Published : 09 May 2020 09:45 am

Updated : 09 May 2020 09:45 am

 

Published : 09 May 2020 09:45 AM
Last Updated : 09 May 2020 09:45 AM

கோவிட்-19: தமிழகம் செல்லும் பாதை சரிதானா? - மருத்துவர் அமலோற்பவநாதன் நேர்காணல்

covid-19

ச. கோபாலகிருஷ்ணன்

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கோவிட்19 நோயின் தாக்கம் தமிழ் நாட்டில், குறிப்பாகச் சென்னையில் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது. கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தொற்று எண்ணிக்கை 300, 500 என்று அதிகரித்துவருகிறது. சமூக ஊடகங்களிலும் பொது உரையாடல்களிலும் மக்கள் பீதியடைந்திருப்பதைக் காண முடிகிறது.


இந்தச் சூழலில் இந்த நோய்ப் பரவலை நாம் எப்படி அணுக வேண்டும், சிகிச்சை அணுகு முறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கவனப்படுத்திவருகிறார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவரும் தமிழ்நாடு உறுப்புமாற்று அறுவைசிகிச்சைத் திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் அமலோற்பவநாதன். அவரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:

நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். ஒரு மூத்த மருத்துவராக உங்கள் பார்வையில் உண்மை நிலைமை எப்படி உள்ளது?

சென்னையில் கோவிட்19 நோயாளிகளில் 98 சதவீதத்தினருக்கு நோய் அறிகுறி இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். மீதமுள்ளவர்களிலும் தீவிர அறிகுறிகள் தென்படுபவர்கள் மிகச் சிலரே. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான் இருக்கும்.

தீவிர அறிகுறிகள் தென்படும் நோயாளி களுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்த வேண்டியிருக்கும். 3,000 செயற்கை சுவாசக் கருவிகள் தயாராக இருக்கின்றன. அதைக் கையாளத் தேவையான மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இருக்கிறார்கள் என்று 20 நாட்களுக்குமுன் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறினார்.

சென்னையில் 1,000 கருவிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொண்டால்கூட, அது தேவைப்படு பவர்கள் அதிகபட்சம் 10 பேர்தான் இருப்பார்கள். செயற்கை சுவாசக் கருவி தேவைப்படும் அளவுக்கு தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள்தான், இறந்துவிடும் அபாயத்தில் இருப்பவர்கள். இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கும்வரை நாம் எச்சரிக்கையாக இருந்தால்போதும்.

அதனால்தான் ஒவ்வொரு நாளும் எத்தனைப் பேருக்கு நோய்த் தொற்று இருக்கிறது என்று மட்டும் அறிவிப்பதைவிட, எத்தனை நோயாளிகள் தீவிர நோய் அறிகுறிகளுடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் குறைந்த அல்லது மிதமான அறிகுறிகளுடன் இருக்கிறார்கள், எத்தனை பேருக்கு அறிகுறியே இல்லை என்பது போன்ற தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறோம். இந்தத் தகவல்களை அரசு வெளிப்படையாக அறிவிப்பதன் மூலம், மக்களிடம் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்க முடியும்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டதால் கோவிட்19 நோயாளிகளில் பலர் பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பராமரிப்புக் கூடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். சிலருக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதற்கும் அரசு அனுமதி அளிக்கிறது. இதனால் ஆபத்து எதுவும் இல்லையா?

நோய் அறிகுறியில்லாதவர்களை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவர்களைத் தனிமைப்படுத்திவைத்தால் போதும். 14 நாட்களில் குணமடைந்துவிடுவார்கள்.

அறிகுறியுடன் இருப்பவர்களை மூன்றாகப் பிரிக்கலாம். லேசான அறிகுறி என்றால் உடல் வலி, ஜலதோஷம் இருக்கலாம். மிதமான அறிகுறி என்றால் உடல் வெப்பநிலை 100, 101 என்று இருக்கலாம். தீவிர நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் இருக்கலாம். உடல் வெப்பநிலை 103,104 என்று இருக்கும். இந்த மூன்று பிரிவுகளில் முதல் பிரிவினர் செவிலியர்/மருத்துவப் பணியாளரை நியமித்துக்கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வசதி இருந்தால், வீட்டிலேயே இருக்கலாம். குறைந்த-மிதமான அறிகுறி இருப்பவர்களை பொதுக் கூடங்களில் வைக்கலாம்.

அவர்களுக்கு குரோசின் மாத்திரையும் நிறைய குடிநீரும் வேண்டும். மூன்று வேளை உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க வேண்டும். ஒவ்வொரு பொதுக் கூடத்திலும் இரண்டு மூன்று மருத்துவர்கள், 10 செவிலியர்கள் இருந்தால் போதும். இவர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற தீவிரப் பிரச்சினைகள் ஏற்படாதவரை, மருத்துவமனைக்கு மாற்ற வேண்டியதில்லை. அதேநேரம் புற்றுநோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், முதியவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் மிதமான அறிகுறிகள் இருந்தால்கூட, அவர்களை மருத்துவமனையில் வைத்துப் பார்ப்பதுதான் நல்லது. இந்த அணுகுமுறையைக் கடைபிடித்தால் மருத்துவமனைகளில், மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளுக்குத் தடை ஏற்படாமல் இருக்கும். கோவிட் 19 சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் விரைந்து நிரம்பாது.

