Published : 13 Oct 2015 10:40 am

Updated : 13 Oct 2015 10:40 am

 

Published : 13 Oct 2015 10:40 AM
Last Updated : 13 Oct 2015 10:40 AM

ஆங்கிலம் அறிவோமே - 79: நாற்காலியும் புகைவண்டியும் காரணப் பெயர்களும்

79

சில வாசகர்கள் me, mine, I, my, myself ஆகிய வார்த்தைகள் குழப்பமளிக்கின்றன என்று அவ்வப்போது குறிப்பிடுகிறார்கள்.

முதலில் எப்போது I அல்லது me வரும் என்பதைப் பார்ப்போம். இந்த இரண்டில் ஒன்று இடம்பெறும் ஒரு வாக்கியத்தைப் பார்ப்போம். இதுபோன்ற வாக்கியங்களில் ஒரு செயலைச் செய்யும் நபர் Subject. அந்தச் செயலுக்கான விளைவைப் பெறும் அல்லது உள்வாங்கும் நபர் Object.


I அல்லது me. இந்த இரண்டில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டுமென்றால் Subject ஆக இருந்தால் I என்பதையும், Object ஆக இருந்தால் me என்பதையும் பயன்படுத்துங்கள்.

I gave Ram a computer.

Ram gave me a computer.

Gopu and I made a suggestion.

My, mine ஆகிய இரண்டில் எதைப் பயன்படுத்துவது என்று சந்தேகம் வந்தால், தொடர்புள்ள வார்த்தைக்கு முன்னால் என்றால் My என்பதைப் பயன்படுத்துங்கள். தொடர்புள்ள வார்த்தைக்குப் பின்னால் என்றால் mine என்பதைப் பயன்படுத்தவும்.

Murali is my friend.

Murali is a friend of mine.

This is my cellphone.

This cellphone is mine.

Myself என்பதை இரண்டு விதங்களில் பயன்படுத்துகிறோம். ஒன்று நான் என்பதற்கு அழுத்தம் கொடுக்கும்போது. I constructed this house myself. I know she was at that school because I saw her there myself.

Subject, Object இரண்டுமே ‘நான்’ என்பதாக இருக்கும்போது myself என்பதைப் பயன்படுத்துகிறோம்.

I hit myself with a stick.

தோராயமாக இப்படிச் சொல்லலாம். I என்றால் நான். Me என்றால் எனக்கு. My என்றால் என்னுடைய. Myself என்றால் நானே.

நான் வருவேன்

I shall come

எனக்கு ஒரு பேனாவைக் கொடு

Give me a pen.

இது என்னுடைய வீடு.

This is my house.

இந்த வேலையை நானேதான் செய்தேன்.

I did the work myself.

தெளிவு கிடைத்துவிட்டதா என்பதைக் கீழே உள்ள வாக்கியங்களில் கோடிட்ட இடங்களில் எந்த வார்த்தையைப் பயன்படுத்துவீர்கள் என்பதைக் கொண்டு இதை உறுதி செய்துகொள்ளலாம்.

I, My, Me, Mine ஆகியவற்றில் ஒரு வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

1. Irfan and ________ disagree.

2. He sent a letter to ________ and his father.

3.A good friend of ________ joined us for a dinner.

4.______ shirt has two pockets.

5.I can do it _______.

6.Are you speaking to _______?

பதில்கள்:

1-I

2-Me

3-Mine

4-My

5-Myself

6-Me

எதனால்

சில ஒப்பீடுகளுக்கு மட்டும் more, most ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்து கிறோம்? வேறு சிலவற்றுக்கு er, -est ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்?

இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். அதாவது tall taller tallest என்கிறோம். அதே போல் beautiful beautifuler - beautifulest என்று கூறாமல் beautiful more beautiful most beautiful என்று எதற்காகப் பயன்படுத்துகிறோம்?

நியாயமான கேள்விதான். எனக்கென்னவோ ஏற்கெனவே ஒரு வார்த்தை கூட்டு வார்த்தை யாக இருந்தால் (compound word) அதன் ஒப்பீடுகளாக most, most போன்றவற்றை உபயோகிக்கிறார்கள் என்று படுகிறது. (இது பெரும்பாலான வார்த்தைகளுக்குப் பொருந்துகிறது. எல்லா வார்த்தைகளுக்கும் அல்ல). நீங்களே சில உதாரணங்களைப் பாருங்கள்.

