Published : 24 Sep 2020 09:03 am

Updated : 24 Sep 2020 09:03 am

 

Published : 24 Sep 2020 09:03 AM
Last Updated : 24 Sep 2020 09:03 AM

ரமணரின் திருவருள் பெற்ற முருகனார்

lord-murugan

வெ.சம்பத்

ரமண மகரிஷியின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பெயர் முருகனார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகனாரின் மாமனார் தண்டபாணி சுவாமி, ரமண மகரிஷியின் ‘நான் யார்’ நூலைப் படிக்கச் சொன்னதுதான், முருகனார் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை. தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முருகனார், ஒட்டுமொத்த விடுதலையைத் தேடிப் புறப்பட்டார்.

மகரிஷியைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் முருகனாருக்கு மேலோங்கியது. தன் மாமனாரான தண்டபாணி சுவாமிகளுடன் திருவண்ணாமலைக்குச் சென்று, அங்குள்ள திருவண்ணாமலை ஆலயம் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலையாரையையும் கண்குளிரத் தரிசனம் செய்தார். கொடி மரத்தின் அருகிலுள்ள மண்டபத்துக்கு வந்து ஸ்ரீரமணரின் பேரில் ‘பார் வளர் கயிலைப் பருப்பதம் நீங்கி’ எனத் தொடங்கும் ஸ்ரீரமண தேசிகப் பதிகத்தை எழுதிக்கொண்டு ரமணாஸ்ரமம் சென்றார்.

அங்கு எதிரே வரும் ரமண மகரிஷியைக் கண்டார். அவரை வணங்கி, பின் அவரது தரிசனத்திலேயே முருகனார் தான் எங்கு இருக்கிறோம் என்ற நிலையை மறந்து, ஸ்ரீரமணரின் அருள் பார்வையில் தன்னை மெதுமெதுவாக இழக்கலானார். பகவானின் முன் தான் எழுதிய பதிகத்தை படிக்க முயன்றார். பகவான் முன்னால் சில வரிகளை மட்டுமே படித்து, மேலும் வார்த்தைகளைப் படிக்க முடியாமல் கண்ணீர் பெருகி நிற்க, ரமணரோ அவர் நிலை உணர்ந்து, “தாரும், நானே படிக்கிறேன்” என்று வாங்கிப் படித்தார்.

பகவான் ரமண மகிரிஷியின் முன்னால் அமர்ந்து, அவரையே இடைவிடாது நோக்கி மனத்தை ஒரு நிலைப்படுத்தியபின், முருகனாரின் முகத்தில் ஒரு தேஜஸ் காணப்பட்டது. பகவான் சரீரம், அந்த சுற்றுப்புறத்தில் தோன்றிய ஒரு விதமான ஒளி ஆகியவற்றில் ஆழ்ந்துபோய், முருகனார் தன்னை மறந்தேன் என்று கூறியுள்ளார். தனது தனித்தன்மையை முற்றிலும் இழந்தது மட்டுமல்லாமல், இந்த தேஜஸை ஸ்ரீபகவானின் தாயார் பத்து மாதம் சுமந்திருந்தார் என்றால், அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று மகிழ்வுடன் அவர் கூறியுள்ளார். ஸ்ரீபகவானைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவராக, அவரது அருள் பிரபாவத்துக்கு அடிமையானார். இவ்வாறாக ரமணரிடம் முருகனார் ஆத்ம அனுபவத்தைக் கற்றார்.

வேதாந்த நூல்களை அதிகம் படிக்காத முருகனார், பகவானிடம் நேர்முகமாக வேதாந்த வித்தையை அனுபவித்தார். முருகனார் மனதில் இதுகாறும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தேசபக்தி என்னும் நெருப்பு, மெல்ல மெல்ல அணைந்து, அவரைத் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறச்செய்து, ஆன்மிகப் பாதைக்கு அடிகோலியது. தனது மனம் ஒருமைப்படுவதை அவர் நன்கு உணர்ந்தார்.

முருகனாரின் தாய் பக்தி

1926-ம் ஆண்டு தனது நிகரில்லாத தெய்வமான தாய் பூவுலகை விட்டு நீங்கியதும், தாயாருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறையாகச் செய்து முடித்தார். அவரது தாய்ப் பாசத்தை வெளிப்படுத்தும் பதிகங்கள் பட்டினத்தாரின் பாடல்களை நினைவூட்டுபவை. தாயாரின் மறைவுக்குப் பின்னர், ரமணர் தரிசனமே பிரதானமென ஆசிரமத்தில் வலம்வந்தார். உஞ்சவிருத்தியெடுக்கும் நேரம் தவிர, மற்ற நேரத்தில், ரமணரின் நினைவிலேயே தியான மண்டபத்தில் அமைதி காத்தபடியே வாழ்ந்துவந்தார். ரமணரின் அருள்பார்வை இவரை மேன்மேலும் மெருகேற்றிக் கொண்டேயிருந்தது.

