Last Updated : 13 Nov, 2015 01:47 PM

 

Published : 13 Nov 2015 01:47 PM
Last Updated : 13 Nov 2015 01:47 PM

ஐ.டி. உலகம் 23: பதவி உயர்வு ‘பலிகடாக்கள்!

திறமையும் தகுதியும் இருந்தால் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைப்பதுதான் பதவி உயர்வு. ஆனால், ஐ.டி. துறையில் நடுத்தரப் பதவிகளில் உள்ளவர்கள், தாங்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்காகப் புதியவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் கோரம் ஐ.டி.யில் சர்வசாதாரணம்.

தனியார் துறைகளிலேயே சிறியவர்கள் உடனடியாக உயர் பதவிக்கு வர முடியும் என்று சொல்லப்படுவதில் ஐ.டி. துறை முதன்மையாக இருந்துவருகிறது. ஆனால், இந்தப் பதவி உயர்வு என்பது சரியான நெறிமுறைகளைப் பின்பற்றி வழங்கப்படாததால், டீம் லீடர், ஜுனியர் மேனேஜர், சீனியர் மேனேஜர் போன்ற நடுத்தரப் பதவிகளில் இருக்கும் பலர் தங்களிடம் உள்ள ஜுனியர்களைக் கசக்கிப் பிழிவதாகக் கூறப்படுகிறது.

ஒருவர் புதிதாக வேலைக்குச் சேர்ந்ததும் அவருக்கு ‘ட்ரெயினி இன்ஜினியர்' பொறுப்பு வழங்கப்படும். முதலில் அந்த நபருக்கான பயிற்சிகள் வழங்கப்பட்ட பிறகு ஏதாவது புராஜக்ட்டில் அந்த நபர்கள் அமர்த்தப்படுவார்கள். ஒரு புராஜக்ட் ஆரம்பிக்கப்படுகிறபோது அதற்கு மேனேஜர், டீம் லீடர் மட்டும்தான் இருப்பார்கள். பிறகுதான் வேறு சிலர் அந்த புராஜக்ட்டுக்கான பணிகளில் நியமிக்க‌ப்படுவார்கள்.

டீம் லீடருக்கு அந்த நபர்களை ஒருங்கிணைப்பது மட்டும்தான் வேலை. மேனேஜருக்கு அலுவலகத்தில் நடப்பவற்றை நிர்வாகத்திடம் அவ்வப்போது ரிப்போர்ட் செய்யும் பணி. எனினும் புராஜக்ட்டுக்காக உழைப்பவர்கள் கருப்பா, சிவப்பா என்று அந்த மேனேஜருக்குத் தெரியாது. ஆனாலும், புராஜக்ட் முடிகிற நேரத்தில் ஏதாவது குறை சொல்லுவார். கிளையண்டே புராஜக்ட்டை ஏற்றுக்கொண்டாலும், ‘இதில் மைனர் மிஸ்டேக் இருக்கு, பட் இஷ்யூஸ் பெருசா இருக்கும்’ என்று ஒரு குழப்பு குழப்பிவிடுவார்கள். நன்றாகத்தானே செய்தோம் பிறகேன் அவர் இப்படிச் சொல்கிறார் என்று குழுவில் பணியாற்றுபவர்கள் குழம்பிப் போவார்கள்.

இது தொடர்பாக அறிவுசார் பணியாளரள் கூட்டமைப்பைச் சேர்ந்த அருண் நம்மிடம் கூறிய விஷயங்கள் ஐ.டி. நிறுவனங்களின் பதவி உயர்வு அம்சங்களால் பாதிக்கப்படும் புதியவர்களின் நிலையை விளக்குகிறது.

"ஐ.டி. துறையில் நடுத்தரமான பதவிகளில் இருப்பவர்கள் ஓரளவு சம்பளம் பெறுவார்கள். அதை வைத்து அப்போதுதான் திருமணம் செய்வது, வீடு வாங்குவது போன்ற வேலைகளை வங்கிக் கடனுடன் செய்து முடித்திருப்பார்கள். அத‌னால், அவர்களின் சம்பளத்தின் பெரும்பகுதி இஎம்ஐ-யில் கரைந்துவிடும். எனவே, அவர்களின் பொருளாதாரத் தேவைகள் அதிகரிக்கும். அப்போதுதான் அவர்கள் பதவி உயர்வுக்கு ஆசைப்படுவார்கள். அதுதான் அவர்களை அடுத்தவரின் தூக்கத்தைக் கெடுக்க வைக்கிறது" என்கிறார்.

