Published : 15 Apr 2020 08:52 AM
Last Updated : 15 Apr 2020 08:52 AM

கதை: கிளியக்கா… கிளியக்கா...

ஓவியம்: கிரிஜா

கன்னிக்கோவில் ராஜா

தூங்குமூஞ்சி மரத்தின் பொந்தில் கிளி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்திருந்தது. அந்தக் குஞ்சு அழகாக இருந்தது. எப்போதும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தது.

கிளிகள் வசிக்கும் அந்த மரத்தின் அடியில் இருந்த புற்றில் ஒரு பாம்பு வசித்தது. பசித்தால் ஒவ்வொரு மரமாக ஏறி பறவைகளின் முட்டைகளை விழுங்குவதை வேலையாகச் செய்துகொண்டிருந்தது. எவ்வளவு உயரமான கிளையில் முட்டையிட்டாலும் ஏறி வந்து விழுங்கிவிடும் அந்தப் பாம்பு.

பறவைகள் கவலைப்பட்டன. பாம்பிடமிருந்து தப்பிக்க அந்தப் பொந்தின் வாசலை களிமண்ணால் அடைத்து, சிறிய துவாரத்தின் வழியே சென்று முட்டையிட்டிருந்தது கிளி. அதனால்தான் அந்த முட்டை மட்டும் பாம்பிடமிருந்து தப்பித்து, குஞ்சாகவும் பொரிந்துவிட்டது.

கிளிக்குப் பயமாக இருந்தது. ஆனால், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் குஞ்சைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைத்தது.

ஆனால், இந்தக் குஞ்சு வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் தானே?

அந்த மரத்தின் மற்றொரு கிளையில் பாம்புக்குத் தெரியாமல் மைனாவும் குஞ்சு பொரித்திருந்தது. அதன் குஞ்சுகள், “அம்மா,இந்த வாயாடி கிளியக்கா பேசிக்கிட்டே இருக்கு. அந்தப் பாம்பு மேலே வரும். அது நமக்கும் ஆபத்தாகிவிடும்” என்று பயந்தன.

“குஞ்சுகளே, நீங்கள் சொல்வது சரிதான். நான் கிளியிடம் இதைப் பற்றிப் பேசிவிட்டு வருகிறேன். அதுவரை பாதுகாப்பாக இருங்கள்” என்று சொல்லிவிட்டு, கிளி பொந்து அருகே வந்தது.

“அடடே! மைனாவா! வா..வா.. குஞ்சுகள் நலமா?” என்று அன்போடு வரவேற்றது கிளி.

“இதுவரை நலம் தான். இனிமேலும் நலமாக இருக்க வேண்டும் என்றால் அது உன் குஞ்சிடம் தான் இருக்கு. வாய் ஓயாமல் உன் குஞ்சு பேசிக்கொண்டே இருந்தால் பாம்பு வராதா? அதனால் தங்களுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று என் குஞ்சுகள் பயப்படுகின்றன” என்று கவலையுடன் சொன்னது மைனா.

“நீ சொல்வதும் சரிதான். அந்தப் பாம்பு எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம். ஏதாவது செய்கிறேன்” என்று மைனாவை அனுப்பி வைத்தது கிளி.

கிளி அம்மாவும் மைனா அம்மாவும் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தது கிளிக்குஞ்சு.

பொந்துக்குள் நுழைந்த கிளி, “இப்ப, உனக்குப் பறக்கும் அளவுக்கு இறக்கை முளைத்துவிட்டது. அதனால நாளைக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து பறக்கணும். தயாராக இரு” என்று சத்தமாகச் சொன்னது கிளி.

பாம்பின் காதில் இது விழுந்தது. “சே,கிளிக்குஞ்சு வந்து இத்தனை நாள் ஆகுது. இன்னும் நாம அதைப் பிடிக்கலையே! நாளைக்குக் காலையில முதல் வேலையா அதைச் செய்யணும்” என்று சற்று உரக்கவே சொல்லிவிட்டது பாம்பு.

இதை அருகில் இருந்த வண்டு கேட்டுவிட்டது. ’இந்தச் செய்தியைக் கிளியிடம் சொல்லலாம் என்றால் இருட்டிவிட்டதே! அதிகாலை முதல் வேலையாகச் சென்று சொல்லிடலாம்’ என்று நினைத்துக்கொண்டே உறங்கியது வண்டு.

