Last Updated : 26 Dec, 2015 11:56 AM

 

Published : 26 Dec 2015 11:56 AM
Last Updated : 26 Dec 2015 11:56 AM

எனக்குப் பிடித்த வீடு: என் மனமான வனம்

பிறந்த வீடு, வளர்ந்த வீடு, பூர்வீக வீடு, புகுந்த வீடு, வாழும் வீடு என ஒரு பெண்ணுக்குத்தான் எத்தனை வீடுகள்? வாடகை வீடானாலும், சொந்த வீடு ஆனாலும், வீடு என்பது இளைப்பாறுதலுக்கானது; ஆற்றுப்படுத்தலுக்கானது.

சூரிய ஒளிக் கீற்று ஒரு உருளையாய் இதமான இளஞ்சூட்டுடன் ஜன்னல்களைத் திறந்ததும் இளங்காலையில் பச்சை ஆடை தரித்த ஆரஞ்சு இட்லிப்பூக்கள் நிரம்பிய மரமும், வீட்டில் தெருவெங்கிலும் வியாபிக்கும் ஆழ்ந்த அமைதியும், மத்தியான வெறுமையும், ஒற்றைக் குயிலின் கத்தும் ஓசையும் இரவின் அடர்ந்த இருட்டில் மரங்களின் நடுவே நிற்கும் வீடும் அனுபவிக்க உகந்தது.

என் மனம் ஒன்றுவது எங்களின் தோட்டத்தில்தான். அங்கே சிறு செடிகள், குத்துச் செடிகள், கொடிகள், பூச்செடிகள் பெரிய செடிகள், மரங்கள் என ஒரு வனத்தையே வளர்த்து வருகிறேன்.

இரண்டு ஆள் உயர சப்பாத்திக் கள்ளிகள், கொடியாய் பின்னிய குன்றிமணிச் கொடி எனச் சில ஆச்சர்யங்களும் உண்டு. நான்கு மாமரங்கள்- மிகப் பெரியன. அதில் இரண்டு அமிர்தமாய் இனிக்கும். ஒரு ருமேனியா மாமரம். மற்றொன்று நாரே இல்லாத சிறிய ரகம். தண்ணீர் ஊற்றினாலேயே இத்தனை பிரதி உபகாரமா? எனத் தோன்றும். ஏனென்றால் போதும் போதும் எனும் அளவுக்குக் காய்த்துத் தள்ளிவிடும்.

நான்கைந்து ரகங்களில் செம்பருத்தி, குண்டுமல்லி, கொஞ்சம் ரோஜச் செடிகள் - இவற்றுக்கு நீர்ப் பாய்ச்சுகையில் நிஜமாகவே மனம் லேசாகிவிடும். காலை நேரத்தில், பனித் துளிகள் படர்ந்த சவுக்குச் செடிகள் பார்ப்பதற்கு இதம். நம்மோடு மிக அருகில், பூச்சிகளைக் கொத்தி கொண்டு ‘டுவிட், டுவிட்’ என்று கத்திக் கொண்டு, இரட்டைவால் குருவி ஓர் அழகு. அத்தனை சிறிய உருவத்திலிருந்து, எப்படி இவ்வளவு தெளிவான குரல் வருகிறது என்பது எனக்கு பெரும் விந்தையே!

பத்துப் பதினோரு மணிக்குத் தவிட்டுக் குருவிகள் கும்மாளம் தொடங்கிவிடும், குஞ்சுகளுக்குப் பாடம் சொல்லும் பாங்காக. மணல் நிறத்தில், குண்டு குண்டாய்… பன்னிரெண்டு மணிக்கு மேல், யாரும் அரவமே இல்லாத நேரத்தில் பாம்பு பெரிதாய் சில நேரம், பளபளவென, சில சமயம் மரமேறுவது நளினம். மைனாக்கள் ஓயாமல் கத்திக் கதறிச் சண்டையிடுவதும்போது வாய் விட்டுக், கொஞ்ச நேரம் சத்தம் போடாதீங்க என அதட்டத் தோன்றும்.

பின் மத்தியானப் பொழுதில் உடும்பு வந்து செல்வதைக் கண்டிருக்கிறேன். லேசாய்ப் பயம் எட்டிப் பார்க்கும். சாயங்காலம் வேப்ப மரத்தின் மணம் வீசும் நிழல். அசைவேனா என வேப்ப மரங்கள் பொறுமையைச் சோதனை செய்து பார்க்கும். கருக்கலில் கூவும் ஒற்றைக் குயிலின் ஓசை அந்த நாளை தொடங்கிவைக்கும். வேனிற்காலத்தில் நெஞ்சை உருக்கும் வகையில் அக்காக் குருவியும் கதறித் தீர்க்கும்.

இரவின் இருளில் தோட்டமே ஆழ்ந்திருக்கும். அது ஒரு பேரழகு. நான் வீட்டின் உள்ளேயோ, சமையலறையிலோ, படிக்கும் அறையிலோ, மச்சில் கணினி முன்போ இருந்தாலும் கொக்குகளின் இறக்கைகளை அடிக்கும் சத்தம், காக்கைகளின் சிறகசைக்கும் சத்தம், ஆந்தைகளின் அலறல் எல்லாவற்றையும் தெளிவாகப் பிரித்துணர்வேன். இப்படி எங்கள் தோட்டம் எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும்.

எங்கள் தோட்டத்துப் பூக்களின் வண்ணங்களில் மன மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பச்சையும், குளிர்ச்சியும் வாட்டம் போக்கி மனத்தை இதமாக்கும். சோர்வுறும்போது ஓங்கி வளர்ந்த மரங்கள் தெம்பு தரும். சலிப்பு ஏற்படும் போது புத்துணர்ச்சி தரும்.

இப்படியான தோட்டத்தை எவ்வளவுதான் நான் பராமரித்தாலும், சின்னச் செடிகள் தாயில்லாப் பிள்ளைகள் போலத்தான் வாடி நிற்கும். எல்லாம் வானம் சிறு தூறல் போடும் வரைதான்! பிறகு ஒரே கொண்டாட்டம்தான். அதனாலேயே விவசாயியைப் போல வானம் பார்த்தவள் ஆகிறேன் நான்!

இந்தப் பகுதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x