Published : 09 Oct 2015 10:17 AM
Last Updated : 09 Oct 2015 10:17 AM

சினிமா ரசனை 19 - கைவசமாகும் உயர்ந்த நடிப்பு முறை!

ஹாலிவுட்டில் மெதட் ஆக்டிங் முறையானது ஸ்ட்ராஸ்பெர்க் மற்றும் ஸ்டெல்லா அட்லர் ஆகிய இருவராலும் புகழ்பெற்று விளங்கியதைப் பார்த்தோம். இனி மெதட் ஆக்டிங் என்றால் என்ன என்பதையும் அதைக் கைவசமாக்க என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பார்க்கலாம். முதலில் மெதட் ஆக்டிங் பற்றி ஸ்ட்ராஸ்பெர்க் உருவாக்கிய விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் ஆகியவற்றைச் சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

இரண்டு வழிகள்

ஆடியன்ஸ் எப்போதெல்லாம் நடிகர்களின் நடிப்பில் மெய்மறக்கிறார்களோ, அத்தகைய நடிப்பே மெதட் ஆக்டிங் எனப்படுகிறது. அதற்காக எல்லாச் சமயங்களிலும் இப்படி ஆடியன்ஸ் மெய்மறத்தல் மெதட் ஆக்டிங் ஆகிவிடாது. ஸ்ட்ராஸ்பெர்க் என்ன சொல்ல வருகிறார் என்றால், ‘இத்தகைய உயர்ந்த வகை நடிப்பு எல்லாருக்கும் வந்துவிடாது; அப்படியொரு நடிப்பை நடித்துக் காட்ட வேண்டும் என்றால், நடிகர் என்பவர் ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு காட்சியில் நடிக்கும்போது அந்தக் காட்சியில் அந்தக் கதாபாத்திரம் அனுபவிக்கும் உணர்ச்சியை அந்த நடிகர் தனது மனதில் தருவித்துக்கொள்ள வேண்டும். அந்த உணர்ச்சியை எப்படித் திடுமென்று மனதில் வரவழைத்துக்கொள்வது? கடினம்தான். ஆனால், அதை மட்டும் ஒரு நடிகர் செய்துவிட்டால், அவரால் மிகச் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்த இயலும்’.

இதைத்தான் ஸ்ட்ராஸ்பெர்க் தனது முறைகளின்படி விளக்கி வைத்தார். இவரது முறைகளைப் படித்தால் அத்தகைய நடிப்பை வழங்க ஒரு நடிகர் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள இயலும். நடிப்பு என்பது அத்தனை சுலபமல்ல. ஜாலியாக கேமரா முன்னரோ அல்லது மேடையிலோ சென்று நின்றுகொண்டு நடித்துவிட முடியாது. ஒன்று, மிகச் சிறப்பான இயக்குநரது கையில் தன்னை ஒப்புவிக்க வேண்டும். அல்லது, நடிகனாகத் தன்னைத் தானே தயார்செய்துகொள்ள வேண்டும்.

இதில் இரண்டாவது வழியே சிறந்தது. காரணம், எப்போதுமே இயக்குநர் பார்த்துக்கொள்வார் என்று இருந்துவிடுவது ஆபத்து. ஓரிரு வாய்ப்புகள் அப்படி அமையலாம். அதன் பின்னும் தன்னைத் தானே வளர்த்துக்கொள்ளாமல் இருந்தால், நடிகரின் அழிவுக்கே அது வழிவகுக்கும். ஆதலால் ஸ்ட்ராஸ்பெர்க் வகுத்துள்ள வழிமுறைகள் எப்போதும் நடிகர்களுக்கு உதவியாகவே இருந்துள்ளன. அந்த முறைகளைப் பயின்று புகழ்பெற்ற நடிகர்கள் ஆனவர்கள் பலர். இனி, ஸ்ட்ராஸ்பெர்க்கின் வழிமுறைகள்.

1. தளர்த்துதல் (Relaxation)

ஸ்ட்ராஸ்பெர்க்கின் ‘மெதட் ஆக்டிங்’ பயிற்சியில் முதலாம் வழிமுறை, தளர்வு. அதாவது அன்றாட வாழ்க்கை நமது உடலில் ஏற்படுத்தியிருக்கும் பதற்றத்தையும் அழுத்தத்தையும் போக்குதல். இதனால் விளையும் நன்மை என்னவெனில், ஒரு நடிகர் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்துக்குத் தேவையில்லாத உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் இன்ன பிற விஷயங்களைப் போக்குதல். எப்படி?

ஸ்ட்ராஸ்பெர்க் வடிவமைத்த பயிற்சியின்படி, ஒரு நடிகர், நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொள்ள வேண்டும். சும்மா போய் ஜாலியாக அமர்ந்துவிடக் கூடாது. அன்றாட வாழ்க்கையில் நாற்காலியில் எப்படி அமர்வாரோ, அப்படி இல்லாமல், புதிதாக ஒரு பாணியில் அமர வேண்டும். அவரது உடலுக்கு அதுவரை பழக்கமில்லாத பாணி ஒன்றில் அமர வேண்டும். காரணம் என்னவென்றால், அந்த நடிகரின் இயல்பான பழக்கவழக்கங்கள், உடல்மொழி ஆகியவற்றை உடைத்து, கதாபாத்திரத்துக்கான பயிற்சியில் அவரை ஈடுபடவைப்பது.

