Published : 13 Sep 2020 10:18 am

Updated : 13 Sep 2020 10:48 am

 

Published : 13 Sep 2020 10:18 AM
Last Updated : 13 Sep 2020 10:48 AM

பெண்களுக்கு சுயதொழில் வழிகாட்டி

self-employment-guide

பெண்கள் வீட்டிலிருந்தபடியே சுயதொழில் செய்து பொருளீட்டுவதற்கான வழிமுறைகள் குறித்த இணையவழிக் கலந்துரையாடல் ‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பாக செப்டம்பர் 19அன்று நடைபெறவிருக்கிறது. கரோனா ஊரடங்குக் காலத்தில் பெரும்பாலான குடும்பங்கள் பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. பலருக்கு வேலை பறிபோன நிலையில் குடும்பத்தை நடத்துவதற்கே பலரும் சிரமப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் பெண்கள் சுயதொழில் செய்வதன் மூலம் குடும்பத்தின் பொருளாதார சீர்குலைவை ஓரளவுக்குச் சரிசெய்ய முடியும். அந்த நோக்கில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பாக செப்டம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இணையவழிக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை இயக்குநர் தர்மசெல்வன், தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நல சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் பங்கேற்கின்றனர். பெண்கள் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகள், அரசுத் திட்டங்கள், தொழிலுக்கான முதலீட்டுக்குக் கடனுதவி பெறும் வழிமுறைகள் போன்றவை குறித்து இந்த நிகழ்வில் பகிர்ந்துகொள்ள உள்ளனர். வாசகர்களின் கேள்விகளுக்கும் இவர்கள் பதில் அளிப்பார்கள்.


நிகழ்ச்சியில் பங்குபெற https://bit.ly/3mdLJis என்கிற இணைப்புக்குச் சென்று முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பெண் திரை: மீண்டெழுவதுதான் வாழ்க்கை

பள்ளி முடித்து கல்லூரியில் நுழையும் வயதில் பல்வேறு கனவுகளைச் சுமந்து திரியும் பெண். ஒரு விபத்தில் சிக்கி இடுப்புக்குக் கீழே செயலிழந்து சக்கர நாற்காலியில் முடங்க நேர்ந்தால், அவள் என்ன ஆவாள்? அவரது கனவுகளும் கால்களை இழக்கும். மெல்ல மெல்ல மரித்துப்போகும். அவரும் வாழ்வதற்கான நம்பிக்கையை இழப்பார். ஆனால், ‘வீழ்வேன் என நினைத்தாயோ?’ என மீண்டெழுந்து பிறருக்கும் உத்வேகத்தை அளிப்பவர்களும் உண்டு. குதிரையேற்ற வீராங்கனையான ஆம்பர்லி சிடர் அவர்களில் ஒருவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவரின் சவால் நிறைந்த வாழ்க்கை ‘வாக், ரைட், ரோடியோ’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.

18 வயதான ஆம்பர்லி, வாகன விபத்துக்குள்ளாகி முதுகுத்தண்டில் பலத்த அடியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல் இடுப்புக்குக் கீழ் செயலிழந்து போகிறது. உடலின் மேற்பகுதியை வலுப்படுத்திக்கொள்ள பயிற்சியளித்தவரிடம் தன் இலக்கு, “எழுந்து நடப்பது, குதிரையை ஓட்டுவது, பந்தயத்தில் பங்கேற்பது” எனக் கூறுகிறார். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. அவரின் பெரிய குதிரையான பவரின் முதுகில் அமர்ந்தபடி சேணத்தைப் பூட்டுவதே மிகப்பெரிய சவாலாக இருத்கிறது. உடலின் மேல்பகுதியைப் பயிற்சிகள் மூலம் உறுதிசெய்கிறார். சக்கர நாற்காலியில் இருந்து அவரைக் குதிரையின் மேல் ஏற்றவும் இறக்கவும் ஒருவரின் உதவி தேவைப்படுகிறது.

விரிந்த சிறகுகள்

ஆம்பர்லி மீண்டெழுந்த கதையை ஒளிபரப்பும் நோக்குடன் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அவரைப் படம்பிடிக்க வருகிறது. அச்சத்துடன் குதிரையில் சவாரிசெய்யும் அவர், சிறிது நேரத்திலேயே குதிரையில் சீறிப் பறக்கிறார். நம்பிக்கைச் சிறகுகள் மீண்டும் விரிகின்றன. போட்டிகளில் கலந்துகொள்வது என ஆம்பர்லி முடிவெடுக்கிறார். உள்ளுரில் நடந்த போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தில் வெற்றிவாகை சூடுகிறார். அவரது கனவு அத்துடன் முடிந்துவிடவில்லை. அமெரிக்க அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற வேண்டும் என்பதே அவரின் இலக்கு. ஒருநாள் தீவிர பயிற்சி முடித்த நிலையில் மயங்கி விழுகிறார். முதுகுக் காயத்தில் தொற்று. சிகிச்சைக்குப் பிறகு ஆறு வாரங்கள் கழித்து மீண்டும் பயிற்சி.

அமெரிக்க அளவிலான போட்டிக்கு இரண்டே வாரங்கள் உள்ள நிலையில் இவரைப் போல் விபத்தில் சிக்கிய பலரின் கடிதங்களால் உந்தப்பட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெறுகிறார். அவரின் இந்த வெற்றி அவருடன் பயணம் செய்த அனைவரின் வெற்றி. குறிப்பாக, அவர் மீண்டெழுந்ததிலும் வெற்றிபெற்றதிலும் ஆம்பர்லியின் தாயின் பங்கு அளப்பரியது. அன்புடனும் சிலநேரம் கண்டிப்புடனும் அவர் தன் மகளின் கனவைச் சுமப்பதுடன் அதை நனவாகவும் ஆக்குகிறார். இத்திரைப்படம் 2019 மார்ச் 8 அன்று மகளிர் தினத்தில் வெளியிடப்பட்டது கூடுதல் சிறப்பு. சின்னசின்ன தோல்விகளுக்கெல்லாம் துவண்டுபோவோருக்கு ஆம்பர்லி, உத்வேகத்தைத் தரத் தவறுவதில்லை.

- தனசீலி திவ்யநாதன், திருச்சி.

நீங்களும் சொல்லுங்களேன்...

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம்வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள்.பெண்கள்சுயதொழில் வழிகாட்டிசுயதொழில்Self-employment guideகரோனா ஊரடங்குபெண் திரைவாழ்க்கைவிரிந்த சிறகுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x