மேலும், ஒருவர் நன்றாகப் பணி செய்தால் அவருக்கு உடனடியாகப் பதவி உயர்வு கிடைக்காதாம். ஒரு புராஜக்ட்டை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தால், ‘கங்கிராட்ஸ்' சொல்வதுடன் பாஸ் விலகிக் கொள்வாராம். அதுவே, கிளையண்ட் குறை என்று சொல்லி அதனைப் பணியாட்கள் சரிசெய்து கொடுத்தால், அப்போது அந்த மேனேஜருக்கு நிச்சயம் பதவி உயர்வு கிடைக்குமாம்.

இந்த விஷயத்துக்காகவே கிளையண்ட்டுகளிடம் மேனேஜர்களே புராஜக்ட்டில் பிரச்சினை இருக்கிறது என்று சொல்லிவிடுவார்களாம். உடனே பிரச்சினை பாஸுக்குப் போகும், பாஸ் டீம் லீடரை அவர் அழைத்துப் பேசுவார். அவர் பணியாளர்களைக் கத்துவார், காய்ச்சல் இல்லாதவருக்கு பாராசிட்டாமல் கொடுப்பது போல், நன்றாக‌ இருக்கிற புராஜக்ட்டை மேலும் பட்டி டிங்கரிங் பார்த்துக் கொடுப்பார்களாம் பணியாட்கள்.

அப்போது, ‘சார், கிளையண்ட்டின் தேவைகள் அனைத்தையும் நமது புராஜக்ட் பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளது. மிகவும் சிரமப்பட்டேன்' என்று மேனேஜரிடமிருந்து பாஸுக்கு ஒரு மின்னஞ்சல் போகும். அந்த மின்னஞ்சலில் நான்தான், என்னால்தான் போன்ற வார்த்தைகள் மிகுதியாய் இருக்கும். இப்படி வெளியில் எக்ஸ்போஸ் ஆகும் போதுதான், நடுத்தரப் பதவிகளில் இருப்பவர்கள் உயர் பதவிக்குச் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

இதே போன்றொரு பிரச்சினையில் தான் சிக்கிய‌ அனுபவத்தை ஆனந்த் என்னும் ஊழியர் கூறுகிறார். "நான் போரூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நான் ஜுனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருந்த போது மருத்துவமனை ஒன்றுக்காக ஒரு சாஃப்ட்வேரை வடிவமைத்தோம். அது மருத்துவமனைக்கானது என்று பார்த்துப் பார்த்து அதனை உருவாக்கினோம். மருத்துவமனை நிர்வாகத்துக்கு அதில் பரம திருப்தி. ஆனால், அந்த சாஃப்ட்வேர் நன்றாக வந்ததில் ஒரேயொரு ஆளுக்கு மட்டும் வயிற்றெரிச்சல். அவர்தான் எங்களது சீனியர் மேனேஜர்.

கிளையண்ட்டை வரவழைத்து ஏதேதோ பேசினார். ‘என்னப்பா அந்த மாட்யூல்ல ஏதோ பிரச்சினையாமே இதச் சொல்ல மாட்டீங்களா' என்று கிளையண்ட் தரப்பிலிருந்து எங்களுக்குப் பதில் வந்தது. மீண்டும் சோதித்தோம். புராஜக்ட் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், நிர்வாகத்திடம் கவனம் பெறுவதற்காகவும், தன்னை நேர்மையான அதிகாரி என்று காட்டிக்கொண்டு பதவி உயர்வைப் பெறுவதற்காகவும் எங்கள் சீனியர் மேனேஜர் போட்ட நாடகம்தான் அது என்று பின்னாளில்தான் எங்களுக்குப் புரிந்தது" என்கிறார்.

சம்பள விஷயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஐ.டி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு உபதேசங்களை வழங்க ஆரம்பித்துள்ளது. இதன் பயனாக இனி வரும் காலங்களில் ஐ.டி. ஊழியர்களுக்கும் போனஸ் போன்ற சலுகைகள் கிடைக்கும் அறிகுறி தெரிகிறது. இந்தச் சூழலில் பதவி உயர்வு போன்றவற்றுக்குச் சரியான நெறிமுறைகளை அரசே கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஊழியர்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x