Last Updated : 17 Feb, 2021 03:12 AM

 

Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

மாய உலகம்: ஒரு சிறுமியின் கொக்குகள்

ஓவியம்: லலிதா

வெள்ளை நிற அறை ஒன்றில் கால்களை நீட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு என்ன ஆகிவிட்டது என்று தெரியவில்லை. ஒன்றுமில்லை சடாகோ என்று அம்மா வந்து, வந்து தலையைத் தடவிக் கொடுக்கிறார். கவலைப்படாதே சடாகோ, விரைவில் நீ வீட்டுக்கு வந்துவிடலாம் என்கிறார் அப்பா.

நண்பர்களும் உறவினர்களும் இனிப்பு, பொம்மை, வாழ்த்து அட்டை என்று என் கையைப் பிரித்துத் திணித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் புறப்பட்ட பிறகு மீண்டும் உடல் வலிக்கிறது. எத்தனை பேர், எத்தனை முறை ஆறுதல் சொன்னாலும், எத்தனை இரவுகள் உறங்கி, உறங்கி எழுந்தாலும் இந்த அறையிலிருந்து மட்டும் ஏனோ என்னால் வெளியேறவே முடியவில்லை.

எல்லாவற்றுக்கும் காரணம் ஒரு பூ. நீல வானிலிருந்து ஒரு நாள் கீழே, கீழே அது இறங்கி வந்தது. என்னைப் பார்த்துதான் அது இறங்குகிறதோ, என்னிடம்தான் வருகிறதோ என்று நினைத்து இரு கைகளையும் விரித்து ஜன்னலுக்கு அருகே ஓடினேன். மெத்தென்று என் கைகளுக்குள் பூ வந்து அடங்கிவிடும் என்று நினைத்தேன். ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் வெட்டியது போல் வெளிச்சம். ‘பூம்’ என்று சத்தம். நானும் இணைந்து உற்சாகமாகக் கூச்சலிட்டேன். அவ்வளவுதான் தெரியும் எனக்கு.

கண் விழித்தால் இதே போன்ற ஒரு வெள்ளை அறை. பூ எங்கே விழுந்தது அம்மா என்று கேட்டபோது குழந்தை போல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் அம்மா. அது பூ இல்லையாம். ஹிரோஷிமாவில் ஒன்றும் நாகசாகியில் ஒன்றுமாக வந்து விழுந்த அணுகுண்டாம். அது என்ன செய்யும் என்று கேட்டபோது அம்மாவிடம் சொற்கள் இல்லை.

நானே கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொண்டேன். அணுகுண்டுக்குக் கண்கள் இல்லை. யார் மீது வந்து விழப் போகிறோமோ, யாரை அழிக்கப் போகிறோமோ அவர்களை அது ஒருமுறைகூடப் பார்ப்பதில்லை. அணுகுண்டு சிந்திப்பதில்லை. போய் விழு என்றால் விழுகிறது. வெடி என்றால் வெடிக்கிறது. அணுகுண்டுக்கு வாய் இல்லை. பெரும் பாவம், நான் செய்ய மாட்டேன் என்று அது எதிர்க்காது. அணுகுண்டுக்கு இதயம் கிடையாது. ஐயோ, பேரழிவை ஏற்படுத்திவிட்டோமே என்று அது கலங்காது.

இருந்தும், அணுகுண்டு அழிக்கவில்லை என் நாட்டை. அணுகுண்டு கொல்லவில்லை என் மக்களை. அணுகுண்டு அல்ல என் அச்சம். எதையும் உணராத, எதற்கும் கலங்காத, எது குறித்தும் வருந்தாத ஓர் அணுகுண்டு என்ன செய்துவிட முடியும் நம்மை? அப்படி ஒரு குண்டை உருவாக்கிய மனிதனைக் கண்டே நான் அஞ்சுகிறேன்.

அப்படி ஒரு மனிதன் இந்த உலகில் எங்கோ இருக்கிறான் என்று நினைக்கும்போது எல்லாம் என் உடல் வலியில் துடிக்கிறது. ஒரு நகரையே அழிக்கும் குண்டை உருவாக்க வேண்டும் என்றால் அந்த மனிதன் எவ்வளவு வெறுப்பை, எவ்வளவு கோபத்தை, எவ்வளவு பகையைத் தன் இதயத்தில் சுமந்துகொண்டிருக்க வேண்டும்?

