Published : 09 Apr 2021 03:12 am

Updated : 09 Apr 2021 10:44 am

 

Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 10:44 AM

நினைவில் இழையும் இசை: ‘அந்தப் பாட்டு வந்து 30 வருஷம் ஆச்சு!’

memorable-music
ஆதித்யன்

ஏப்ரல் 9, ஆதித்யன் பிறந்தநாள்

ஏ.ஆர்.ரஹ்மானின் வரவுக்குப் பின்னர் தமிழ்த் திரையிசை உலகம் வரித்துக்கொண்ட முக்கிய மாற்றம், அன்றைக்கு இசைத் துறையில் இருந்த பலரும் (இளையராஜாவைத் தவிர!) அவரது பாதிப்புக்குள்ளானதுதான். “தமிழ்த் திரையில் மட்டுமல்ல, வட நாட்டிலும் இப்போது ஒருவருடைய இசைப் பாணிதான் பின்பற்றப்படுகிறது” என்று ராஜாவே ஒப்புக்கொண்ட காலகட்டம் அது.


80-களின் இறுதியில், 90-களின் தொடக்கத்தில் அறிமுகமாகியிருந்த இசையமைப்பாளர்கள், ரஹ்மானின் பாணிக்குத் தாவியதன் மூலம் புத்தெழுச்சி பெற்றார்கள் எனலாம். சூஃபி, பஞ்சாபி பாங்ரா உட்பட பல்வேறு இசை வடிவங்களைத் தயக்கமின்றி தமிழுக்கு இறக்குமதி செய்தது அந்தக் காலகட்ட இசைத் தலைமுறை. அவர்களில் முக்கியமானவர் ஆதித்யன்.

சவுண்ட் இன்ஜினியராக இளையராஜா உள்ளிட்டோரிடம் பணிபுரிந்துவந்த ஆதித்யன், இசையமைப்பாளராக அவதாரமெடுத்தது ‘அமரன்’ படத்தில். புகழ்பெற்ற கதாசிரியரும் இயக்குநருமான ராஜேஷ்வர், ஆதித்யனின் இசைப் பயணத்துக்குத் தொடக்கப்புள்ளி வைத்தார். திரைப்படக் கல்லூரியில் ஒலிப்பதிவுத் துறையில் படித்துவந்த ஆதித்யன், இயக்குநரும் நடிகருமான லிவிங்ஸ்டனுடன் இணைந்து இசைக்குழு நடத்திவந்தவர் என்று ராஜேஷ்வர் பதிவுசெய்திருக்கிறார்.

மணிரத்னத்தின் ‘ரோஜா’ வெளியாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அமரன்’ படத்தில், ஏற்கெனவே பணியாற்றிய விஸ்வகுருவுக்கு மாற்றாகவே ஆதித்யன் உள்ளே வந்தார். இளையராஜாவின் கொடி உச்சத்தில் பறந்த காலத்தில், புதிய இசை, ஒலி வடிவங்கள் மூலம் ‘அமரன்’ ஆல்பம் கவனம் ஈர்த்தது. அந்தப் படத்தின் இசையில் ரஹ்மான், வித்யாசாகர் என திறமைசாலிகளின் பங்களிப்பும் இருந்தது.

ராஜேஷ்வர் இயக்கிய ‘சீவலப்பேரி பாண்டி’ திரைப்படம்தான் ஆதித்யனின் தனி முத்திரையானது. ‘ஒயிலா பாடும் பாட்டிலே’, ‘கிழக்குச் சிவக்கையிலே’ போன்ற பாடல்கள் துல்லியமும், விரிவும் கொண்ட கற்பனை வடிவங்களாக ரசிக்கவைத்தன. 90-களின் தொலைக்காட்சி நேயர்கள் பலரும் விரும்பிக் கேட்ட பாடல்களில் ‘ஒயிலா’வும் ஒன்று. வனம் சார்ந்த நிலப்பரப்பின் உட்கூறுகளை இசைக்கு இசைவாகக் கோத்துத் தந்திருந்தார் ஆதித்யன். ‘ரோஜா’வின் ‘சின்னச் சின்ன ஆசை’ வகையறா பட்டியலில் அடங்கும் பாடல் என்றாலும், தனது பிரத்யேக முத்திரையை அதில் பொதித்துவைத்தார். அதற்கு அவரது ஒலிப்பதிவு நுட்பமும் கைகொடுத்தது. ‘ஒயிலா’ பாடலின் தாக்கம் அவரது பிற பாடல்களிலும் எதிரொலித்தது.

