருளாசையற்று இறை அனுபவம் கிடைக்க யோகிகள் செய்யும் முழுநேரப் பயிற்சிகள்.

இவை எல்லாமே அனுபவப்பூர்வ மாகவும் அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட நான்கு வகைகளையும் தகுதிக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த நான்கு வகைகளையும் கட்டுரையாளர் ஒன்றாகவே பார்க்கிறார். யோகா என்பது அறிவியல் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

கார்ப்பரேட் மருத்துவமனைகள்

கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி விமர்சனம் செய்கிறார். ஆனால், கார்ப்பரேட் ஆங்கில மருத்துவமனைகள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு சிகிச்சை என்ற பெயரில் சுரண்டுவதைப் பற்றி கட்டுரையாளர் எதுவும் சொல்லவில்லை.

கார்ப்பரேட் சாமியார்கள், கார்ப்பரேட் அலோபதி மருத்துவமனைகள் இரண்டும் செய்வதும் தவறுதான். கார்ப்பரேட் சாமியார்களின் செயல்பாடுகளுக்கும் நேர்மையான யோகா, மூலிகை மருத்துவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த அடிப்படை உண்மையைக் கட்டுரையாளர் புரிந்துகொள்ள வேண்டும்.

தவறான ஒப்பீடு

மூச்சுப் பயிற்சி, குண்டலினி என முயற்சித்தவர்களைவிட விவசாய வேலைகளில் ஈடுபட்டவர்கள் நூறு ஆண்டு வாழ்ந்தனர் என்று விவசாயிகளோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார். விவசாயிகள் உடலுழைப்பைச் செலுத்தி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்களும் ஓய்வு நேரத்தில் யோகா, தியானம் செய்தால் மேலும் ஆரோக்கியம் பெறலாம். யோகாவையும் விவசாய உடலுழைப்பையும் எதிர் எதிரே கட்டுரையாளர் நிறுத்துவது, விபரீதச் சிந்தனை.

எனவே, கார்ப்பரேட் சாமியார்கள், கார்ப்பரேட் அலோபதி மருத்துவமனைகளைப் புரிந்துகொண்டு மக்கள் செயல்பட வேண்டும்.

- மருத்துவர் கி.பிரியதர்ஷினி, பட்டுக்கோட்டை



யோகா மருத்துவம் அங்கீகரிக்கப்பட்ட முறை

நமது முன்னோரின் பாரம்பரிய மருத்துவ முறைகளைத் தவறானது என்று கூறியுள்ளார் கட்டுரையாளர். மேலும் யோகா மருத்துவ முறையை முழுமையான மருத்துவ முறை அல்ல, உடற்பயிற்சி போன்றது. அதனால் நோய்களைக் குணப்படுத்த இயலாது, அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்படாதது என்றும், அலோபதி மருத்துவம் மட்டுமே அறிவியல்பூர்மானது, ஆய்வு செய்து வெளிவருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

நம் முன்னோர்களான சித்தர்களின் ஆராய்ச்சியை மேலை நாடுகள் பயன்படுத்திக்கொண்டது இவருக்குத் தெரியாது போலும்.

மனஅமைதிக்குயோகாவும் தியானமும் நோய்களைக் குணப்படுத்துமா என்று கேட்கும் அவர், இன்றைய சூழலில் மனிதர்கள் மனநோயால் அவதிப்படுகிறார்கள் என்றும், அதற்கு அலோபதி மருத்துவம் ஒன்றே தீர்வு தரும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், மனநோய்க்கு முழு தீர்வு யோகாவும் தியானமுமே. பல அலோபதி உளவியல் நிபுணர்கள் தங்களிடம் வரும் மனநோயாளிகளிடம் யோகா, தியானம் செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள்.

நமது பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பின்பற்றுவது குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து வேறுவேறு கதைகளைச் சொல்வது போலக் குருட்டுத்தனமானது என்று கட்டுரையாளர் கூறியுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட முறை

மற்ற மருத்துவ முறைகளைப் போலவே யோகா, இயற்கை மருத்துவத்தையும் அங்கீகரித்து டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் பி.என்.ஓய்.எஸ். என்ற பட்டப் படிப்பை வழங்கி வருகிறது. அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியும் இந்தப் பட்டத்தை வழங்கிவருகிறது.

இந்தப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் இயற்கை, யோகா மருத்துவ ஆய்வுகள் மூலம் பல நோய்களுக்குச் சிகிச்சை அளித்துவருகிறார்கள். நோய் வருமுன் தடுக்கவும், நோயின்றி வாழவும் வழி உள்ளது. அது யோகா, இயற்கை மருத்துவ முறை மூலம் சாத்தியம் என்று கூறுகிறார்கள்.

யோகா, இயற்கை மருத்துவ முறையில் உள்ள ஆசனம், பிராணாயாமம், கிரியா, பந்தம், தியானம் போன்ற முறையான பயிற்சிகளால் சுவாசத்தைச் சீராக்க முடியும் என்று யோகா மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

அரசு ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் யோகா, இயற்கை மருத்துவ முறை சிகிச்சை வழங்க ரூ. 9.60 கோடி ஒதுக்குவதாக முதல்வர் ஜெயலலிதா 6.5.2013 அன்று அறிவித்திருக்கிறார். இதற்காக வாழ்வியல் மருத்துவமனைகள் தொடங்கப்படும். ரத்தஅழுத்தம், இதய நோய், நீரிழிவு நோய், கழுத்து, முதுகுத்தண்டு நோய்கள், புற்று நோய் போன்றவற்றின் சிறப்பு சிகிச்சையிலும், மேலாண்மை சிகிச்சையிலும் யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சை உதவுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அரசே இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் போது, யோகாவும் தியானமும் உடற் பயிற்சிதான் என்று கட்டுரையாளர் கூறியிருப்பதை ஏற்க முடியாது.

யார் சொந்தக்காரர்?

இன்றைய காலகட்டத்தில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் போலிச் சாமியார்கள். அவர்கள் யோகா, தியானம், கிரியா, பந்தம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். அவர்களும், கங்கைக் கரையில் கஞ்சா போன்ற போதைப் பொருட் களைப் பயன்படுத்தித் தன்னிலை மறக்கும் சாமியார்களுமே யோகா வுக்குச் சொந்தக்காரர்கள் அல்ல.

இவர்களைக் கருத்தில்கொண்டு யோகாவும், தியானமும் நோய்களைக் குணப்படுத்துமா என்று தவறான பிரசாரம் செய்வது, பல்கலைக்கழகத்தில் முறையாகப் பட்டம் பெற்று யோகா, இயற்கை மருத்துவம் செய்துவரும் மருத்துவர்களை, மருத்துவப் பல்கலைக்கழகத்தையும் மதிப்பதாகுமா?

யோகாவை ஆன்மிகத்துக்கும் உடல் நலத்துக்கும் பயன்படுத்திப் பயனடையலாம். அதற்கு முறையாக யோகா, இயற்கை மருத்துவம் படித்தவர்களை அணுகி ஆலோசனை பெற்று, பின்பற்ற வேண்டும்.

- சி.ராமசாமி, நாகலாபுரம், தேனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x