உடலிலிருந்து வலி என் மனத்தை வந்தடைந்த தருணத்தில் என் வாழ்க்கைக்குள் நுழைந்தது கொக்கு. ‘சடாகோ, இந்தா காகிதம். மடித்து, மடித்து ஆயிரம் கொக்குகளை உருவாக்கு. எல்லா வலியும் மறைந்து நீ நலமடைந்துவிடுவாய்’ என்றார்கள். அப்படியா அப்பா என்றபோது, ‘ஆம், கொக்கு புனிதமானது. ஒருபோதும் அது உன்னை ஏமாற்றாது’ என்றார் அப்பா.

போர்வையை வீசி எறிந்துவிட்டு உற்சாகத்தோடு காகிதத்தைக் கையில் எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். கிழிக்காமல், கத்தரிக்காமல், காகிதத்துக்கு வலிக்காமல் மடித்து, மடித்து கொக்குகளை உருவாக்கத் தொடங்கினேன். ஒன்று, இரண்டு, மூன்று என்று கொக்குகள் வளர்ந்துகொண்டே போயின.

படுக்கை, தலையணை, மேஜை, அறையின் மூலை என்று திரும்பும் பக்கம் எல்லாம் நூற்றுக்கணக்கான கொக்குகள். அமைதியாக, மிருதுவாகக் குதித்து, குதித்து வந்து என் காதோடு கதைகள் பேச ஆரம்பித்தன. இதோ, மாத்திரை மடித்துக் கொடுத்த காகிதத்திலிருந்து வந்த இந்தக் கொக்கு அளவில் சின்னதாக இருந்தாலும் அழகில் குறையிருக்கிறதா, பாருங்கள்! இனி பழமோ இனிப்போ வேண்டாம், காகிதம் கொண்டு வாருங்கள் நண்பர்களே என்றுதான் எல்லோரிடமும் வேண்டி, வேண்டி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

உரிமையோடு உங்களையும் கேட்பேன். சடாகோ சசாகிக்காக நீங்களும் ஒரு கொக்கு செய்வீர்களா? என் அருகில் வந்து அமருங்கள். ஒரு மனிதனை நேசிக்கும் திறனை எப்போதெல்லாம் இழக்கிறோமோ அப்போதெல்லாம் ஒரு கொக்கை உருவாக்குவோம். தனிமை சூழும்போதெல்லாம், உடலும் மனமும் வாடும்போதெல்லாம், எதிர்காலம் இருளும்போதெல்லாம் கொக்குகளை உருவாக்குவோம். நம் கொக்குகளை ஒரே நேரத்தில் வானத்தில் பறக்கவிடுவோம். அச்சச்சோ, என் நீலம் எங்கே என்று வானம் திகைக்கும் அளவுக்கு வெண்கொக்குகளால் வானத்தை நிறைப்போம்.

என் கையில் இருக்கும்வரைதான் அது சடாகோவின் கொக்கு. பறக்க ஆரம்பித்துவிட்டால் என் கொக்குக்கும் உங்கள் கொக்குக்கும் எந்த வேறுபாடும் இல்லை. என்னை உருவாக்கியவர் யார், அவர் வெள்ளையா கறுப்பா, ஆணா பெண்ணா, ஜப்பானியரா, இந்தியரா, ஆப்பிரிக்கரா என்று எல்லாம் கொக்கு யோசிக்காது. அது ஒரு கொக்கு. அனைத்தையும் கடந்து, அனைத்தையும்விட்டு விலகி மேலே மேலே உயர்வதுதான் அதன் இயல்பு.

ஏன் சடாகோ நீதான் ஆயிரம் கொக்குகளை அறை முழுக்க உருவாக்கி வைத்திருக்கிறாயே, பிறகேன் இன்னமும் செய்துகொண்டிருக்கிறாய், என்னையும் வேறு ஏன் அழைக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கொக்குகள் எனக்கானவை அல்ல. எல்லா நோய்களில் இருந்தும் அணுகுண்டு மனிதன் விடுபட வேண்டும். பகை மறந்து, வெறுப்பு மறந்து, போர் மறந்து முழுநலன் பெற வேண்டும்.

என் சிறிய உடல் மீள்வதற்கு ஆயிரம் கொக்குகள் வேண்டும் என்றால் அந்தப் பெரிய மனிதனுக்கு எத்தனை கொக்குகள் வேண்டும்? அவ்வளவு கொக்குகளைத் தனியாக என்னால் உருவாக்க முடியுமா? அதனால்தான் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். ஒரே ஒரு கொக்கு செய்து தர முடியுமா எனக்கு?

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x