Published : 09 Nov 2015 11:44 AM
Last Updated : 09 Nov 2015 11:44 AM

சீறிப் பாயும் ஸ்பெக்டர் ஸ்பெஷல் கார்

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அவருக்கு எத்தனை காதலிகள் என்று எண்ணுவது அத்தனை சுலபமான காரியமல்ல. தன்னைக் கொல்ல வரும் பெண் உளவாளியிடமும் காதல் மொழி பேசும் ‘விளையாட்டுப் பையன்’ அவர். அதேபோல், அவர் பயன்படுத்தும் வாகனங்கள், கைக்கடிகாரங்கள், துப்பாக்கிகள், காலணிகள் கணக்கற்றவை.

குறிப்பாக, கார்கள்! பிரம்மாண்டமான திரையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்குச் சீறிப் பாயும் கார்கள் நிறைந்தவை ஜேம்ஸ் பாண்ட் படங்கள். ‘ஆக்டோபஸி’ படத்தில் திடீரென்று, காரின் டயர்களைக் கழற்றிவிட்டு அதன் ரிம்களை வைத்து ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டிச் செல்வார் ஜேம்ஸ் பாண்டாக வரும் ரோஜர் மூர்.

‘தி ஸ்பை ஹூ லவ்டு மி’ படத்தில் நீரிலும் நிலத்திலும் செல்லும் படகுக் காரை ஓட்டிக்கொண்டு கடலுக்குள்ளிருந்து வெளியே வருவார் மூர். கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருப்பவர்கள் மிரண்டுபோய் பார்ப்பார்கள். பி.எம்.டபிள்யூ., பெண்ட்லி, ஆஸ்டின் மார்ட்டின், ரோல்ஸ் ராய்ஸ், செவர்லே என்று புகழ்பெற்ற பிராண்டுகளைச் சேர்ந்த வாகனங்களில் விதவிதமான சாகசங் களைச் செய்பவர் இந்த பிரிட்டிஷ் உளவாளி.

பிரம்மாண்ட செலவு!

ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்த ‘ஸ்பெக்டர்’ படம் அமெரிக்காவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் வரிசையின் 24-வது படம் இது. படத்தின் தொடக்கக் காட்சி, ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் போன்றவை படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன என்கிறார்கள் விமர்சகர்கள்.

இப்படத்தின் பட்ஜெட் 300 மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி). இதற்கு முன்னர், ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: அட் வேர்ல்ட்ஸ் எண்ட்’ படம்தான் இந்த அளவுக்குத் தாராளச் செலவில் தயாரானது! படத்தின் பிரதான வில்லன் பாத்திரத்தில் நடித்திருப்பவர் கிறிஸ்டோபர் வால்ட்ஸ். ஹாலிவுட்டின் முக்கியமான இயக்குநர் குவெண்டின் டாரண்டினோ இயக்கிய ‘இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’, ‘ஜாங்கோ அன்செயின்டு’ ஆகிய படங்களுக்காகச் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை (இரு முறை) வாங்கியவர் வால்ட்ஸ்.

பிரத்யேக கார்

இப்படத்தில், ஆஸ்டின் மார்ட்டின் டிபி-10 காரில் சீறிச் செல்கிறார் ஜேம்ஸ் பாண்ட். காரின் விலை 4.6 மில்லியன் டாலர் (ஏறத்தாழ ரூ. 30 கோடி). அவரைத் துரத்திச் செல்லும் வில்லன் ஓட்டிச் செல்லும் கார் ஜாகுவார் சி-எக்ஸ்75. இதன் விலை சற்று குறைவுதான்.

ஒரு மில்லியன் டாலர் (ரூ. 6.5 கோடி!). ஆஸ்டின் மார்ட்டின் டிபி-10 காரை இப்படத்துக்காகப் பிரத்யேகமாக வடிவமைத்துத் தந்திருக்கிறது அந்நிறு வனம். மொத்தமாக 10 கார்கள் இதற்கு முன்னர், ‘கோல்டுஃபிங்கர்’(1964), ‘ஆன் ஹெர் மெஜஸ்டி’(1969), ‘தி லிவிங் டே லைட்ஸ்’ (1987) போன்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் ஆஸ்டின் மார்ட்டின் கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை சந்தைக்கும் விற்பனைக்கு வந்துவிட்டன. ஆனால், இந்த கார் முழுக்க முழுக்க இப்படத்துக்காக பிரத்யேகமாக தயாரிக் கப்பட்டது என்பதுதான் விசேஷம்!

