Published : 18 Apr 2021 03:17 am

Updated : 18 Apr 2021 04:46 am

 

Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 04:46 AM

தெய்வமே சாட்சி 12: காட்டுப்பேச்சிகளின் பாடல்

kaatuppechi

உட்ராதீங்க யெப்போவ்

உட்ராதீங்க யெம்மோவ்


உட்ராதீங்க தாத்தோவ்

நான் காட்டுப்பேச்சி பாடுறேன்

உங்க காதுக்குள்ள கேக்குதா

அந்த உச்சி மலையில் வாடுறேன்

உங்க உள்ளங்கையில் தெரியுதா

இந்தப் பாடலை, கொல்லப்பட்ட, அக்கறையற்றுக் கைவிடப்பட்டதால் செத்துப்போன பெண் தெய்வங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து தங்களை வழிபடும் கிராம மக்களை நோக்கி கோரஸாகப் பாடுகிறார்கள். ‘அன்னா வாரான் இன்னா வாரான்/ காக்கிச் சட்டை காஞ்சான் வாரான் காட்டெருது மேலே வாரான்/கண்டவன அடிக்க வாரான்/ கனவை யெல்லாம் பொசுக்க வாரான்’ என்று எதிரிகளை அடையாளங்காட்டி எச்சரித்து மக்களை உஷார்படுத்துவதோடு, ‘தங்க மவனே பயப்படாதே, செல்ல மவளே பயப்படாதே, ஆதி கொடியே பயப்படாதே’ என்று தன் மக்களுக்குத் தைரியமும் சொல்கிறாள் காட்டுப்பேச்சி.

வாங்க தேரை மறிச்சு ஆடுவோம்

வெறும் பைதாவெல்லாம் வெட்டுங்க

ஊர் உலகம் சுத்தப் போவுறோம்

எங்க றெக்கை எங்க கேளுங்க

என்று வழி காட்டுகிறாள் பேச்சி.

பலர் பார்க்க மாண்டவள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அவரே எழுதிய பாடல் இது. இந்த ஒரு பாடல் மட்டுமல்ல. கர்ணன் திரைப்படம் முழுவதுமே பெண் தெய்வங்கள் ஆளுமை செலுத்துகிறார்கள். குறிப்பாகப் படத்தின் நாயகனின் தங்கை பேச்சி, சாலையில் கேட்பாரின்றித் துடிதுடித்துச் செத்துப்போகிறாள். எத்தனையோ வாகனங்கள் போகின்றன, வருகின்றன. ஒடுக்கப்பட்ட அந்த மக்களை யாரும் கண்டுகொள்ளாதது போலவே, பொடியங்குளம் என்கிற அந்த ஊரை ஒரு ஊராகவே மதிக்காத, அங்கே நிற்காத பேருந்துகளைப் போலவே சாகக்கிடக்கும் அந்தப் பெண் குழந்தையைக் கண்டும் காணாதது போலக் கடந்து போகின்றன வாகனங்கள். அக்குழந்தை அந்தச் சாலை யிலேயே மரித்துத் தெய்வமாக உறைகிறாள்.

படுத்த நிலையிலேயே அவளுக்கு மண்ணால் சிலை செய்து வண்ணம் பூசி வழிபடுகிறார்கள். ஒரு குடும்பத்தின் தெய்வம்தான் பேச்சி. ஆனால், ஊர் மக்களே வழிபடும் தெய்வமாக அவள் மாறிவிடுகிறாள். இது நாட்டார் தெய்வ வழிபாட்டில் இயல்பானதுதான்.

பாம்பு வடிவில் பேச்சி

இதுபோன்ற ஒரு பேச்சியம்மன் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், புதூர் என்னும் கிராமத்திலும் உண்டு. அந்த ஊரில் சீலிக்குடும்பத்தில் பிறந்த பெண்ணொருத்தி 14 வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்துபோகிறாள். பலநாள் கழித்து வீட்டில் உள்ளோரின் கனவில் தோன்றிய அப்பெண், ‘என்னை வழிபடுங்கள்’ என்று கூறியதால் பேச்சி என்னும் பெயர் கொண்ட அப்பெண்ணைப் ‘பேச்சியம்மன்’ எனும் பெயரில் வழிபட்டுவருகின்றனர். கோயிலோ மாடமோ இன்றி வீட்டிலேயே வழிபடப்படும் தெய்வம் அவள்.

