Last Updated : 15 Nov, 2015 12:49 PM

 

Published : 15 Nov 2015 12:49 PM
Last Updated : 15 Nov 2015 12:49 PM

பக்கத்து வீடு: நமக்குள் ஒளிந்திருக்கும் ஹீரோ!

அடர் வண்ணங்களில் சட்டென்று கவனத்தை ஈர்த்துவிடுகின்றன அந்த ஓவியங்கள். பெரும்பாலான ஓவியங்களில் பெண்களே பிரதானமாக இருக்கிறார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் வலி, வேதனை, சோகம், கவலை பிரதிபலிக்கின்றன. தன் வலிகளை எல்லாம் ஓவியங்களுக்குக் கடத்திவிட்டு, குளிர்ச்சியான புன்னகையுடன் வலம்வருகிறார் முனிபா மஸாரி. பாகிஸ்தானின் முக்கியமான ஓவியர்களில் ஒருவர். சமூக ஆர்வலர். எழுத்தாளர். தன்னம்பிக்கை பேச்சாளர்.

ஏன் இத்தனை வலி?

ஓர் இளம் பெண்ணின் படைப்புகளில் ஏன் இத்தனை வலி? திருமணமாகி சில காலமே ஆகியிருந்தது. முனிபா ஓவியக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். காரில் சென்றுகொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து நிகழ்ந்தது. மனிதர்கள் பிழைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்று சொன்னது நொறுங்கிப்போன காரின் தோற்றம். முனிபாவின் கால்களும் முதுகுத்தண்டும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தூக்கினர். லேசாக நினைவிருந்த முனிபா, தன் கால்கள் எங்கே என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். உணர்ச்சிகள் இன்றி, பாதி உடல் முடங்கிவிட்டது.

பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்களே நினைத்துக்கொண்டிருந்தபோது, அதிசயமாக உயிர் பிழைத்தார் முனிபா. அவரிடம் இனி வாழ்நாள் முழுவதும் நடக்க முடியாது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டனர். விபத்து நிகழ்ந்ததிலிருந்து நடக்க இயலாது என்ற செய்தி கேட்டதுவரை முனிபா ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடவில்லை. இரண்டு ஆண்டுகள் படுக்கையில் இருக்க நேரிட்டது. பல் துலக்க முடியாது, தலை முடியைச் சரி செய்ய முடியாது. கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

“மருத்துவமனை சுவர்கள், படுக்கை விரிப்பு, திரைச் சீலைகள் என்று எல்லாமே வெள்ளையாக இருந்தன. என் வாழ்வில் வண்ணங்கள் என்ற வசந்தம் இனி இல்லை என்பதைச் சொல்லிக்கொண்டிருந்தது போலத் தோன்றியது. இந்த இரண்டு ஆண்டுகளில் என் அப்பா எங்களை விட்டுச் சென்றுவிட்டார். கணவர் என்னை விவாகரத்து செய்துவிட்டார். பார்க்க வருகிறவர்கள் ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் என்னைக் காயப்படுத்தினார்கள். அம்மாவும் சகோதரர்களும் இல்லாவிட்டால் காணாமல் போயிருப்பேன். என் கை ஓரளவு இயங்க ஆரம்பித்தபோது, ஓவியம் பயின்றிருப்பதால் அதைத் தொடரச் சொன்னார்கள். ஒரு பேப்பரைத் தூக்குவதற்குக்கூட என் கைகள் நடுங்கின. அம்மாவும் மருத்துவர்களும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். என் வாழ்க்கை வண்ணமயமாக மாற ஆரம்பித்தது. என்ன ஆச்சரியம்… தூரிகையைத் தொட்டதுமே என் உடல் வலிகள் மட்டுமின்றி, மன வலிகளும் காணாமல் போய்விட்டன’’ என்கிறார் முனிபா.

வாழ்வில் வசந்தம்

முனிபா வரைந்து குவித்த ஓவியங்களை கண்காட்சியில் வைப்பதாகச் சொன்னார் அவருடைய சகோதரர். விளையாட்டுக்குச் சொல்வதாக நினைத்தார் முனிபா. ஓர் இணையதளத்தில் எழுதும் வேலை கிடைத்தது.

“உன்னுடைய நாற்காலியின் சக்கரங்கள் சுழலப் போகின்றன. இனிமேல் யாரும் உன்னைத் தடுத்து நிறுத்த முடியாது. சக்கர நாற்காலி பெண்கள் ஒவ்வொருவரும் உன்னைத் தொடர்ந்து வருவார்கள். சமூகக் கட்டுப்பாடுகளை நீ உடைத்தெறிய வேண்டும்’’ என்று சகோதர்கள் வாழ்த்தினார்கள்.

