Last Updated : 02 Nov, 2015 09:57 AM

 

Published : 02 Nov 2015 09:57 AM
Last Updated : 02 Nov 2015 09:57 AM

இது ஸ்கூட்டர்களின் காலம்!

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை என்ற பாடல் வரிகளை இப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றினால், ஸ்கூட்டர்களை விரும்பாத பெண்களே இல்லை என்று பாட வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு கல்லூரிக்குச் செல்லும் இளைஞிகள், வேலைக்குச் செல்லும் பெண்களின் விருப்பத் தேர்வாக உள்ளது ஸ்கூட்டர்.

ஸ்கூட்டர் என்றாலே அந்தக் கால லாம்ரெட்டா, விஜய் ஸ்கூட்டர், பஜாஜ் வெஸ்பா ஸ்கூட்டர்களை நினைக்க வேண்டாம். அந்தக் கால ஸ்கூட்டர்களை சற்று நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு முறை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றாலும் ஸ்கூட்டரை சாய்த்து, நிமிர்த்தி என அதோடு போராடாமல் பயணிக்கவே முடியாது. இதனாலேயே 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கூட்டர்கள் ஆண்களுக்கான வாகனமாகக் கருதப்பட்டது.

மேலும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் பஞ்சர் ஆனால் அதை சரி செய்ய போதிய வசதி இல்லாத காலத்தில் ஸ்டெப்னியோடு கூடிய ஸ்கூட்டர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனாலும் அதன் எடை, உதைத்துத்தான் ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்ற நிலையால் ஸ்கூட்டர்களை பெண்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை.

ஆண்களை மட்டுமே நம்பியிருக்கும் பொருள் தயாரிப்பு மூலம் நீண்ட நாள் காலந்தள்ள முடியாது என்ற நெருக்கடி ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களை உந்தித் தள்ளியது.

ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறையிலும் பெண்களும் முன்னேறத் தொடங்கிய காலத்தில் ஸ்கூட்டர்களும் பெண்களின் ரசனை மற்றும் எளிதான இயக்கத்துக்கு ஏற்ற வகையில் நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கின.

பெண்களின் விருப்பத்திற்கேற்ப இலகு ரக அதாவது எடை குறைந்த அதேசயம் செல்ப் ஸ்டார்ட்டர்களைக் கொண்ட ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வரத் தொடங்கின.

முதன் முதலில் கைனெடிக் நிறுவனத்துடன் இணைந்து ஹோண்டா நிறுவனம் தயாரித்த கைனடிக் ஹோண்டா பெண்களின் தேர்வானது.

இவற்றைத் தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி, பஜாஜ் நிறுவனத்தின் சன்னி ஆகியன வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி யுவதிகளின் தேர்வாக அமைந்தது.

பெண்கள் ஸ்கூட்டர்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்ததால், ஆண்கள் படிப்படியாக மோட்டார் சைக்கிளுக்குத் தாவத் தொடங்கினர். சர், சர்ரென்று சீறிப் பாயும் பல்ஸர், யமஹா ஆகியன இளைஞர்களின் தேர்வாக அமைந்தது.

மைலேஜ் மட்டுமே போதும் என்கிற அலுவலகம் செல்லும் ஆண்களின் தேர்வாக ஸ்பிளெண்டர் இருந்தது.

இந்த காலகட்டத்தில்தான் பெரு மளவில் ஸ்கூட்டர்களைத் தயாரித்து வந்த பஜாஜ் நிறுவனம் 1990 களின் பிற்பாதியில் ஸ்கூட்டர் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்தது.

ஸ்கூட்டர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட சூழலில் இந்திய கூட்டாளிகளிடமிருந்து பிரிந்த ஜப்பானிய நிறுவனங்கள் மீண்டும் சந்தையில் ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தத் தொடங்கின.

ஆண்களுக்கான வாகனமாக மாறிய மோட்டார் சைக்கிள்களின் வேகம், ஸ்டைல் மற்றும் லைலேஜுகளைப் போல, பெண்களுக்கான வாகனமாக மாறிய ஸ்கூட்டர்களிலும் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

இதற்கேற்ப ஹோண்டா நிறுவ னத்தின் ``ஆக்டிவா’’, சுஸூகியின் ``ஆக்ஸஸ்’’, யமஹாவின் ``ரே’’ ஆகியவற்றோடு உயர் ரக பிரிவில் இத்தாலியின் பியாஜியோ நிறுவ னத்தின் வெஸ்பாவும் பெண்களைக் கவரும் வாகனமான மாறியது.

சிக்னலில் நின்று புறப்படும்போது, ஆண்களின் மோட்டார் சைக்கிள் புறப்படும் நேரத்தைக் காட்டிலும் விருட்டென்று சீறிப் பாய்ந்து செல்கிறது பெண்களின் ஸ்கூட்டர்கள். அந்த அளவுக்கு அதிக செயல்திறன், இலகுவாக இயக்குவது ஆகியன சாதகமான அம்சங்களாகிவிட்டன.

இப்போது மூன்று இரு சக்கர வாகனங்கள் சாலையில் செல்கிற தென்றால் அதில் ஒன்று ஸ்கூட்டராக உள்ளது. 2005-ம் ஆண்டில் ஸ்கூட் டர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இது 28 சதவீதமாக அதிகரித்துள் ளது.

இதே காலத்தில் மோட்டார் சைக்கிளின் உபயோகம் 82 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

பெண்களின் தேர்வாக மட்டுமே ஸ்கூட்டர்கள் உள்ளன என்று கூறிவிட முடியாது. நகரத்தின் வாகன நெரி சலில் கிளட்சைப் பிடித்து, கியரை மாற்றி, ஆக்சிலேட்டரைக் கொடுத்து என அனிச்சையான செயல்களின் நொந்து போன 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் தற்போது கியர் இல்லாத ஸ்கூட்டர்களை நாடுகின்ற னர்.

மோட்டார் சைக்கிள் விற்பனை சரிந்து ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

2005-ம் ஆண்டில் ஸ்கூட்டர்களின் புழக்கம் 9 லட்சமாக இருந்தது. இது தற்போது 45 லட்சமாக அதிகரித் துள்ளதிலிருந்தே ஸ்கூட்டருக்கு மீண்டும் மவுசு அதிகரித்து வருகிற தென்பதை சொல்லத் தேவையில் லை.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x