(நன்றி: ம.சுந்தரராஜன் - அடித்தள மக்களின் சிறுதெய்வ வழிபாடு, தெய்வங்களின் தோற்றக்கதைகள் -முனைவர் ஆறு.ராமநாதன்)

தென் மாவட்டங்களில் பல பேச்சியம்மன் கோவில்கள் உள்ளன. பொதிகை மலையில் மின்சார வாரியத் துக்குச் சொந்தமான ‘வனப்பேச்சி அம்மன்’ கோயில் ஒன்றுள்ளது. 1936-ம் ஆண்டுவரை பொதிகை மலையில் மேலணைக்குள் இருந்த இந்த வனப்பேச்சியைக் கீழணை கட்டும்போது இப்போது உள்ள இடத்துக்குப் பெயர்த்து எடுத்து வந்து கோயில் கட்டியுள்ளனர். வனப்பேச்சி, பலாமரத்தடிப் பேச்சி, நீலகண்டப் பேச்சி என அழைக்கப்படும் இப்பேச்சியின் மூலவர் பாம்பு வடிவில் இருக்கி றது. கோவிலின் வலப்புறம் ஒரு பாம்புப் புற்றும் உள்ளது. பாம்பு வடிவில் பேச்சியம்மன் இருப்பது தமிழ்நாட்டி லேயே இந்த இடத்தில் மட்டும்தான். குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டிப்போட்டும், நீதிமன்ற வழக்கு வெற்றிபெறவும் இங்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.

(நன்றி: தாமிரபரணிக் கரையில் பெண் தெய்வங்கள் -முத்தாலங்குறிச்சி காமராசு. திருநெல்வேலி வட்டாரப் பெண்தெய்வங்கள் - காவ்யா பதிப்பகம்)

பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே முதலில் மேலணை கட்டும்போது அங்கே குடும்பம் குடும்ப மாக வந்து தங்கியிருந்து பணியாற்றிய உழைப்பாளி மக்கள் பாம்புகளின் படையெடுப்பால் பெரும் தொல்லைக்கு ஆளாகி அதிலிருந்து விடுபடத் தங்கள் பேச்சியை பாம்பு வடிவில் படைத்து வழிபட்டிருக்கலாம். அந்த அணைக்கட்டும் வேலை முடிந்ததும் அவரவர் ஊர்களுக்குப் போயிருக் கலாம். இதுகுறித்த நாட்டுப்புறப் பாடல்கள் பல உண்டு. பின்னர் பல ஆண்டு கள் கழித்துக் கீழணை கட்ட அழைத்துவரப்பட்ட உழைப் பாளி மக்கள் இக்கோயில் இருப்பதை அறிந்து தங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் எனக் கருதி மின்வாரியத்தின் உதவி யுடன் கீழே கொண்டு வந்திருக்கலாம். இந்த அம்மனை வணங்கிச் சென்ற பின் யாரோ ஒருவர் வழக்கில் வெற்றிபெற, பின்னர் அதுவே தற்செயல் தொடர்ச்சியாக நீண்டிருக்கலாம்.

வெறும் கற்பனையல்ல

இப்படி ஒவ்வொரு பேச்சிக்கும் ஒரு கதை இருக்கிறது. மதங்கள் சார்ந்த பெருந்தெய்வங்களைப் போல நாட்டார் தெய்வங்கள் வெறும் கற்பனையில் உதித்தவையல்ல. நம்மோடு வாழ்ந்து அநியாயமாகவும் அகாலத்திலும் மடிந்துபோனவர்கள்தாம் இந்தத் தெய்வங்கள். இந்தக் கதைகளை, இந்த உள்ளூர் வரலாறுகளை நாம் எப்படிப் பயன்படுத்துவது என்கிற கேள்வியைத்தான் தன் படைப்பில் மாரி செல்வராஜ் நுட்பமாகக் கையாண்டுள்ளார்.

