Published : 22 Mar 2020 07:18 AM
Last Updated : 22 Mar 2020 07:18 AM

பாடல் சொல்லும் பாடு 09: கற்பு என்பது பெண்மையின் திண்மையா?

‘கற்பு நிலை என்னவென்பது எனக்குத் தெரியும். பிறர் புகுத்திக் கற்புநிலை ஓங்குவது அனுபவ சாத்தியமான காரியமன்று’ - புதுமைப்பித்தனின் ‘இந்தப் பாவி’ ராதிகா ஆப்தேவின் நடிப்பில் வெளியான குறும்படம் அகல்யா. விவாதிக்கப்பட்ட அளவுக்குப் பாராட்டவும் பட்ட படம். தவறு செய்யாதபோதும் தண்டனைக்குள்ளாகி, கல்லாகச் சமைந்து சாபமீட்புக்காகக் காத்துக்கிடக்கிற அகலிகையல்ல அவள். பிறழ்வுக்குக் காரணமான இந்திரர்களைச் சிலையாக்கும் திறம்படைத்தவள்.

காலந்தோறும் ‘கற்பு’ என்பது பெண்ணை அதிகாரத்துடன் இயக்கிக்கொண்டிருக்கிறது. சங்க இலக்கியத்தில் கற்பு எனும் சொல் களவு வாழ்க்கைக்குப் பிந்தைய திருமண வாழ்வைச் சொல்கிறது. கற்பு என்றால் ‘கற்பிக்கப்படுதல்’ என்கிறார் நச்சினார்க்கினியர். ‘கணவனைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லையென்பதால் அவனை வழிபடுக என்று இருவீட்டுப் பெரியவர்கள் கற்பித்தலால் கற்பெனப்பட்டது’ என்பது அவர் விளக்கம்.

கற்பின் அடையாளம்

சங்க காலம் முதல் கற்பின் குறியீடாக அருந்ததியை இலக்கியங்கள் காட்டும் காரணத்தை உணர நமக்குச் சில கதைகள் துணைசெய்யும். அருந்ததி, சப்தரிஷி பத்தினியரில் ஒருத்தி. வானின் வடதிசையில் இன்றும் விண்மீனாக இருக்கிறாள் என நம்பப்படுபவள். ‘அம்மி மிதித்து அருந்ததி பார்த்து’ என்பதும் இவளைத்தான். பரிபாடலில் வரும் முருகனின் பிறப்பு பற்றிய கதையில் அருந்ததி இடம்பெறுகிறாள். சிவனுக்கும் உமையவளுக்கும் தோன்றிய கருவைச் சிதைத்துவிடுமாறு இந்திரன் ஒரு வரத்தை வேண்டுகிறான். அதற்கு உடன்பட்டு சிவனும் கருவைச் சிதைக்க, அந்தக் கருவில் உண்டான குழந்தைதான் பின்னாளில் தேவர்களின் சேனாதிபதி முருகனாவார் என்று தீர்க்க தரிசனத்தால் அறிகிறார்கள் சப்தரிஷிகள். சிதைந்த கருத்துண்டுகளைச் சேகரித்து வேள்வியில் இடுகிறார்கள். வேள்வியில் இடப்பட்ட கருவை ரிஷி பத்தினியர் எழுவருள் அறுவர் பெற்றுக் கர்ப்பம் தரிக்கிறார்கள். அருந்ததி மட்டும் அதை ஏற்கவில்லை. கடவுளின் கருவாக இருந்தாலும், வேறொருவரின் கருவைத் தாங்குவது தன் கற்புக்கு உகந்ததல்ல என்று நினைக்கிறாள்.