அதிநவீனம், படுவேகம்!

எடுத்த எடுப்பில், 4.7 வினாடிகளிலேயே 60 மைல் வேகமெடுக்கும் திறன் கொண்ட கார் ஆஸ்டின் மார்ட்டின் டிபி-10. மணிக்கு 190 மைல் தூரத்தைக் கடக்கும் பேய் வேகம் கொண்டது இது. 4.7 லிட்டர் வி.எஸ். என்ஜின் மற்றும் நீளமான வீல்-பேஸுடன் இந்தக் கார் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சுறா மீனின் முகத்தைப் போன்ற கூர்மையுடன் காற்றைக் கிழித்துக்கொண்டு சீறிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட் டிருக்கிறது.

இந்த கார் வடிவமைக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யத் தகவல் உண்டு. ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தப்போகும் கார் ரசிகர்களின் சிறப்பு கவனத்தைப் பெற வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் படத்தின் இயக்குநர் சாம் மெண்டிஸ். ஆஸ்டின் மார்ட்டின் கார் வடிவமைப்பாளர் மாரெக் ரெய்ச்மேனைக் கடந்த ஆண்டு சந்தித்த மெண்டிஸ், தனது விருப்பத்தை அவரிடம் சொன்னார். ரெய்ச்மேனும் ஆட்டோமொபைல் உலகின் அத்தனை நுணுக்கங்களையும் பயன்படுத்தி பல கார்களின் மாதிரிகளை வரைந்துகாட்டினார்.

மெண்டிஸுக்கு எதிலும் திருப்தி யில்லை. கடைசியில், அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த வடிவமைப்புதான் அவரை ஈர்த்தது. இரண்டே பேர் அமரக் கூடிய வகையில், மேற்சொன்ன சுறா முக வடிவமைப்பில் காரை உருவாக்கச் சொல்லிவிட்டுத் திருப்தியுடன் கிளம்பி விட்டார் மெண்டிஸ்.

உண்மையில், வெறும் ‘டிசைன் ஸ்கெட்ச்’சாகத்தான் அதை வரைந்து வைத்திருந்தார் ரெய்ச்மேன். ஜேம்ஸ் பாண்ட் பட இயக்குநர் சொல்லிவிட்டாரே! உலகமெங்கும் உள்ள ரசிகர்களைக் கவரும் வாய்ப்பாயிற்றே, விட முடியுமா! தனது குழுவினருடன் கடுமையாக உழைத்து இந்த காரை வடிவமைத்துத் தந்தார் ரெய்ச்மேன்.

ரோம் நகரின் டைபர் நதிக் கரையிலும், அந்நகரின் தெருக்களிலும் இந்த காரும், அதைத் துரத்திக்கொண்டு ஜாகுவார் சி-எக்ஸ்75 காரும் செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஜாகுவார் காரும் படு வேகத்தில் செல்லக்கூடியது. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 200 மைல் வேகத்தையும் தாண்டி இந்த கார் சென்றதாகச் சொல்கிறார்கள் படத் தயாரிப்புக் குழுவினர். ரோம் நகரில் நடந்த படப்பிடிப்பில், எட்டு ஆஸ்டின் மார்ட்டின் கார்கள், ஏழு ஜாகுவார் கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சண்டையில் கிழியாத சட்டைகள் இல்லைதான். எனினும், இந்தப் படத்தில் கிழிக்கப்பட்ட சட்டைகள், அதாவது சண்டைக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு சுக்குநூறான கார்களின் மதிப்பு கொஞ்சம் அதிகம்தான். 48 மில்லியன் டாலர்!

வெ. சந்திரமோகன்
chandramohan.v@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x