Published : 24 Mar 2020 09:48 am

Updated : 24 Mar 2020 09:48 am

 

Published : 24 Mar 2020 09:48 AM
Last Updated : 24 Mar 2020 09:48 AM

கரோனாவும் கல்வியும்: விடுமுறையைப் பயனுள்ளதாக்கும் இணையவழிக் கல்வி

corona-virus

முகமது ஹுசைன்

பொதுவாகவே விடுமுறைகளுக்கு, ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும் இயல்பு உண்டு. குறிப்பாக மாணவர்களுக்கு. விடுமுறை என்ற உடன் கற்றல் தரும் இறுக்கம் தளர்ந்து, உவகையும் உற்சாகமும் மாணவர்களிடம் குடியேறிவிடும். ஆனால், கரோனா பரவும் அச்சத்தால் விடப்பட்டி ருக்கும் இந்த அசாதாரண விடுமுறையை அப்படிக் கருத முடியாது.


கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கல்வி வளாகங்கள் மட்டுமல்லாமல்; திரையரங்குகளும் பெரும் வணிக வளாகங்களும் (மால்கள்) மூடப்பட்டுவிட்டன. குழந்தைகள் கூடி விளையாடும் பூங்காக்களில்கூட தற்போது பூட்டுகள் தொங்குகின்றன.

அச்சமும் அவநம்பிக்கையும் உலகெங்கும் பரவியிருப்பதால், வெளியே செல்ல முடியாமல் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அலுப்பூட்டும் தெரிந்த முகங்கள், சலிப்பூட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் / வீடியோ கேம் என வீடே சிறையாகிவிட்டதால், கற்றலைவிடக் கூடுதல் இறுக்கத்தை இந்த விடுமுறை அவர்களுக்கு ஏற்படுத்தி யுள்ளது. இந்த அலுப்பையும் சலிப்பையும் வெல்வதுடன், அறிவையும் திறனையும் மேம்படுத்தி, விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் வல்லமை இணையவழிக் கல்விக்கு உண்டு.

இணையவழிக் கல்வி என்றால் என்ன?

திறன்மிக்க ஆசிரியர்களின் விளக்க உரைகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட கல்வி வீடியோக்கள் அதற்கான இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். மேலும், அந்தத் தளங்களில் கல்வி மட்டுமில்லாமல் தொழில்நுட்பம், பொது அறிவு, பொழுதுபோக்கு ஆகியவை குறித்த விளக்க வீடியோக்களும் இருக்கும். உதாரணத்துக்கு ஒளிப்படம் எடுப்பது எப்படி?; கணினியை ஒருங்கிணைப்பது எப்படி? ; சில கைப்பேசி ஆப்களைப் பயன்படுத்துவது எப்படி?

ஒரு தேர்ந்த ஆசிரியரால் மட்டுமே எந்த ஒரு கஷ்டமான பாடத்தையும் சுவாரஸ்யமிக்கதாக / இலகுவானதாக மாற்ற முடியும். பள்ளியையோ கல்லூரியையோ தேர்ந்தெடுக்க முடிந்த மாணவர்களாலும் பெற்றோராலும் அந்தப் பள்ளியின் ஆசிரியரைத் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், இணையவழிக் கல்வியில் என்ன படிக்கலாம்? எங்குப் படிக்கலாம் என்பதுடன், எந்த ஆசிரியரிடம் படிக்கலாம் என்பதையும் நீங்கள் தீர்மானிக்க முடியும். முக்கியமாக ஆசிரியரை மாற்றிக்கொள்ளவும் முடியும்.

இணையவழிக் கல்வி வகைகள்

பாடங்களை இணையத்தின் வழிதான் படிக்கிறோம் என்றாலும், அந்த வீடியோக்கள் எடுக்கப்பட்ட காலம், ஆசிரியருடனான நேரடித் தொடர்பு ஆகியவற்றைச் சார்ந்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகையில் பாட வீடியோக்கள் முன்பே எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இரண்டாம் வகையில் வீடியோ லைவ் ஆக, அதாவது நடப்பு காலத்தில் நிகழ்கிற ஒன்றாக இருக்கும். இந்த இரண்டு வகைக் கல்விதான் இணையத்தில் மிகவும் பிரபலம்.

மூன்றாம் வகையில் வீடியோவில் படிப்பது மட்டுமல்லாமல், அவ்வப்போது அந்த ஆசிரியரையும் நேரில் சந்திக்கும்படி இருக்கும். இது ‘கலப்புக் (ஹைபிரிட்) கல்வி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கலப்புக் கல்வியை மேல் நாடுகளில் பிரபலப் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்துகின்றன.

எப்படிப் பயன்படுத்தலாம்?

எல்லா இணையதளங்களிலும் இத்தகைய விளக்க வீடியோக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால், ஆசிரியரின் திறன், அவருடைய வீடியோக்களுக்கு இருக்கும் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் சில இணைய தளங்களில் வீடியோக்களுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைத்து வீடியோக்களின் ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பீடுகள், அவற்றின் அருகில் ஒளிர்ந்துகொண்டிருக்கும்.

அதன் அடிப்படையில் நீங்கள் விரும்பும் பாடங்களுக்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் ஏமாற்றம் அளிக்காது. ஒருவேளை அவை கட்டண வீடியோவாக இருந்தால், கட்டணம் செலுத்தும்முன் அதன் மாதிரி வீடியோக்களைப் பார்த்துவிட்டு வாங்குவது நல்லது. ஏனென்றால், எல்லோருக்கும் பிடிக்கும் ஆசிரியர், உங்களுக்கு பிடிக்காமலும்கூடப் போகலாம்.