கோவிட் 19 நோயாளிகள் எண்ணிக்கை யைக் குறைப்பதற்கு என்னதான் வழி?

நோய்ப் பரவல் சங்கிலியை உடைப்பதுதான் (Breaking the chain) சிறந்த வழி. கேரளத்தில் அதைத்தான் வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறார்கள். தொற்று உள்ளவர்கள் எல்லோரையும் தனிமைப்படுத்தி, கண்காணிப்பில் வைத்து நோய்த்தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையை கேரளத்தில் அடைந்துவிட்டார்கள். இந்த நிலையை அடைந்தால், நோய்ப்பரவலைத் தடுத்துவிட்டதாக அர்த்தம்.

இதற்கு ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல. எத்தனை நாட்கள் ஊரடங்கை நீட்டித்தாலும், அதை நீக்கும்போது நோய்த்தொற்று மீண்டும் பரவத் தொடங்கிவிடும். நிறைய பேரைப் பரிசோதித்து, தொற்றுள்ள அனைவரையும் தனிமைப்படுத்துவதுதான் முக்கியம். 15 பேர், 20 பேருக்கு தொற்றிருக்கும்போது தனிமைப் படுத்துவது எளிது. அதுவே ஆயிரக்கணக்கில் போகும்போது கடினம். அதனால்தான் தொடக்கத்திலிருந்தே பரிசோதனைகளை அதிகரியுங்கள் என்று பல தரப்பினரும் வலியுறுத்திவருகிறார்கள்.

இப்போது பரிசோதனை எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறதே?

இதை ஏன் முதலிலேயே செய்திருக்கக் கூடாது என்பதுதான் கேள்வி. மார்ச் மாதத் தொடக்கத்தில், எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் ரஷ்யாவிலிருந்து தோஹா வழியாக சென்னைக்கு வந்தார். அந்த வேளையில் தோஹாவில் 20 பேருக்கு கோவிட்-19 இருந்தது. இங்கு வந்த பிறகு, அவருக்கு லேசான இருமல் இருந்தது. மருத்துவமனைகளுக்குச் சென்று கோவிட்19 பரிசோதனை செய்துகொள்ள அவர் சென்றிருந்தபோது, பரிசோதிக்க மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். இதுபோல் எத்தனை பேர் அந்த நேரத்தில் அறிகுறியில்லாமல் வைரஸ் தொற்றுடன் இருந்திருப்பார்கள்?

இந்த வைரஸ் விமானத்தில் பயணிப்பவர்கள் வழியாகத்தான் வருகிறது. விமானத்தில் வந்தவர்கள் எல்லோரையும் முதலிலேயே தனிமைப்படுத்திப் பரிசோதித்திருந்தால், வைரஸ் இந்த அளவுக்கு நிச்சயமாகப் பரவியிருக்காது. எப்படியிருந்தாலும் நடந்து முடிந்ததைப் பற்றிப் பேசிப் பயனில்லை. இப்போது பரிசோதனைகள் அதிகரித்திருப்பது வரவேற்கப்பட வேண்டியது.

இப்போது ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப் பட்டுள்ளதால், வைரஸ் பரவல் அதிகரிக்குமா?

அதை உறுதியாகச் சொல்ல முடிய வில்லை. இப்போது செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படட் நிலையில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஊரடங்குத் தளர்வுக்குப்பின் ஒரு சில நாட்களில் இந்த எண்ணிக்கை பத்தாக அதிகரித்தால், மீண்டும் ஊரடங்கு பிறப்பித்தாக வேண்டும். இதனால்தான் மையப்படுத்தப்படாத முடிவெடுக்கும் அதிகாரம் அவசியம் என்று பல தரப்பினரும் வலியுறுத்திவருகிறார்கள். அந்தந்த பகுதிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்று முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும். அதேநேரம், உரிய நிபுணர்களுடன் கலந்தாலோசித்துவிட்டுதான், இது தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

கோவிட்19-யைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. ஆனால், எச்சரிக்கை அவசியம். எந்த வேளையிலும் சோப்பு/கிருமிநாசினி போட்டுக் கைகழுவுதல், வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியவற்றை எந்த நிலையிலும் கைவிட்டுவிடக் கூடாது. இது குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் தொடர்பாக, நிபுணர்களிடையே மாறுபட்டக் கருத்து இருக்கலாம். ஆனால், இதுபோன்ற கொள்ளை நோய்க் காலங்களில் அரசு சொல்வதை முறையாகப் பின்பற்றுவதுதான் அனைவருக்கும் நல்லது.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in


கோவிட்-19Covid 19தமிழகம்மருத்துவர்அமலோற்பவநாதன் நேர்காணல்ஊரடங்குத் தளர்வுபரிசோதனைவைரஸ்மக்கள்சோப்புகிருமிநாசினிசெயற்கை சுவாசக் கருவி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x