Published : 08 Sep 2015 12:22 PM
Last Updated : 08 Sep 2015 12:22 PM

வாய்ப்புகளைத் திறக்கும் ‘கேட்’ நுழைவுத் தேர்வு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளில் சேர ‘டான்செட்’ எனப்படும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இதேபோன்று அகில இந்திய அளவிலான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு உதவித்தொகையுடன் எம்இ, எம்.டெக்., எம்.ஆர்க் போன்ற படிப்புகளில் சேர ‘கேட்’ எனப்படும் சிறப்பு நுழைவுத் தேர்வு (Graduate Aptitude Test in Engineering-GATE) எழுத வேண்டும். சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்சர் என 23- விதமான பாடப்பிரிவுகளில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. பி.இ, பி.டெக்., பி.ஆர்க் உள்ளிட்ட பட்டதாரிகள் இதை எழுதலாம். இதன் மதிப்பெண்கள் 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது.

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவது ஒருபுறம் இருக்கட்டும். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் இந்த நுழைவுத்தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டே பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்துக்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கூட, மெக்கானிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய 3 பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டதாரிகளை நிர்வாகப் பயிற்சியாளர் என்ற பதவிக்கு, 2016 ம் ஆண்டு கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தேர்வு செய்ய இருப்பதாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

2016-ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத்தேர்வை பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (Indian Institute of Science-IISC) நடத்தவிருக்கிறது. இதற்கான ஆன்லைன் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 7-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும். தேர்வு முடிவுகள் மார்ச் 19-ந் தேதி வெளியிடப்படும்.

இந்த நுழைவுத்தேர்வுக்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள் ஆன்லைன் மூலமாக ( >www.appsgate.iisc.ernet.in) அக்டோபர் 1-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கேட் நுழைவுத் தேர்வுக்கான தகுதிகள், பாடத்திட்டம், விடைகளுடன் கூடிய முந்தைய ஆண்டு வினாக்கள் உள்ளிட்ட தகவல்களை >www.gate.iisc.ernet.in என்ற இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x