நீத்தார் நினைவென்பது நிஜம்போலத் தொடர்ந்து நம்மைத் தாக்கும் ஒன்று. நினைவையே மக்கள் ஆவி என்கிற கருத்தாக்கி நினைவையும் தம் கற்பனையையும் கலந்து ஆவியின் நடமாட்டம் என்றும் சாமி வந்திறங்கி ஆடுவது என்றும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையைத்தான் மாரி செல்வராஜ், “அந்த உச்சி மலையில் வாடுறேன், உங்க உள்ளங்கையில் தெரியுதா” என்று பாட வைக்கிறார். கர்ணனின் அப்பா, சாமி கொண்டாடியாக வருகிறார். அவர் மீது வந்து இறங்கும் பேச்சி, தன் அக்காள் திருமணத்துக்குக் காசு சேர்த்து வீட்டில் வைத்திருப்ப தாகச் சொல்கிறாள். வீட்டைத் தோண்டச்சொல்லும் போது நவீன இளைஞனான கர்ணனின் மூலம் பகுத்தறிவின் கேள்வி முன்வைக்கப் படுகிறது. ஆனாலும், தோண்டினால் ஒரு உண்டியல் கிடைத்துவிடுகிறது. அறிவை நம்பிக்கை வெல்கிறது. அறிவு மௌனமாகிறது.

ஆவேசமூட்டும் தெய்வங்கள்

2003-ல் ‘நாட்டார் தெய்வங்கள் - நமது நேச அணி’ என்கிற சிறு நூலை (சவுத் விஷன் பதிப்பு) நான் எழுதினேன். அதில் பெருந்தெய்வ வழிபாட்டை முன்வைத்து மதவாதிகள் முன்னெடுக்கும் மதவெறி அரசியலுக்கு எதிராக ஏன் நாட்டார் தெய்வங்களையும் அவற்றின் பன்முகத்தன்மையையும் பயன்படுத்தக் கூடாது என்கிற கோணத்தில் எழுதியிருந்தேன். ஆனால், கர்ணன் படத்தில் மாரி செல்வராஜ் இன்னும் சரியாக அதைப் பயன்படுத்தியிருக்கிறார். ஊரின் பல பகுதிகளிலும் காட்டு வழிகளிலும் கிடக்கும் பெண் தெய்வ மண் சிலைகளைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம், காலம் காலமாக இத்தகைய பெண்சாவு நிகழ்ந்துவருகிறது என உணர்த்தியது பார்வையாளர்களின் மனத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்து கிறது. அவர்கள் எல்லோரும் சேர்ந்து ‘உட்ராதீங்க யப்போவ்...’ என்று பாடும்போது உண்டாகும் அதிர்வலைகள் விவரிக்க முடியாதவை.

அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு ஆவேசமூட்ட நாட்டார் தெய்வ நம்பிக்கையைப் பயன்படுத்த முடியும் என்று தன் கலையில் காட்டி யிருக்கிறார் அவர். இது முற்றிலும் புதிய கோணம், புதிய பார்வை. அறிவியல்பூர்வமான கேள்விகளுக்கு அப்பால் ஒரு கலை நியாயம் இருக்கிறது. அதை வரவேற்கலாம்.

இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திலகர் இதுபோல கணபதி வழிபாட்டைப் பயன்படுத்தியிருக்கிறார். பின்னர் அது மதவெறி அரசியலுக்கும் உதவியதை மனத்தில்கொண்டு நம்பிக்கையையும் வழிபாட்டையும் எச்சரிக்கையுடன் நாம் போராட்டத்துடன் இணைக்க வேண்டும். படத்தில் பேருந்து உடைப்புக் காட்சியின் முடி வில் அப்போராட்டத்தைப் பேச்சிக்குச் சமர்ப்பணம் செய்வதுபோல கடப்பாரையுடன் சிலையருகே கர்ணன் வந்து அமரும் காட்சி கடந்த காலத் தவறுகளை நிகழ்காலத்தில் சரிசெய்வதாக அர்த்தம் கொள்கிறது.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.comகாட்டுப்பேச்சிகளின் பாடல்Kaatuppechi

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x