Small Smaller Smallest

Great Greater Greatest

Difficult More difficult Most difficult

இதை விளக்கும்போதே ‘இதேபோல good better best என்பதற்கான லாஜிக்கையும் சொல்லுங்களேன்’ என்று யாரா வது வாசகர் கேட்டுவிடுவாரோ என்று பதற்றமாக இருக்கிறது.

“Find என்பதன் past tense எது? Found என்பதா? அல்லது founded என்பதா? இந்தக் கேள்வியை என் அண்ணனிடம் கேட்டேன். Found-தான் சரி என்கிறார். Founded என்று ஒரு வார்த்தையே கிடையாது என்று ஏளனமாக சிரிக்கிறார்’’.

இப்படி ஒரு பஞ்சாயத்து வந்து சேர்ந்திருக்கிறது. அவருக்கான எனது பதில் இது.

Find என்பதன் past tense found. அதுவரை அண்ணனின் கருத்தை ஆமோதிக்கலாம். மற்றபடி நீங்களும் உங்கள் அண்ணனைப் பார்த்து thunder-thunder என்று சிரிக்கலாம். தப்பில்லை. ஏனென்றால் founded என்று ஒரு வார்த்தை உண்டு. Found என்பதன் past tense founded. நிறுவப்பட்ட என்று அர்த்தம் கொண்டது found. அதைக் கடந்த காலத்தில் சொல்லும்போது founded.

Romulus founded Rome.

இந்த இடத்தில் find found தொடர்பான ஒரு பரவலான பிழையை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. ‘My book is not found’ என்பது தவறு. Find என்பதன் எதிர்ச்சொல் lose. ‘My book is lost’ என்பதுதான் சரியான பயன்பாடு.

ZODIAC

“ராசிகளைக் குறிப்பிட ஆங்கிலத்தில் Zodiac என்கிறார்களே இதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?” என்ற ஒரு வாசகர் கேள்வியை நான் பாராட்டுகிறேன்.

ஏனென்றால் அர்த்தம் இல்லாத ஆங்கில வார்த்தைகளுக்கும் குறைவே இல்லை என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். (ஆனால் இதுவேகூட ஆங்கிலத்துக்கு ஒரு வசதியாக இருக்கிறது என்று படுகிறது. தமிழ் வார்த்தைகள் எல்லாவற்றையும் அர்த்தத்தோடு உருவாக்குகிறோம். இது தமிழின் பெருமை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ரயிலைப் புகைவண்டி என்றோம். புகையை வெளிப்படுத்தாத ரயில் வரும்போது கொஞ்சம் திகைப்பாக இருக்கிறது. நான்கு கால்கள் கொண்டதால் நாற்காலி என்கிறோம். நவீன நாற்காலிகள் நான்கு கால்கள் இல்லாமல் விதவிதமாக வளைந்தெல்லாம் வருகின்றன. அப்படியானால் இவற்றுக்குத் தனித்தனியாக வார்த்தைகளை உருவாக்க வேண்டுமா? ஆங்கிலத்தில் கவலையில்லை. எதுவாக இருந்தாலும் chair!).

கிரேக்க மொழியில் Zoion என்றால் மிருகம் என்று பொருள். அதிலிருந்து வந்தது Zodiac என்ற வார்த்தை. சொர்க்கத்தைச் சுற்றி இருக்கும் விலங்குகளை இணைக்கும் கற்பனைக் கயிறுதான் Zodiac. எனவேதான் Zodiac science-ல் விலங்குகள் விரவிக் கிடக்கின்றன.

CANVAS - CANVASS

பிரச்சாரம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுவது Canvass.

“லெதர் ஷூ வேணாம். கான்வாஸ் ஷூவே போதும்” என்று நீங்கள் சொன்னால் அந்த கான்வாஸுக்கு ஒரு ‘ஆமாம்’ போதும். அதாவது canvas shoes.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com


தவறவிடாதீர்!

    ஆங்கில அறிவுமொழி அறிவுஆங்கிலம் அறிவோம்ஆங்கில இலக்கணம்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x