Published : 11 Dec 2015 10:54 AM
Last Updated : 11 Dec 2015 10:54 AM

நினைவுகளின் சிறகுகள்: எஸ்.வி.ரங்காராவ் - இந்த நகைகளைப் பிடியுங்கள்!

கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம்.’’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எவ்வளவோ நடிகர்களைப் பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்க முடியும். ஆனால், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர்கூட ரங்காராவை இதுவரை இமிடேட் செய்ததே கிடையாது. அவ்வளவு நுட்பமானவை அவரது நடிப்பின் பரிமாணங்கள்!

முதுமையைப் புறமுதுகிடச் செய்தவர்

அதிக படங்களில் அப்பா வேடங்களில் நடித்தார். ஆனாலும், இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது. தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப்படங்களில் 25 ஆண்டுகள் (1950-களில்,1960-களில்,1970-களின்முன்பகுதியில் ) வயதான, முதிய கதாபாத்திரங்களை நிறைய செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி. ரங்காராவ் அறுபது வயதைத் தன் வாழ்நாளில் கண்டதில்லை.1974-ல் அவர் மறைந்தபோது அவர் வயது56தான்.

தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்தவர். தெலுங்கு மக்கள் இவருக்கு ‘விசுவநாத சக்ரவர்த்தி' எனப் பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டத்தைத் தமிழ்ப் பட டைட்டில்களில் யாரும் பார்த்திருக்க முடியாது. அந்தக் காலத்திலேயே பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc. அது மட்டுமல்லாமல் நாடக மேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த ஷேக்ஸ்பீரியன் ஆக்டர்!

நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப்படங்களில் புராண கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார். ஒரு தெலுங்கு நடிகர் தமிழ்ப் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.

வலுவான திரை ஆளுமை

ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் தனது அபாரமான நடிப்பால் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார். ‘தேவதாஸ்’, ‘மிஸ்ஸியம்மா’ ஆரம்பித்து.

‘நானும் ஒரு பெண்’ படத்தில் மாமனார் - மருமகள் பாசத்துக்கு எடுத்துக்காட்டுபோல விஜயகுமாரியின் மாமனாராக ரங்காராவ் நடிப்பில் யதார்த்தம் வெகுவாக வெளிப்பட்டு நிற்கும். ‘கற்பகம்' படத்தில் ஜெமினி கணேஷின் மாமனாராக நடித்திருப்பார்.

திரைப்படங்களில் அப்பா வேடத்துக்கே தனி கவுரவத்தை ஏற்படுத்தியவர் எஸ்.வி.ரங்காராவ். அப்பா வேடம் மட்டுமல்ல, ‘கண்கண்ட தெய்வம்' படத்தில் சுப்பையாவின் 'அண்ணன் ' வேடம்! அதிலும் புடம்போட்ட தங்கமாகப் பளிச்சிட்டிருப்பார்.

புராண வேடங்களில் புலி!

‘பக்த பிரகலாதா', ‘நம் நாடு’ போன்ற படங்களில் அவர் ஏற்ற வில்லன் வேடங்கள் பார்ப்பவர்கள் வயிற்றைக் கலக்கும். ‘மாயா பஜார்’ படத்தில் கடோத்கஜனாக ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலில் ரங்காராவின் நடிப்பு தென்னிந்தியா முழுவதும் பிரபலம். ‘சபாஷ் மீனா’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘சர்வர் சுந்தரம்’ஆகிய படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை அற்புதமாகப் பிரகாசிக்கும்.

தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. ஆம்! ரங்காராவ் இயக்குநரும்கூட! இந்தோனேசியாவில் ஒரு திரைப்பட விழாவில் இவர் ‘நர்த்தன சாலா' என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார். மற்றபடி இந்திய அரசின் கவுரவம் எதுவும் இவருக்குக் கிடைத்ததில்லை. உலகின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.

ராதாவும் ரங்காராவும்

‘நானும் ஒரு பெண்’ (1963) படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்புக்கு எம்.ஆர். ராதா சரியான நேரத்தில் வந்து காத்திருந்து, கடைசியில் பொறுமை இழக்கிற நிலைக்கு வந்துவிட்டார். ரங்காராவ் தாமதமாக செட்டின் உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே கமென்ட் அடித்திருக்கிறார்

“கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு... ஒரு ஒழுங்கும் இல்ல. படாதபாடு படுத்துறான்.” ரங்காராவ் மனம் நொந்து இயக்குநரிடம் ''இன்றைக்கு விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங் வைத்து கிளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள். எனக்கு உடம்பு சரியில்லை. ஆனால் அதுபற்றிக் கவலையில்லை” என்று ரோஷத்தோடு சொல்லி அதன்படியே நடித்துக்கொடுத்தாராம்.

தாமதம் ஏன்?

‘பக்த பிரகலாதா’ (1967) படத்தில் இரண்யகசிபுவாக ரங்காராவ் நடித்தார். படப்பிடிப்புக்கு ரங்காராவ் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் மெய்யப்பச் செட்டியாரின் காதுக்குத் தகவல் போனது. செட்டியார் கோபமாகிவிட்டார். “நான் இன்று செட்டுக்கு வருகிறேன்” என்றவர் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் சொன்னது போல் ஆஜர் ஆனார். ரங்காராவுக்குச் சூட்சுமம் புரிந்துவிட்டது. புகார் செட்டியார்வரை சென்றுவிட்டது என்பதை உணர்ந்துகொண்டார். படப்பிடிப்பு இடைவேளையில் அவரே செட்டியாரிடம் வந்து அவர் அணிந்திருந்த கவச ஆபரணங்களையெல்லாம் கழற்றி விட்டுச் சொன்னார்,

“மிஸ்டர் செட்டியார்! இந்த நகைகளைப் பிடியுங்கள்.” செட்டியார் கையில் வாங்கியிருக்கிறார். சரியான கனம்! “இவ்வளவு கனமான நகைகளைப் போட்டுக்கொண்டு புராண வசனமும் பேசி எவ்வளவு நேரம் நான் நடிக்க முடியும், சொல்லுங்கள்! நான் வீட்டுக்குப் போன பின்னும் இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது” என்று சொல்ல, செட்டியார் பரிவுடன் சொன்னாராம் “நீங்கள் செய்தது சரிதான்.”

அந்தக் கால குணச்சித்திர நடிகர்கள் ரங்காராவ், பாலையா, எஸ்.வி.சுப்பையா மூவரும் முதுமையைக் காணாமல் மறைந்தார்கள். இவர்களுக்கு மூத்தவரான எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையைப் பார்த்துவிட்டு 72 வயதில் இறந்தார். இறக்கும்போது பாலையாவுக்கு 58 வயது. சுப்பையாவுக்கு 57 வயது.

உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தி நடித்தாலும் அளவை மீறாமல் நடித்த ரங்காராவுக்கு மாற்றாகக் குறிப்பிட யாருமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x