இப்படி அமர்ந்த பின், உடலின் ஒவ்வொரு பகுதியாக ஆராய்தல் வேண்டும். ஆராய்தல் என்றால், ஒவ்வொரு பகுதியின் தசைகளையும் விரித்து, சுருக்கி, அந்தப் பகுதி தளர்வாக இருக்கிறதா அல்லது இறுக்கமாக இருக்கிறதா என்று பார்ப்பது என்கிறார் ஸ்ட்ராஸ்பெர்க். இதனால் என்ன நன்மை என்றால், நம்மை அறியாமலேயே நமது உடலின் இறுக்கம் தளர்த்தப்படும். ஒரு நடிகர் மேடையிலோ அல்லது கேமரா முன்னரோ நடிப்பை வழங்க, அவரது உடலும் அவர் மனதுடன் ஒத்துழைக்க வேண்டுமல்லவா? அதற்கு முதலில் அந்த நடிகரின் உடல் தளர வேண்டும். அதனால்தான் இந்தப் பயிற்சி என்கிறார் ஸ்ட்ராஸ்பெர்க்.

அப்படி ஒவ்வொரு பகுதியின் தசையையும் ஆராயும்போது, அந்தத் தசை தளர்வாக இருக்கிறதா என்ற கேள்வியை மனதில் எழுப்பிக்கொள்ளுதல் வேண்டும். அதேபோல், அந்தத் தசையிடம், இறுக்கத்தை விட்டுவிட்டுத் தளர்வாக இருக்கச் சொல்லி ஆணையிடுதல் வேண்டும். இப்படி அந்த நடிகரின் உடல் முழுதும் தளரவைக்க வேண்டும். இதனால் உடலின் ஒவ்வொரு பகுதியின் தசைகளையும் கட்டுப் படுத்தும் ஆற்றல் கிடைக்கிறது. இது, நடிப்பில் மிகவும் உதவும் விஷயம்.

அப்படிச் செய்யும்போது, முகத்தின் தசைகளுக்கு விசேஷ முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முகத்தில்தானே நமது மன இறுக்கம் வெளிப்படுகிறது? அதனால்தான். புருவங்கள், நெற்றி ஆகியவற்றை விரித்தும் சுருக்கியும் பயில வேண்டும். மூக்கின் நாசித்துவாரங்களைப் பெரிதாக்கியும் சிறிதாக்கியும் பயிற்சி செய்ய வேண்டும். வாயை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அகலத் திறந்து, மூடி, முகவாயின் இறுக்கத்தைத் தளர்த்தல் வேண்டும். நாக்கை வெளியே துருத்தி, அதனை வட்டங்களில் சுழற்றிப் பயில வேண்டும். சுருக்கமாக, அந்த நடிகரின் அன்றாட வாழ்க்கையின் முகபாவங்களிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும்.

இதனால் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது அந்த நடிகரின் முகபாவங்கள் மற்றும் உடல்மொழி ஆகியவை குறுக்கிடும் ஆபத்து விலகும். அதாவது, ஒரு கதாபாத்திரத்தில் நடிகரைப் பார்க்கும் பிரச்சினை இருக்காது (நம்மூரில் சில நடிகர்கள், எந்தக் கதாபாத்திரம் ஏற்று நடித்தாலும் அந்த நடிகர்கள்தான் அந்தக் கதாபாத்திரத்தில் வெளிப்படு வார்கள். அவர்களது உடல்மொழி மாறவே மாறாது. இத்தகைய பிரச்சினையிலிருந்து விடுபடுதலே இந்தப் பயிற்சியின் நோக்கம்).

ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது அந்த நாளில் அந்த நடிகரின் தனிப்பட்ட வாழ்வின் உணர்ச்சிகள் அந்தக் கதாபாத்திரத்தை பாதிக்காது. ஒரு புதிய நடிகருக்கு இந்தப் பயிற்சி ஒரு மணிநேரம் பிடிக்கலாம். அனுபவமிக்க நடிகருக்கு அரை மணிநேரம். உடலையும் மனதையும் தளரவைக்கும் இந்தப் பயிற்சி தினந்தோறும் செய்யப்பட வேண்டும். இந்தப் பயிற்சி கைகூடிவிட்டால், எந்த நேரத்திலும் உடலையும் மனதையும் தளரவைக்க முடியும்.

அது, கதாபாத்திரத்தின் பல்வேறு குணாதிசயங்களை நடிகர் தனது உடலில் ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும். அப்போதெல்லாம் அந்தத் தனிப்பட்ட மனிதரின் சுயம் (individuality), கதாபாத்திரத்தில் குறுக்கிடக் கூடாது. இப்படி நடிகரின் உடலையும் மனதையும் வளைந்துகொடுக்கும்படி மாற்றவே இந்த ஆரம்பப் பயிற்சி. இதைத் தொடர்ந்து வருகிறது ஒருமுகப்படுத்துதல் (Concentration). ஸ்ட்ராஸ்பெர்க் வகுத்துள்ள முக்கியமான வழிமுறையான இதை அடுத்து பார்ப்போம்.

ஒரு திருத்தம்

கடந்த செப்டம்பர் 25 இந்துடாக்கீஸ் இணைப்பிதழில் வெளியாகியிருந்த சினிமா ரசனை பத்தியில் ‘காட்ஃபாதர் II’ படத்தில் குரு லீ ஸ்ட்ராஸ்பெர்க்குடன் ராபெர்ட் டி நீரோ’ எனத் தவறாக ஒளிப் படக் குறிப்பு வெளியாகிவிட்டது. அந்தப் படத்தில் ஸ்ட்ராஸ்பெர்க்குடன் இருப்பவர் நடிகர் அல் பாசீனோ என்பதே சரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x