பொழுது விடிந்தது. “வா,சூரியன் வருவதற்குள் பறக்க ஆரம்பிக்கணும்” என்று அவசரப்படுத்தியது கிளி.

பொந்தைவிட்டு வெளியே வந்து மரக்கிளையில் அமர்ந்த குஞ்சு, பறக்க முயற்சி செய்தது. கீழே விழப் போனாலும் அருகில் இருந்த மற்றொரு கிளையைப் பிடித்துக்கொண்டது. இதுபோல பல முறை முயற்சி செய்தது. ஆனால், பறக்க முடியவில்லை.

“அம்மா, என்னால இன்னைக்குப் பறக்க முடியல” என்று வருத்தப்பட்டது குஞ்சு.

“முதல் நாள் அப்படித்தான் இருக்கும். நீ இந்தக் கிளையில் அமர்ந்தபடியே பறப்பதற்கு முயற்சி செய். நான் அதற்குள் உணவு சேகரித்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்தது கிளி.

“கிளிக்குஞ்சே, உன் அம்மா எங்கே? நீ ஏன் பொந்தை விட்டு வெளியே வந்து உட்கார்ந்து இருக்கே?” என்று கேட்டது வண்டு.

“அம்மா உணவு எடுக்கப் போயிருக்காங்க. நான் பறப்பதற்கு முயற்சி செய்றேன்” என்றது குஞ்சு.

“நான் சொல்வதைக் கவனமாகக் கேள். பாம்பு எப்ப வேணாலும் இங்கே வரலாம். பொந்துக்குள் பத்திரமா இருந்துக்க” என்று சொல்லிவிட்டுச் சென்றது வண்டு.

பயந்த குஞ்சு பொந்துக்குள் சென்று பதுங்கியது.

நேற்று இரவு அந்தக் கிளிகள் இரண்டும் பறக்கப் போவதாகப் பேசிக்கொண்டன. நான் மரம் ஏறி ஏமாந்து போவதைவிட, அங்கு கிளிக்குஞ்சு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசித்தது பாம்பு.

’அட, அதுதான் வாயாடிக் கிளியாச்சே! குரலை மாற்றிப் பேச்சுக் கொடுக்கலாம்’ என மரம் மீது ஏறியது பாம்பு.

மெல்ல ஊர்ந்து மரத்தின் முதல் கிளையை அடைந்தது. மூன்றாவது கிளையில்தான் கிளியின் பொந்து இருந்தது.

பறவையைப் போல் குரலை மாற்றி,

“வாயாடிக் கிளியக்கா..

வாயாடிக் கிளியக்கா...

வா.. வந்து என்னைப் பாரக்கா

வா.. வந்து என்னைப் பாரக்கா” என்று அழைத்தது, பாம்பு.

பொந்தின் வாசலுக்கு வந்த குஞ்சு, “யாராது?” என்று கேட்டது.

“ஆஹா! தந்திரம் பலித்துவிட்டது. குஞ்சு உள்ளேதான் இருக்கு” என்று மகிழ்ந்தது பாம்பு.

“வாயாடிக் கிளியக்கா..

வெளியே வந்து பாரக்கா

உன் நண்பன் நானக்கா

நன்றாகப் பாரக்கா” என்று மீண்டும் பாடியது.

சிறிதும் யோசிக்காத குஞ்சு,

“கிளையை விட்டுப் பறப்பேனே

மலையை நானும் அளப்பேனே

தேடி வந்த நண்பரை

யார் என்று பார்ப்பேனே” என்று பாடிக்கொண்டே பொந்தைவிட்டு வெளியே வந்தது.

அதே நேரம் பாம்பும் மரம் ஏறி வந்துகொண்டிருந்தது.

“ஆ! பா... ம்... பு... பாம்பு...” என்று சொல்லிக்கொண்டே தன் இறக்கையை வேகமாக அசைத்தது குஞ்சு.

மெல்ல பறந்து, ஒரு வட்டம் போட்டு மீண்டும் இறக்கையை வேகமாக அசைத்து வானை நோக்கிப் பறந்தது குஞ்சு.

“கிளையை விட்டுப் பறந்தேனே

மலையை அளக்கப் போறேனே

பகைவன் என்று அறிந்தேனே

நான் பக்குவமாக நடந்தேனே” என்று பாடிக்கொண்டே மகிழ்ச்சியாகப் பறந்தது குஞ்சு.

வாயாடிக் கிளி பறப்பதை ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது பாம்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x