ரமணரிடம் பெற்ற அனுபவம்

பகவானுடைய அடியார்கள் பகவானின் உபதேசமாகிய விசார மார்க்கத்தை அனுசரிப்பதற்கு அடுத்தபடியாக மேற்கொள்ளுவது கிரிப்பிரதட்சணம்தான். இதையறிந்து முருகனாரும் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) கிரிவலம் செய்தார். அவர் கிரிப்பிரதட்சணம் செய்யும்போது நிருதி லிங்கத்திலிருந்து அடியண்ணாமலை தாண்டும்வரை, தனக்குத் தேக உணர்வே மறந்துவிடுகிறது என்பதைக் கூறி ஆனந்தமடைவார்.

பகவான் முன்னால் முருகனார் அமர்ந்தால் பசி, தாகம், தூக்கம் எல்லாவற்றையும் மறந்து பகவானைக் பார்த்துக்கொண்டே இருப்பார். பகவானிடம் நேர்முகமாக வேதாந்த வித்தையைக் கற்றவர்கள் முருகனாரும், புதுக்கோட்டை கி. லட்சுமண சர்மாவும்தான்.

ஆன்மிக விளக்கமும், தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவும் ரமணரிடம் வரும் பக்தர்களுக்கு மகரிஷி தரும் விளக்கங்கள், அறிவுரைகள், தத்துவங்கள் எல்லாவற்றையும் அமைதியாய் கேட்டு தனது மெய்யறிவால் நன்கு உள்வாங்கி, ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக கருத்துகளையும் ரமணர் கூறும் வார்த்தைகளையும் அதன் தொனி மாறாமல் தமிழ்ச் செய்யுள்களாக இயற்றினார். மகரிஷி தனிமையில் இருந்தபொழுது தான் இயற்றிய செய்யுள்களைக் காண்பித்து, அதற்கு அவரது விளக்கங்களைக் கேட்டு, மகரிஷி அறிவுரைப்படி திருத்தங்கள் செய்து நிறைவுகொள்வார்.

மொத்தம் 1,282 நாலடி வெண்பாக்களால் கோக்கப்பட்ட நூல்தான் ‘குருவாசக் கோவை’. இந்த நூலில் இருக்கும் 28 வெண்பாக்கள் பகவானால் இயற்றப்பட்ட அமுதம் போன்ற பொக்கிஷங்கள் ஆகும். இந்தக் குருவாசகக் கோவையானது அனைத்துப் போதனா ரகசியங்களும், விளக்கங்களும் ஒருங்கே அமைந்த ஞானப் பொக்கிஷம். இவ்வாறு தமிழ்ச்சுவை செறிந்த, இனிமையான, இலக்கிய ரசம் நிறைந்த இந்த நூல் பரவலாக அறியப்படாதது வேதனைக்குரிய விஷயம்.

உள்ளது நாற்பது

சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் ‘இன்னா நாற்பது’, ‘இனியவை நாற்பது’, ‘கார் நாற்பது’, ‘களவழி நாற்பது’ ஆகியவற்றைப் போன்றே முருகனாரும், பகவான் அவ்வப்போது பாடிய பாடல்களை நாற்பதாகத் தொகுத்து ஒரு முழுமையான ஞானநூலை உருவாக்கத் திட்டமிட்டார். அதற்கு ‘உள்ளது நாற்பது’ என்று பெயர் வைப்பதென மனத்தில் திட்டமிட்டு பகவானிடம் சென்று, மெய்ப்பொருளின் உண்மையையும் அதை அடைவதற்கான வழியையும் அடியார்கள் உய்யும் பொருட்டு இன்னும் சில பாடல்கள் பாடித்தந்து, ஏற்கெனவே உள்ள பழைய பாடல்களுடன் சேர்த்து நாற்பது பாடல்கள் கொண்ட ஒரு நூலாக்கித் தர வேண்டுமென வேண்டினார். அன்றிலிருந்து பகவான் அவ்வப்போது ஓரிரு பாடல்களாக எழுதித்தர, முருகனார் கருத்துக் கோவைக்குப் பொருந்தாத பாடல்களை நீக்கி 1928-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘உள்ளது நாற்பது’ நூலாக வெளியிட்டார்.

மெய்யின் இயல்பும்அதை மேவுத் திறனும் எமக்கு

உய்யும் படிமுருகன் ஓதுகெனப்-பொய்யுலகில்

கள்ளமறு மாற்றாற் கனரமணன் கட்டுரைத்தான்

உள்ளது நாற்பது உவந்து.

தானாக எதையும் எழுதாமல் பகவானைத் தூண்டி, வேண்டி வாழையடி வாழையென வரும் ரமண பக்தர்களுக்கு முருகனார் கொடுத்த ஒரு ஞானப் பொக்கிஷம் ‘உள்ளது நாற்பது’.


ரமணர்திருவருள்முருகனார்Lord Muruganதாய் பக்திரமணரிடம் பெற்ற அனுபவம்அடியார்கள்மகரிஷியின் வாழ்க்கைமகரிஷி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

guinness-world-records

‘உயர்ந்த' சாதனை!

இணைப்பிதழ்கள்
hatrick-swetha

ஹாட்ரிக் ஸ்வேதா!

இணைப்பிதழ்கள்
news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author