Last Updated : 08 Sep, 2015 11:55 AM

 

Published : 08 Sep 2015 11:55 AM
Last Updated : 08 Sep 2015 11:55 AM

வெளிநாட்டிலும் மருத்துவம் படிக்கலாம்

தமிழகத்தில் ஆங்கில மருத்துவத்தில் பொது மருத்துவம், பல்மருத்துவம் படிக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்ட பிளஸ் 2 பாடத்தில் 200- க்கு 200 மதிப்பெண் வரை பெற்றவர்களுக்குத்தான் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இலவச இடங்களில் சேர வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களாய் இருந்தாலும் கூட தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தவிக்க வேண்டிய நிலை உள்ளது. வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கூடுதல் சிரமம் உள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு வாய்ப்புகளை ஆராய வேண்டியுள்ளது.

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ்

இந்தியாவில் படிக்க வாய்ப்பு இல்லாதபோது, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டாலும் சரியான கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்படுகிறது.

ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்துவிட்டு வந்தாலும் இந்திய அரசு அந்த டாக்டர் பட்டத்தை ஏற்காமல் திறன்தணிக்கைத் தேர்வில் (FMGE) தேர்ச்சி பெற்றவர்களுகுகு மட்டுமே, உயர் கல்வி கற்கவும், மருத்துவத் தொழில் புரியவும் அனுமதி அளிக்கிறது.

சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் குறைந்த செலவில் எம்.பி.பி.எஸ் படிக்கலாம். ஆனால், முதல் ஓராண்டுக்கு அந்த நாட்டின் மொழியைக் கற்க வேண்டும், பிறகு எம்.பி.பி.எஸ் படித்து முடிக்க 6 ஆண்டுகளாகிவிடும்.

தகுதித் தேர்வு

ப்ளஸ் 2- வில் தகுதியான பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும். வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துவிடும்.

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு இந்தியா திரும்பும் மாணவ மாணவிகள் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் (FMGE) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்ச்சிக்குப் பின்னரே பயிற்சி மருத்துவராக இந்திய மருத்துவ கவுன்சிலில் (MCI) பெயரைப் பதிவு செய்து கொண்டு, டாக்டராகப் பணிபுரிய முடியும்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளில் மருத்துவக் கல்வியின் தரம் அதிகம் என்பதால் அங்கே உள்ள அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் படிப்பவர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டியது இல்லை என்ற நிலையும் உள்ளது.

தகுதித் தேர்வான FMGE - Screeing Test - க்கான தகுதிகள், கட்டண விவரம், பாடத்திட்டம், தேர்வுத் திட்டம் ஆகியவற்றை www.natboard.edu.in/fmge என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

வாய்ப்புகள்

வெளிநாட்டு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு முன்பாக அந்தக் கல்லூரி எத்தனை ஆண்டுகளாக உள்ளது, எவ்வளவு பேர் ஏற்கனவே படித்து இந்தியாவில் மருத்துவர் களாகப் பணியாற்றி வருகிறார்கள், அந்தக் கல்லூரிகளின் சான்றிதழ்களை இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்றுக் கொள்கிறதா என்ற விவரங்களை நன்கு தெரிந்துகொண்டு சேருவது நல்லது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் போல நன்கொடை வசூல் இல்லை. தவணை முறையிலும் கல்விக் கட்டணம் செலுத்தும் வசதி வெளிநாடுகளில் உண்டு. கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் பல்கலைக்கழகத்திலேயே நேரடியாகச் செலுத்தலாம். சிறந்த கல்வியும், தகுதியும் உள்ளோருக்கு 100 சதவீத கல்வி உதவித் தொகையையும் அந்தக் கல்விநிலையங்கள் தருகின்றன. அது உங்களின் தனிப்பட்ட முன்முயற்சியைச் சார்ந்துள்ளது. மருத்துவத்தைப் படித்தே தீருவேன் என்று லட்சியம் கொண்டவர்களுக்குப் பலவிதமான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x