மனத்தாலும் கெடாத கற்பு

ரிஷி பத்தினியர் மீது காதல்வயப்பட்டு அவர்களை அடைய நினைக்கிறான் அக்கினி. அவன் மனைவி சுவாகா தன் கணவனின் இந்த எண்ணத்தால், ரிஷிகளின் பெரும் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என நினைக்கிறாள். ரிஷி பத்தினியர் எழுவரில் அறுவராகவும் மாற்றுரு கொண்டு தன் கணவனைக் கூடி அவன் காமத்தைத் தணிக்கிறாள். ஆனால், அவளால் அருந்ததியாக மட்டும் மாற முடியவில்லை. இப்படி மனத்தினால்கூட நெருங்க முடியாத கற்புக்குரியவளாக இருந்தாள் அருந்ததி. அவளே பிற்காலத்தில் கற்புடை மகளிரைக் குறிக்கும் குறியீடாக ஆனாள்.

கண்ணகியைச் சொல்லும் இளங்கோ, ‘தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்’ என்றும் ‘சாலி ஒரு மீன் தகையாள்’ என்றும் அருந்ததிக்கு நிகரானவளாகக் காட்டுகிறார். கம்பரும் சீதையைக் குறிப்பிடும்போது, ‘அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே!’ என்று பாராட்டுகிறார். கற்பு எனும் சொல்லைக் கன்னித்தன்மையுடன் பொருத்திக் கண்டதும், பிற ஆடவரின் நெஞ்சு புகாத் தன்மையை வற்புறுத்தியதும், கணவனைத் தெய்வமாகக் கொண்டு இல்லறம் பேணித் தன்னையும் தன் கணவனையும் காத்துக்கொள்ளும் வல்லமையைச் சொன்னதும் பிற்காலத்தைய உடைமைச் சமூகத்தின் நெருக்கடிகளிலிருந்து தோன்றியவையே. சங்க காலத்திலும் அதற்கு முந்தைய தாய்வழிச் சமூகத்திலும் திருமணத்துக்கு முந்தைய காதலும் கூடலும் அனுமதிக்கப்பட்டிருந்தன.

ஆதிரையின் பெருங்கற்பு

அற இலக்கியங்கள் பெண்ணின் கற்பே மழையைப் பெய்விக்கும் ஆற்றலைக் கொண்டது என்றன. கணவனைத் தொழுது எழும் பத்தினியர் சொன்னால் மழை பெய்யும் என்கிறது வள்ளுவம். சிலம்பும் கண்ணகியின் கற்பின் ஆற்றலுக்கு நெருப்பு கட்டுப்பட்டதைக் காட்டுகிறது. மணிமேகலையோ, அறம் தழைப்பதற்கும் கற்பே அடிப்படை என்று ஆதிரையின் வழியாகக் காட்டியது.

அமுதசுரபியைப் பெற்றதும் முதல் பிச்சையை மணிமேகலை, கற்புக்கரசியாகிய ஆதிரையிடம் பெறுகிறாள். கணவன் கணிகையிடம் சேர்ந்து செல்வம் இழந்த போதும், தன் பொறையுடைமையால் காத்திருந்தவள் ஆதிரை. கலம் உடைந்ததில் உன் கணவனும் மாண்டான் என்று அறிந்தோர் சொல்ல, கணவனின்றி வாழ்வது தகாதெனக் கருதித் தீயில் இறங்குகிறாள். தீ அவளைத் தீண்டவே இல்லை. தீயும் சுடாத பாவியானேன், என் கற்பு வாழ்வில் கணவனைப் பேணவில்லையா, பெற்றோரைப் பராமரிக்கவில்லையா, விருந்தினரை எதிர்கொள்ளவில்லையா என்ன பிழை செய்தேன் என்று முறையிட, “உன் கணவன் மீண்டு வருவான்” என்று அசரிரீ, சொன்னவுடன் ஆசுவாசம் கொள்கிறாள்.

