Published : 18 Sep 2015 12:09 PM
Last Updated : 18 Sep 2015 12:09 PM

வாசகர் அனுபவம்: அகலாத அந்தக் காட்சி

நாம் அன்றாடம் எத்தனையோ காட்சிகளைக் காண்கிறோம். நேரடிக் காட்சிகளுக்கு இணையாக மெய்நிகர் காட்சிகளையும் பார்க்கிறோம், கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், சில காட்சிகள் மனதைக் குடைந்து அச்சுறுத்திக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஓர் அனுபவம் சமீபத்தில் எனக்கு நிகழ்ந்தது.

அது ஒரு வியாழக்கிழமை இரவு. வேலையை முடித்துவிட்டு, சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அலுவலகத்திலிருந்து புறப்பட்டேன். அடையாறில் இருக்கும் வீட்டுக்கு ஸ்கூட்டரில் விரைந்துகொண்டிருந்தேன். ‘பீக் அவர்’ முடிந்துவிட்டதால், வாகன நெரிசல் பெரிதாக இல்லை. மந்தைவெளி ஆர்.கே. மடம் சாலையில் ராமகிருஷ்ணா மடத்துக்கு எதிரே சாலையின் நடுவில் தடுப்புக்காகப் புதிதாக கற்கள் போடப்பட்டிருந்தன. அங்கே ஏதோ சின்னதாக நெருக்கடி, வாகனங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன.

பெரும் அதிர்ச்சி

தடுப்புக் கற்கள் அருகே சென்றபோது மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ ஒரு இளைஞன், ஸ்கூட்டருடன் தடுப்புக் கற்களில் மோதிக் கீழே விழுந்து கிடந்தான். ஸ்கூட்டர் ஒரு பக்கமும், இளைஞன் இன்னொரு பக்கமுமாகக் கிடந்தார்கள். எந்தத் திசையிலிருந்து அவன் வந்தான் என்பது தெரியவில்லை, அது அவசியமும் இல்லை.

ஆனால், அவன் கற்களில் மோதித் தரையில் விழுந்திருக்கலாம். தலையிலிருந்து ரத்த ஆறு பெருக்கெடுத்துக்கொண்டிருந்தது. அவன் கீழே விழுந்து அதிக நேரமாகியிருக்காது. அருகிலிருந்தவர்கள் உதவுவதற்கு ஓடிச் சென்றார்கள். மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்வதற்கு வாகனங்கள் விரைந்தன.

அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த பிறகும், ரத்த ஆற்றுக்கு நடுவே அந்த இளைஞன் கிடந்த காட்சி மனதை உலுக்கிக்கொண்டே இருந்தது, இருக்கிறது. அந்த இளைஞன் இன்றைக்கு எப்படி இருக்கிறான் என்பது தெரியவில்லை.

காரணம்?

ஆனால், சில விஷயங்கள் என் மனதுக்குள் அலைபாய்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த இளைஞன் குடித்திருந்தானா என்பது தெரியவில்லை. நான் குடிக்கு எதிரி அல்ல. நானும் குடிப்பதுண்டு. ஆனால், குடித்துவிட்டு வண்டியை ஓட்டுவதற்கான பலனை, நிச்சயமாக நாம் முடிவு செய்ய முடியாது. அது மட்டுமல்லாமல், அவன் ஹெல்மெட் அணியவில்லை.

தலை வலிக்கிறது, முடி கொட்டுகிறது, சளி பிடிக்கிறது, பக்கவாட்டில் தெரியவில்லை... ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கு இப்படி ஆயிரம் காரணங்களை அடுக்குகிறோம். ஒரு வேளை குடித்துவிட்டோ அல்லது குடிக்காமலோ ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டியிருந்தால், நிச்சயம் தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காது.

எங்கே போனது?

நல்ல உடை அணிந்திருந்தான், ஓட்டி வந்த வண்டியின் மதிப்பு ரூ. 60,000, கல்லூரியில் படிக்கும் வயதிருக்கும். இத்தனையும் இருந்தும் ரத்த வெள்ளத்தில் அவன் வீழ்ந்து கிடந்த காட்சி, மனதில் சுழன்றுகொண்டே இருக்கிறது.

அடுத்த நாள், அருகிலிருந்த யாரோ அந்தத் தடுப்புக் கற்களுக்கு முன்னால் ஒரு பலகையில் வண்ணமடித்து எச்சரிக்கைத் தடுப்புபோல வைத்திருந்தார்கள். ஒரு உயிர் வீணாக பலியாகவோ, அவதிப்படவோ கூடாது என்று அப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு இருந்த அக்கறைகூட, வண்டி ஓட்டிச் சென்ற அந்த இளைஞன் தன்மீது கொண்டிருக்கவில்லை!

- சுரேஷ், அடையாறு, சென்னை - 20

எங்களுக்கு எழுதுங்களேன்!

எத்தனையோ விஷயங்களை நீங்களும் அன்றாடம் கடந்து போவீர்கள். அடுத்தவருக்குச் சொல்ல வேண்டுமென நினைக்கும் அனுபவங்கள், சம்பவங்கள், புதுமைகள், ஆச்சரியங்களை எங்களுக்கு எழுதுங்களேன். முடிந்தால் ஒளிப்படங்களையும் அனுப்புங்கள். இந்தப் பகுதியில் அது வெளியாகும்.

கடிதத் தொடர்புக்கு
இளமை புதுமை,
தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002.
மின்னஞ்சல் முகவரி: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x