Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM

டிங்குவிடம் கேளுங்கள்: சாமியாடுவது ஏன்?

கோயில்களில் சாமியாடுகிறார்களே அது உண்மையா, டிங்கு?

- ஜோதி பாலா, பத்தாம் வகுப்பு, புனித ஜான் மெட்ரிக். மேல்நிலை பள்ளி, மதுரை.

மன ரீதியான பிரச்சினைகள்தாம் இப்படிச் சாமியாடுவதில் கொண்டுவந்து விடுகின்றன. சிலருக்குக் குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்குத் தான் அங்கீகரிக்கப்படவிலை என்ற வருத்தம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்களுக்குள்ளேயே வருந்தி, மன அழுத்தத்துக்குச் சென்றுவிடுவார்கள். தான் ஒரு கருத்தைச் சொல்லும்போது மதிக்காதவர்கள், அதையே சாமி என்ற பெயரில் சொல்லும்போது பயத்துடன் கேட்டுக்கொள்வார்கள் என்பதால் சிலர் தங்களைச் சாமியாடிகளாக நினைத்துக்கொள்வார்கள். திருவிழா, திருமணம் போன்று மக்கள் கூடும் நேரத்தில் தன்னை ஒரு சாமியாடியாக வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

இப்படிச் சாமியாடும்போது, எல்லோரும் அவர் சொல்வதை பயபக்தியுடன் கேட்டுக்கொள்வார்கள். அவருக்கு மரியாதை கொடுப்பார்கள். அதைப் பார்த்து சாமியாடி மகிழ்ச்சியடைவார். இந்தச் சாமியாடிகளால் யாருக்கும் பெரிதாக எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதனால் அவர்கள் சொல்வதைப் பொருட்படுத்தவும் வேண்டியதில்லை, கிண்டல் செய்யவும் வேண்டியதில்லை. ஆனால், சாமி வருவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களிடம் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், ஜோதி பாலா.

கோஹினூர் வைரம் யாருக்குச் சொந்தமானது? அதை ஏன் இங்கிலாந்து ராணி எலிசபெத் இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை, டிங்கு?

- ர. புத்த பிரவீன், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

கோஹினூர் வைரம் இந்தியாவைச் சேர்ந்தது. அது பலரின் கைகளுக்குச் சென்றது. இந்தியா பிரிட்டனின் ஆட்சியில் இருந்தபோது, ராணி எலிசபெத்துக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வைரம் ராணியின் மகுடத்தில் இப்போது இருக்கிறது. பல கோடி மதிப்பு மிக்க இந்த வைரத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது தொலைந்த பொருளோ திருடப்பட்ட பொருளோ அல்ல. பரிசாகக் கொடுத்த பொருள். பரிசாகக் கொடுத்ததைத் திரும்ப கேட்கக் கூடாது என்று இந்திய நீதிமன்றம் கூறிவிட்டது, புத்த பிரவீன்.

கடல் நீல நிறமாக இருப்பதற்குக் காரணம் என்ன டிங்கு?

- எம். ரிதன்யா, 7-ம் வகுப்பு, பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி, கோவை.

வானம் நீல நிறமாக இருப்பதால், அது கடல் நீரில் பிரதிபலிக்கும்போது கடலும் நீல நிறமாகக் காட்சியளிப்பதாகப் பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அது உண்மையல்ல ரிதன்யா. சூரிய ஒளி தண்ணீர் மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுவதால், கடல் நீர் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது என்பதை சி.வி. ராமன் கண்டுபிடித்தார். இதுதான் ராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்காக ராமனுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

சூரிய ஒளி கடலைத் தாக்கும் போது, சிவப்பு போன்ற நீண்ட அலைநீளம் கொண்ட வண்ணங்களும், நீலம் போன்ற குறுகிய அலைநீளம் கொண்ட வண்ணங்களும் நீர்மூலக்கூறுகளால் வலுவாக உறிஞ்சப்படுகின்றன. இவற்றில் குறைந்த அலைநீளம் கொண்ட வண்ணங்கள் அதிக அளவில் சிதறடிக்கப்படுகின்றன. இதனால் கடல் நீர் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது. ஒரு கண்ணாடி டம்ளரில் உள்ள நீர் நிறமற்று இருக்கிறது. ஏனென்றால் ஒளியை உறிஞ்சுவதற்குப் போதுமான நீர்மூலக்கூறுகள் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x