Last Updated : 13 May, 2014 02:52 PM

 

Published : 13 May 2014 02:52 PM
Last Updated : 13 May 2014 02:52 PM

தாமஸ் கோச்சேரி: ஆர்ப்பரித்து ஓய்ந்த அலை

சுற்றுச்சூழலைப் பாதுகாக்காமல் சமூகநீதியை நிலைநாட்ட முடியாது என்ற கொள்கையைக்கொண்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் தாமஸ் கோச்சேரி மே 3-ம் தேதி காலமானார். அவருக்கு வயது 74. மீனவர்களின் உரிமைகளுக்காகச் சர்வதேச அளவில் குரல்கொடுத்தவர் அவர்.

மீன் பிடிப்போர் மற்றும் மீன் தொழிலாளர் உலக இயக்கத்தின் (World Forum of Fish-harvester and Fishworkers - WFF) ஒருங்கிணைப்பாளராகவும், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணியிலும் (India's National Alliance of Peoples' Movements - NAPM) செயல்பட்டவர் தாமஸ் கோச்சேரி. தமிழகத்திலுள்ள பெரியவிளை ரிடம்டெரிஸ்ட் கம்யூனிட்டியின் ரெக்டராகவும் செயல்பட்டுவந்தார்.

எதுவும் தடையில்லை

நான்கு முறை மாரடைப்பு, பல நூறு உண்ணாவிரதங்கள், 16 முறை சிறைவாசம் போன்ற எந்த விஷயமும் அவரது தொடர் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

இந்தியாவின் கடற்கரை சூழலியலைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1989-ல் நடத்தப்பட்ட புகழ்பெற்ற கன்னியாகுமரி பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். மொத்த வியாபாரிகள், வணிகர்களால் ஏழை மீனவர்கள் திட்டமிட்டுச் சுரண்டப் படுவதற்கு எதிராக மீனவர் களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடல் கொள்ளை

அவரும் அவருடன் இணைந்து பணிபுரிந்தவர்களும் வெளிநாட்டு பெருநிறுவன மீன்பிடி கப்பல்களுக்கு எதிராகப் போராட மீனவர்களைத் திரட்டினர். ஏனென்றால், 1 கோடி இந்தியர்களுக்கு மீன் தொழில் வாழ்வாதாரமாக இருந்துவந்ததுதான்.

1990-ல் 2,600 வெளிநாட்டு டிராலர் படகுகளைக் கொண்ட பெருநிறுவனங்கள் இந்தியக் கடல்களில் மீன்பிடிக்க அனுமதிப் பதற்கு எதிராகத் தேசிய அளவிலான பிரசாரத்தைக் கோச்சேரி மேற்கொண்டார். கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிநாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் அந்தச் சட்டத்தை, இந்திய அரசு அப்போது திரும்பப் பெற்றுக்கொண்டது.

விருது மறுப்பு

கடற்கரை மாசுபாட்டுக்கு எதிராகப் போராடியுள்ள அவர், 1989-ல் கூடங்குளம் அணு மின்நிலையம் கட்டப்பட்ட காலத்திலிருந்தே அதைக் கடுமையாக எதிர்த்துவருகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் உள்ளூர் மக்களையும், நாடு முழுவதும் உள்ள செயல் பாட்டாளர்களையும் திரட்டியதில் அவருக்கும் பங்குண்டு.

பி.இ.டபிள்யு. அறக்கட்டளை 1,50,000 டாலர் பணம் கொண்ட விருதை 1997-ல் அவருக்கு வழங்க முன்வந்தது. ஆனால், கடல் மாசுபடுவதற்குக் காரணமாக இருந்த சன் எண்ணெய் நிறுவனத்தின் ஆதரவில் செயல்பட்ட அந்த நிறுவனத்தின் விருதைப் பெற அவர் மறுத்துவிட்டார். அதேநேரம் மாற்று அரசியல், மாற்று வளர்ச்சித் துறைகளில் பாடுபட்டவர்களுக்காக வழங்கப்படும் நார்வே நாட்டின் சோஃபி பரிசை அவர் பெற்றார்.

சுற்றுச்சூழல் போராட்டங்கள் மட்டுமல்லாமல், சமூகநீதி இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்கேற்ற தாமஸ் கோச்சேரி, "ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு சீர்திருத்தமும் நம்பிக்கையளிக்கும் விஷயம்தான்" என்று கூறிச் சென்றிருக்கிறார். நிச்சயம் அவரது வாழ்க்கையும் போராட்டங்களும் இந்தியாவில் சமூக அக்கறையுடன் வாழ்ந்துவரும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை அளிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x