தொடர்ந்து, ‘லக்கி மேன்’, ‘மாமன் மகள்’, ‘ஆசைத்தம்பி’, ‘அசுரன்’ என சில படங்களுக்கு இசையமைத்த ஆதித்யன், ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ படத்துடன் இசையமைப்புப் பணிகளிலிருந்து ஒதுங்கி, தொலைக் காட்சியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். எனினும், திரையுலகம் மீது அவருக்குப் புகார்கள் ஏதும் இருக்கவில்லை. ‘லக்கிமேன்’ படத்தின் ‘பலான பார்ட்டி’, ‘அசுரன்’ (1995) படத்தின் ‘வத்திக்குச்சி பத்திக்கிச்சு’, ‘மாமன் மகள்’ படத்தின் ‘சுப்கே சுப்கே’ போன்ற பாடல்களை ஆதித்யனுக்குள் இருந்த உற்சாக மனிதனின் இசை வெளிப்பாடுகளாகச் சொல்லலாம்.

தனியிசை ஆல்பம் முயற்சிகளிலும் அவர் இறங்கினார். ‘காதல் நேரம்’ என்கிற அவரது ஆல்பம், மைக்கேல் ஜாக்ஸன் உள்ளிட்ட மேற்கத்திய இசைக் கலைஞர்களின் பாதிப்பில் உருவானது. சவுண்ட் இன்ஜினியராக இருந்து இசையமைப்பாளராக ஆகிவிட்டாலும் ஒளிவட்டம் எதையும் ஆதித்யன் சுமந்து கொண்டிருக்கவில்லை. நகைச்சுவை உணர்வும் சுய எள்ளலும் அவரிடம் உயிர்ப்புடன் இருந்தன. ‘ஆதித்யன் கிச்சன்’ சமையல் நிகழ்ச்சியில் அது நன்றாகவே தெரிந்தது. காலம் ஏனோ அதிகக் காலம் நம்முடன் அவரை வாழவிடவில்லை.

புதிதாக உருவாகும் இசையமைப்பாளர்களுக்குத் தனது குரல் மூலம் ஆசி வழங்கிய எஸ்.பி.பி., ஆதித்யனையும் ஆசீர்வதித்திருந்தார். ‘அமர’னின் ‘வசந்தமே அருகில் வா’ பாடலிலிருந்தே அது தொடங்கிவிட்டது. வி.குமாரின் ‘மதனோற்சவம்’ பாடலின் தாக்கத்தில் ஆதித்யன் இசையமைத்த ‘அழகோவியம்’ அதன் ஒலிப்பதிவுக்காகவும் எஸ்.பி.பியின் குழையும் குரலுக்காகவும் இன்றும் ரசிக்கப்படுகிறது. ‘லக்கிமே’னில் எஸ்.பி.பி. - சுஜாதா குரல்களில் அற்புதமான இசைக் கலவை கொண்ட மெலடியாக ஆதித்யன் தந்த ‘யார் செய்த மாயம்’ பாடலையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

‘அமரன்’ தோல்விப்படம் என்றாலும் இன்றுவரை ‘வெத்தல போட்ட ஷோக்குல’ பாடல் நடிகர் கார்த்திக்கின் அடையாளமாகவே இருக்கிறது. பொதுக்கூட்டம் என்று அவர் வெளியில் வந்தாலே அந்தப் பாடலைப் பாடச் சொல்லி அன்புக் கட்டளைகள் எழும். சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட கார்த்திக்கிடம் ’வெத்தல போட்ட ஷோக்குல’ பாடலைப் பாடச் சொல்லி வற்புறுத்திய ரசிகனுக்கு வயது 20-க்குள்தான் இருக்கும். ஆதித்யன் என்ற இசையமைப்பாளர் தந்த பாடல் அது என்பது அந்த இளைஞனுக்குத் தெரிந்திருக்குமா? தெரியவில்லை. “அந்தப் பாட்டு வந்து 30 வருஷம் ஆச்சு” என்று சிரித்துக்கொண்டே பாடினார் கார்த்திக். பாடலுக்கு வயது உண்டா என்ன?

தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.inஅந்தப் பாட்டு30 வருஷம்நினைவில் இழையும் இசைMemorable musicதமிழ்த் திரையிசைஇசைத் துறை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x