ஊரே அவள் கற்பின் திண்மையைப் போற்றுகிறது. அத்தகு கற்பின் பேராற்றல் கொண்ட ஆதிரை இட்ட பிச்சைதான் அமுதசுரபியின் வளத்தைப் பெருக்கியது. இங்கே கற்பெனும் பண்பு கன்னித் தன்மையை மட்டுமின்றி, இல்லத்தைப் பேணி, இல்லானைத் தெய்வமென்று கருதி, அந்தணர் பேணலும் அறவோர்க்களித்தலும், பெற்றோர் காத்தலுமாகப் பெண்ணின் கடமைகளுடன் விரிவு பெறுகின்றன.

நவயுகக் குந்திகள்

ஒரு கணம் அந்தக் கந்தர்வனின் பிரகசிப்பை நினைந்து திரும்பும்போது நெறிபிறழ்ந்தவளாகி விடுகிறாள் ரேணுகா தேவி. தலையும் உடலும் வேறாக இன்றும் எல்லம்மனாகவும் சில பகுதிகளில் மாரியம்மனைப் போன்று மழை தரும் தெய்வமாகவும் வணங்கப்பட்டு வருகிறாள். மனதினும் மாசற்றவளையே கற்புக் கடவுளாக இச்சமூகம் காணும். என் சொல்லினால் சுடுவேன் என்ற சீதையின் கற்பு, நிலத்துடன் பெயர்த்தெடுக்கப்பட்டு கம்பனால் புனிதம் கொண்டதென்றாலும், உலகுக்காகப் பரிசோதிக்கப்பட்டதே.

திருமணத்துக்கு முன்பே காதலெனும் பெயரிலும் பலாத்காரத்தின் பெயரிலும் தரித்த கருவோடு புறக்கணிப்பின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறார்கள் இந்த யுகத்தின் குந்திகள். பாரதத்தின் குந்தியைப் போல் குழந்தையைப் பேழையில் வைத்தனுப்பிவிட்டு மீண்டும் கன்னித் தன்மை பெறும் வாய்ப்பற்றவர்களாக, குப்பைத் தொட்டிகளிலும் சாக்கடைகளிலும் வீசியெறிந்து தம் ‘களங்கம்’ துடைக்க முயல் கிறார்கள். சிலர் கல்லாய்க் கிடக்கிறார்கள்; தலையற்ற உடல்களாகிறார்கள். இன்னும் சிலரோ தீக்கிரையாகிறார்கள்; பிறழ்வுகளின் தடங்களைச் சுமக்காததால், ஆண் உடல் தன்னைக் கற்புடையதாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

சத்தியவான் சாவித்திரி நினைவாகக் காரடையான் நோன்பைப் பெண்கள் சிலர் இன்றும் பின்பற்றுகிறார்கள். சாவித்திரிகள் பெருகிப் போனார்கள். இப்போது டாஸ்மாக் என்னும் எமனிடமிருந்து கணவனை மீட்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கற்பு உடலுடன் தொடர்புடையதா மனத்துடன் தொடர்புடையதா என்று விவரிக்க முனைவதற்கு முன்பு, கற்பு என்பது சுயேச்சையானது என்பதைப் பெரியாரின் வரிகளில் கண்டடைகிறோம். ‘வலிமை யுள்ளவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மம் இருதரப்புக்கும் சமமானதாக இருக்க முடியாது, அடிமைத் தனத்தையே கொண்டிருக்கும்’ என்ற அவரின் கருத்து, நடைமுறையில் கற்பெனும் சொல்லை உடலுடன் மட்டும் குறுக்கிப் பார்க்கும் நம் பிற்போக்குத்தனத்தின் மீது சமத்துவ ஒளியைப் பாய்ச்சுகிறது.

“உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை.

“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்றாள் அகலிகை.

“நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா; உள்ளத்தைத் தொடவில்லையானால்? நிற்கட்டும்; உலகம் எது?” என்றாள் அகலிகை.

(புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ சிறுகதையிலிருந்து)

(பெண் வரலாறு அறிவோம்)
- கவிதா நல்லதம்பி, உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: janagapriya84@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x