Published : 04 Sep 2015 12:10 PM
Last Updated : 04 Sep 2015 12:10 PM

வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ‘மெட்ராஸ்’ - நடிகர் நந்தகுமார் நேர்காணல்

ஒரு திரைப்படம் வெளியாகும்போது, எந்தத் திரையரங்கு? எத்தனை மணிக் காட்சி என்று மக்களுக்குத் தெரியப்படுத்துபவை அந்தப் படத்தின் போஸ்டர்கள்தான். போஸ்டர் ஒட்டுவதையே ஒரு தொழிலாகச் செய்துவருபவர் நந்தகுமார். போஸ்டர் தொழில் இவருக்குத் தந்த புகழை விட ‘மெட்ராஸ்' படத்தில் வில்லனாக நடித்த பிறகு கிடைத்திருக்கும் அறிமுகம் பெரியது. அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

எவ்வளவு காலமாக போஸ்டர் ஒட்டும் தொழிலில் இருக்கிறீர்கள்?

எனது அப்பா 1951-லிருந்து இந்தத் தொழில்தான் செய்து கொண்டிருந்தார். 1990-லிருந்து நான் எடுத்துப் செய்து கொண்டிருக்கிறேன். ஷங்கரின் ‘சிவாஜி', எஸ்.ஜே. சூர்யாவோட படங்கள் என திரைப்பட போஸ்டர்கள் ஒட்டும் வேலைதான் அதிகம். முக்கியமாக ‘தி இந்து’ நாளிதழின் போஸ்டர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் போஸ்டர்கள், அரசியல் போஸ்டர்கள் இப்படி எல்லாமே நாமதான்.

சினிமா போஸ்டர்கள் ஓட்டியதால் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்ததா?

ரொம்ப வருஷமா இந்தத் துறையில் இருந்தாலும் நடிப்பு ஆர்வம் எனக்குக் கொஞ்சம் கூடக் கிடையாது. நிறைய படங்கள்ல நடிக்கக் கேட்டார்கள், அப்போல்லாம் நான் மறுத்துருக்கேன். ‘மெட்ராஸ்' படத்துல நான் நடிச்சதுக்கு முழுக் காரணம் இயக்குநர் ரஞ்சித்துதான் “இந்த கேரக்டர் நீங்கள் பண்ணினால் நல்லா இருக்கும். தயங்காம பண்ணுங்க” என்று ரஞ்சித் கேட்டார். “ நடிப்பு எனக்கு வராது” என்றேன். “ நான் உங்களை நடிக்க வைக்கிறேன்” என்று ரஞ்சித்துதான் என்னை நடிக்க வைத்தார்.

பல படங்களில் தற்போது நடித்துவந்தாலும், போஸ்டர் ஒட்டும் தொழிலை விடவில்லையே ஏன்?

அதை விட்டு என்றைக்குமே நான் போக மாட்டேன். நல்ல பெயர் எடுத்திருக்கிறோம். அதை இழக்க விரும்பவில்லை. பெரிய தயாரிப்பாளர், சின்ன தயாரிப்பாளர் என்று நான் பார்ப்பதில்லை. என்னை நம்பி வருபவர்களுக்கு அவர்கள் திருப்தியடையுற அளவுக்கு போஸ்டர் ஒட்டிக்கொடுக்கணும் அவ்வளவுதான்.

போஸ்டர் ஒட்டும் தொழிலில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுமாமே?

தினமும் வெவ்வேறு வகையில் பிரச்சினை என்பது இருக்கத்தான் செய்யுது. அதைப் பேசி முடித்துத்தான் ஆக வேண்டும். போலீஸ் பிரச்சினை, ஒரு போஸ்டர் மீது இன்னொரு போஸ்டர் ஒட்டிவிடுவது என்று பல பிரச்சினைகளைத் தினமும் பார்த்துப் பேசி சமாதானமாக முடித்துக்கொள்வோம்.

எந்த மாதிரி வேடங்களில் நடிக்க ஆசை?

நான் எந்த வேடத்துக்கும் ஆசைப்படுறது இல்லை. அதேமாதிரி வர்ற எல்லாப் படத்தையும் ஒப்புக்கிறதுமில்லை. இயக்குநர் ராம் மோகன் படம் ‘திருநாள்', விஷால் - பாண்டிராஜ் படம், ரஜினி - ரஞ்சித் படம் ஆகிய படங்கள்தான் இப்போ பண்றேன்.

போஸ்டர் தொழில், நடிகர் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்குறீங்க போல இருக்கே?

பாண்டிராஜிடம் ‘எனக்குப் படம் பண்ணித்தர்றீங்களா’ன்னு கேட்டேன். அவரும் சரி என்றார். சிம்புவிடம் போய்ப் பேச வைத்தோம். பிறகு சிம்பு நானே தயாரித்துக்கொள்கிறேன் என்றார், நானும் சரி என்று கூறி விலகிவிட்டேன். சரவணனும் நானும் சேர்ந்துதான் 'வில் அம்பு' என்ற படத்தைப் பண்ணியிருக்கிறோம். தொடர்ச்சியாகப் படங்கள் தயாரிப்பதற்கும் திட்ட மிட்டிருக்கிறேன்.

‘மெட்ராஸ்' படத்துக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை மாறி இருக்கிறதா?

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 40 ஆண்டுகளாக இந்த சினிமாவில் இருக்கிறேன். யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். ‘மெட்ராஸ்' படம் பார்த்த பிறகு கிடைத்திருக்கும் வரவேற்பும் மரியாதையும் வேறு. எந்த ஒரு சின்ன கிராமத்துக்குச் சென்றால் கூட ‘மெட்ராஸ்' வில்லன் என்கிறார்கள். விமானத்தில் போகும்போது பெரிய பணக்காரர்கள் பயணம் செய்வார்கள். என் பக்கத்தில் வந்து “உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” என்று கேட்பார்கள். மக்கள் கொடுத்திருக்கும் பாராட்டுதான் மிகவும் மறக்க முடியாதது. இரவு 2 மணிக்கு தெருவில் நடந்து போனால்கூட மக்களுக்குத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x