கல்வியின் வடிவமைப்பு

உதாரணத்துக்கு ஜாவா ஸ்கிரிப்ட்டை எடுத்துக்கொள்வோம். இதற்கான வீடியோ மூன்று மணி நேரம் செல்வதாக இருக்கலாம். மூன்று மணிநேரம் திரைப்படம் பார்ப்பதே அலுப்பாக மாறியுள்ள இன்றைய காலத்தில், மூன்று மணி நேரப் படிப்பு சம்பந்தப்பட்ட வீடியோ அலுப்பானதாக இருக்குமா? இருக்காது, இந்த வீடியோ ஒரு நொடிகூட அலுப்பு ஏற்படாதபடி நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முதலில் ஜாவா ஸ்கிரிப்ட் 20 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். பிறகு அதன் ஒவ்வொரு பகுதியும் பத்துத் தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அதாவது ஒரு தலைப்புக்கு ஒன்றரை நிமிடம், பத்து தலைப்புகளை உள்ளடக்கிய ஒரு பகுதிக்கு 9 நிமிடங்கள், 20 பகுதிகளை உள்ளடக்கிய மொத்தப் பாடத்துக்கு 180 நிமிடங்கள்.

இதில் ஆசிரியரின் முகத்தை மட்டும் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. இணையம்வழி என்பதால், அந்தப் பாடத்துக்குத் தொடர்புடைய சில வீடியோக்களும் உங்களுக்கு விளக்கமளிக்கப் பயன்படுத்தப்படும். இது உங்கள் கற்றலை எளிதாக்கி அலுப்பை நீக்கிப் படிப்பைச் சுவாரசியமானதாக மாற்றும்.

வீடியோ கேம்போல் தேர்வு

இணையவழிக் கல்வியிலும் தேர்வுகள் உண்டு. ஆனால், அந்தத் தேர்வுகள் உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்வதற்கானவை. எனவே, புற அழுத்தம் ஏதுமின்றி, வீடியோ கேம் விளையாடுவதைப் போன்று எளிதாகவும் விளையாட்டாகவும் தேர்வு எழுதி மகிழலாம். ஒவ்வொரு தலைப்புக்கும் ஒன்றரை நிமிடத்துக்கு ஒரு முறை, ஒரு நிமிடமே பிடிக்கும் ஒரு சிறு தேர்வு இருக்கும். அந்தத் தேர்வு எளிதானதாகத்தான் இருக்கும்.

ஒருவேளை ஏதேனும் கேள்விக்குத் தவறாக விடையளிக்க நேர்ந்தால், அந்தக் கேள்விக்கு விடை இருக்கும் வீடியோவின் பகுதிக்கு உங்களை அழைத்துச் சென்று விளக்கமளித்து, மீண்டும் தேர்வுக்கு அழைத்து வரும்படி அதன் வடிவமைப்பு இருக்கும். எப்படி ஒவ்வொரு தலைப்புக்கும் தேர்வு இருக்கிறதோ, அதைப் போல் ஒவ்வொரு பகுதியின் மொத்தப் பாடத்துக்கும் தனித் தனித் தேர்வு இருக்கும்.

எங்கே படிக்கலாம்?

இணையவழிக் கல்விக்கு பல இணையத்தளங்கள் உள்ளன. Udemy, Coursera, EdX, EduSAT, Thinkific, Teachable, Learnworlds, Kajabi, LearnDash, Podia, Ruzuku, Academy of Mine, WizIQ, Skillshare, LinkedIn Learning, Treehouse - Khan academy, NPTEL, Udacity இவற்றில் முக்கியமானவை. மேலும், உலகின் பிரசித்தி பெற்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இணைய வழிக் கல்வியை வழங்குகின்றன. இணையவழிக் கல்வியில், முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அதில் பெரும்பான்மையான பாடங்களை இலவசமாகவே படிக்க முடியும். கொஞ்சம் பொறுமை, அக்கறை, ஈடுபாடு போன்றவை தேவை.

ஸ்மார்ட் கல்வி

இன்று கூரை ஒரு பொருட்டல்ல, மூடிய கதவுகள் ஒரு பொருட்டல்ல, தூரமும் ஒரு பொருட்டல்ல. வேண்டிய அனைத்தும் நம் வீடு தேடி வரும் வசதி இருக்கிறது. நண்பர்களை, உறவுகளை நேரில் பார்க்காமலேயே அவர்களுடன் உறவாட முடிகிறது. மூடிய அறைக்குள் இருந்தபடியே புது நட்புகளை உருவாக்கிக்கொள்ள முடிகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியும் இணைய வசதியின் கட்டணக் குறைவும் இணைந்து நிகழ்த்திய மாயாஜாலம் இது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் லைட், ஸ்மார்ட் பாதுகாப்பு சாதனம், ஸ்மார்ட் வீடு என நீளும் பட்டியலில் இணைந்து நம் கல்வியும் ‘ஸ்மார்ட்’டாகிவிட்டது. இந்த விடுமுறைக்கு அதைத் தேர்வுசெய்தால், அறிவைப் பெருக்கு வதுடன், கரோனாவிலிருந்தும் நம்மை அது பாதுகாக்கும்.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in


கரோனாவும் கல்வியும்Corona VirusCoronaவிடுமுறைஇணையவழிக் கல்விகோவிட்-19கல்வியின் வடிவமைப்புவீடியோ கேம்ஸ்மார்ட் கல்விமனநிலைகல்வி வளாகங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author