Published : 14 Jan 2021 03:19 am

Updated : 14 Jan 2021 08:57 am

 

Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 08:57 AM

இயேசுவின் உத்வேகக் கதைகள் 23: வளர்ந்த பிறகும் குழந்தை உள்ளம்

jesus-stories

ஒரு சிறுவனைப் பார்த்து, “நீ நன்றாக வளர்ந்து உன் தந்தை யைப் போல் ஆக வேண்டும்” என்று தானே நாம் சொல்ல நினைப் போம்? ஆனால், இயேசு ஒரு முறை ஒரு சிறு பிள்ளையை அழைத்துத் தன் சீடர்களின் நடுவில் நிறுத்தி, “நீங்கள் மனம் மாறி, சிறு பிள்ளை களைப் போல் ஆகாவிட்டால், விண்ணரசில் நுழைய மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

வளர்ந்த மனிதர்கள் சிறு பிள்ளை களைப் போல் ஆவது எப்படி?


இயேசு இப்படிச் சொல்வதற்கு முன்பு அவரின் சீடர்கள் மத்தியில் காரசாரமான ஒரு விவாதம் நடந்தது. தங்களுக்குள்ளேயே பெரியவர் யார், உயர்ந்தவர் யார் என்று அவர்கள் வாதாடிக்கொண்டு இருந்ததை இயேசு கேட்டுவிட்டார். எனவே, அவர்களுக்குச் சொல்ல விரும்பிய செய்தியை இயேசு இப்படிச் சொன்னார்.

ஆசை, பொறாமை

தங்களுக்குள் யார் பெரியவர், யார் உயர்ந்தவர் என்ற விவாதத்துக்குப் பின்னே ஒளிந்திருப்பது என்ன? பதவிக்கான ஆசையும் பொறாமையும் போட்டியும்தான்.

இயேசு வாழ்ந்த இஸ்ரவேல் நாட்டை ரோமப் பேரரசு தன் ஆட்சிக்குள் கொண்டுவந்திருந்தது. இயேசு பேசிய விதத்தையும் அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும் பார்த்த பல யூதர்கள், இயேசு தங்கள் நாட்டை ரோமப் பேரரசின் பிடியிலிருந்து விடுவித்து, ஒரு புதிய அரசை, புதிய ஆட்சியை ஏற்படுத்துவார் என்று நம்பினார்கள். அப்படி அவரது ஆட்சி வரும்பொழுது தங்களுக்கு புதிய அரசில் பெரும் பதவிகள் வேண்டும் என்று சில சீடர்கள் ஆசைப்பட்டனர்.

அவரின் முக்கியச் சீடர்கள் பன்னிருவரில் இருவர் சகோதரர்கள். இயேசுவின் ஆட்சி வரும்போது இந்த இருவருக்கும் இயேசு உயர்பதவிகளை வழங்க வேண்டும் என்று இந்த இருவரின் அன்னை இயேசுவிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசினார். இது மற்ற சீடர்களின் மனத்தில் கோபத்தையும் பொறாமையையும் தோற்றுவித்தது. இந்த பொறாமை, பதவி ஆசை பற்றி அறிந்ததால்தான் இயேசு ஒரு சிறுபிள்ளையை அவர்கள் முன்னே நிறுத்தி மேலே கண்டவாறு சொன்னார்.

இந்த உலகத்தின் மாசு

குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் பதவி மோகம் இல்லை. எனவே, மற்ற மனிதர்களைத் தங்கள் பேராசைகளை நிறைவேற்று வதற்குத் தடையாக இருக்கும் போட்டியாளர்களாக இவர்கள் பார்ப்பதில்லை. தங்களில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்று பிள்ளைகள் விவாதிப்ப தில்லை. விண்ணகத்திலிருந்து சமீபத்தில்தான் மண்ணகம் வந்தவர்கள் அவர்கள். அதனால், இவ்வுலகின் மாசு அவர்களின் பார்வையை பாதிப்பதில்லை. வளர்ந்து ஆளானவர்கள் சாதி, மத, இன பேதங்களை அவர்களின் பிஞ்சு மனத்தில் விதைக்கும்வரை அவர்கள் சிறுவர் சிறுமியர் அனைவரையும் தங்கள் தோழர்களாகவே, நண்பர்க ளாகவே பார்க்கின்றனர்.

விண்ணரசு அவர்களு டையது

இப்படிச் சிறு பிள்ளைகளைப் போல் பார்க்கும் மனம் வேண்டும் என்று சொன்ன இயேசு அவர் களைப் பரிவோடு நேசித்தார். ஒரு முறை அன்னையர் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு இயேசு ஆசி வழங்க வேண்டும் என்று அவரிடம் கொண்டுவந்தனர். இதை ஒரு தொந்தரவாகக் கருதிய சீடர்கள் அந்த அன்னையரை விரட்டினர். விரட்டிய தன் சீடர்களை அதட்டிய இயேசு, “அவர்களைத் தடுக்காதீர்கள். சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் இவர்களைப் போன்றோருக்கே விண்ணரசு உரியது” என்று கூறி, குழந்தைகளை அரவணைத்து, அவர்களது தலை மேல் கைவைத்து ஆசி வழங்கினார்.

குழந்தைகளின் மனம் வாடுவதைக் காணும் போதெல் லாம் கடவுளின் மனதில் மிகுந்த சோகமும் கோபமும் உண்டாகும் என்பதில் ஐயமில்லை.

திருமயம் பெ. பாண்டியன் எழுதிய கவிதை இது:

சாமி வேடம் போட்டு

மேடை ஏறிய குழந்தைக்கு

நடிப்பு வரவில்லை என்று

கீழிறக்கி விட்டதால்

அழுதுகொண்டே இருந்தார்

நெடுநேரம் வரை

கடவுள்.

இன்றைய உலகில் குழந்தை கள் படும் துன்ப துயரங்களின் பட்டியல் மிக நீளமானது. நமது இல்லங்களில், வீதிகளில், பள்ளிகளில், விடுதிகளில், உணவகங்களில் உள்ள குழந்தைகளை மதித்து, மனிதநேயத்தோடு இதமாக, மென்மையாக அவர்களை நடத்தினால் அவர்களின் வாழ்வு மலரும். குழந்தைகளை நேசிக்கிற இறைவனின் இதயம் மகிழும்.

வளர்ந்த பிறகும் குழந்தை மனம் கொண்ட மனிதர்களாக, வாழ்நாள் முழுதும் குழந்தைகளை நேசித்து, பாதுகாக்கிற நல்லவர்களாக நாமிருந்தால், இன்றும் நாளையும் மிக நன்றாக அமையும்.

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: majoe2703@gmail.comஇயேசுவின் உத்வேகக் கதைகள்வளர்ந்த பிறகும் குழந்தை உள்ளம்Jesus stories

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

week-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x