முனிபா வேலை செய்த இணையதளமே அவரது 25 ஓவியங்களை வாங்கிக்கொண்டது. வலியை வெளிப்படுத்தும் ஓவியங்களாக இருந்தாலும் மனத்துக்குள் உத்வேகம் பிறக்கிறது என்றும் ஓவியம் தீட்டுவதை வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். வேலையும் ஓவியங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமும் முனிபாவை வாழ்க்கையின் மீது நம்பிக்கைகொள்ள வைத்தன. நாளுக்கு நாள் அவரது மன உறுதி அதிகரித்துக்கொண்டே வந்தது. முனிபாவின் ஓவியங்களையும் பேச்சையும் கேட்டவர்கள், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் பேசுவதற்கு அழைத்தனர். அந்த வேலையையும் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார் முனிபா.

தன்னம்பிக்கை பேச்சு

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான பெஷாவர் பள்ளியில், ஒரு மாதத்துக்குப் பிறகு பேசச் சென்றார் முனிபா. குழந்தைகளும் பெற்றோர்களும் தங்கள் கவலைகளில் இருந்து மீண்டனர். வாழ்க்கை மீது நம்பிக்கை கொண்டனர்.

“நான் அல்லாவிடம் எனக்கு ஏன் இந்த நிலை என்று ஒருநாளும் கேட்டதில்லை. எனக்குக் கொடுத்திருக்கும் வலிகளை எல்லாம் நான் தாங்கிக்கொண்டால், எனக்கு ஏதோ பெரிய நல்லதைக் கொடுப்பார் என்று நம்புகிறேன். அதனால் வரக்கூடிய நிகழ்வுகளைத் தைரியமாக எதிர்கொள்ளப் பழகிக் கொண்டேன். எனக்கு விபத்து நடக்காமல் இருந்திருந்தால் கோடியில் ஒருத்தியாக வீடு, குடும்பம் என்று வாழ்ந்துகொண்டிருப்பேன்.

ஆனால் இன்று பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ரோல் மாடலாக மாறியிருக்கிறேன். நம்மைத் தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படித்தான் மூன்று வேலைகளை நான் ஒரே நேரத்தில் செய்துகொண்டிருந்தேன். விபத்தைக் காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கியிருந்தால் என் வாழ்க்கையே கொடுமையாக இருந்திருக்கும். நான் அழகாக இருக்கிறேன், நன்றாக ஆடை அணிகிறேன், பணக்காரி என்பதால்தான் முன்னேறிவிட்டேன் என்று சிலர் நினைக்கிறார்கள்.

நானும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். கடந்த ஏழு ஆண்டுகளில் கால்களை இழந்திருக்கிறேன், உறவுகளை இழந்திருக்கிறேன், என் அம்மா தனியாக இருந்துதான் என்னை இவ்வளவு தூரம் உயர்த்தியிருக்கிறார். கடின உழைப்பு மூலம் நம் அத்தனை கஷ்டங்களையும் மாற்றிவிட முடியும்’’ என்று ஒவ்வோர் இடத்திலும் முனிபா உரையாற்றும்போது பெண்கள் ஓடிவந்து கட்டிப் பிடித்துக்கொள்கிறார்கள். தங்கள் பிரச்சினைகள் அனைத்தும் காணாமல் போய்விட்டதாகச் சொல்கிறார்கள்.

குவியும் வாய்ப்புகள்!

கால்களை இழந்த ஒருவர், மாடலிங் துறையில் கால் பதித்த சாதனையையும் நிகழ்த்திவிட்டார் முனிபா. மாடல், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று அவரது வேலைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

“நான் பேசக்கூடிய இடங்களிலோ, அடுத்தவர்கள் முன்போ அழுததே இல்லை. ஆனால் ஒவ்வொரு நாள் இரவும் அழாமல் இருந்ததே இல்லை. இந்த அழுகை எனக்கான அழுகை இல்லை. வலியோடு போராடும் மக்களைக் கண்டு அழுகிறேன். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற முடியாதவர்களைக் கண்டு அழுகிறேன். என்னால் உதவி செய்ய இயலாதவர்களைக் கண்டு அழுகிறேன்.

வாழ்க்கையில் யார் உதவியும் இன்றி ஆதரவற்று நிற்பவர்களுக்காக அழுகிறேன். என் அழுகைக்காக கடவுள் இரங்குவார் என்று நம்புகிறேன். ஹீரோக்களை வெளியே தேடாதீர்கள், நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஹீரோ ஒளிந்துகொண்டிருக்கிறார்!’’ என்கிறார் முனிபா மஸாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x