Published : 01 Mar 2020 11:06 AM
Last Updated : 01 Mar 2020 11:06 AM

அஞ்சலி - தலிப் கெளர் டிவானா: எளியவர்களின் வாழ்க்கையைத் தீட்டியவர்

கமலாலயன்

பஞ்சாபி மொழியின் ஆகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர், தலிப் கௌர் டிவானா. 2020 ஜனவரி 31 அன்று, பிற்பகலில் மறைந்தபோது அவருக்கு வயது 84. பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள ரப்போன் கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் சந்த் கவுர், காகாசிங்.

பஞ்சாபி மொழிக்குத் தனது இலக்கியப் படைப்புகளால் வளம் சேர்த்த படைப்பாளி டிவானா. ‘இதுதான் நம் வாழ்க்கை’ என்ற நாவலுக்காக இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது இவருக்கு 1968-ல் வழங்கப்பட்டது. 1963-ல் பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்த இவர், பின் அங்கேயே பேராசிரியரும் ஆனார். பஞ்சாபி மொழித் துறைத் தலைவராகவும், மொழிகள் புலத் தலைவராகவும் பணியாற்றி ஒய்வுபெற்றவர். பல்கலைக்கழக மானியக்குழுவின் தேசிய விரிவுரையாளராக ஓராண்டு பணிசெய்தவர்.

அடக்குமுறைக்கு எதிரான குரல்

கல்விக்கும், இலக்கியத்துக்கும் இவர் ஆற்றிய சேவைக்காக 2004-ல் பத்ம விருது வழங்கப்பட்டது. நாட்டில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை நசுக்கும் போக்குக்கு எதிராகப் போராடும் எழுத்தாளர்களுக்குத் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் விதமாகவும், சகிப்புத்தன்மை இல்லாமல் மோதல் போக்கு அதிகரித்துக்கொண்டே போவதைக் கண்டித்தும் பத்ம விருதை 2015 அக்டோபர் 14 அன்று திருப்பிக் கொடுத்துவிட்டார்.

டிவானாவின் கணவர் பூபிந்தர் சிங் கவிஞர், பேராசிரியர். மகன் சிம்ரன்ஜித் சிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறையில் துணைப்பேராசிரியர். டிவானா 33 நாவல்கள், 14 சிறுகதைத் தொகுதிகள், 3 சுயசரிதை நூல்கள், 2 இலக்கிய விமர்சன நூல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். இவருடைய நூல்கள் ஆங்கிலத்திலும் தமிழ் உள்பட இந்திய மொழிகளிலும் மிகப் பரந்த அளவில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

டிவானாவின் நாவல்களிலும் சிறுகதை களிலும் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைத்துமே பெரும்பாலும் கிராமப்புற அடித்தட்டு மக்களே. வெள்ளந்தியான இயல்பு கொண்டவர்கள் அவர்கள். வேட்கைகள் நசுக்கப்பட்டு, ஆர்வங்கள் ஒடுக்கப்பட்டு நலிந்திருக்கும் மக்கள். துயரமும் முரண்களுமே இவருடைய புனைவின் முதன்மையான கூறுகள். சிக்கலான, உள்ளார்ந்த இரட்டை மனநிலையில் உழன்று தவிக்கும் பெண்களின் உளவியல் இவருடைய முக்கியப் பாடுபொருள்.

பெண்களை மையப்படுத்திய படைப்பு

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவருடைய நாவல், ‘நான் யார்?’. ராஜீந்தர் சிங் இதை மொழியாக்கம் செய்திருக்கிறார். இது திருமணமான, படித்த ஓர் இளம்பெண்ணின் கதை. அன்றாட வாழ்க்கையின் ஒரே மாதிரியான அலுப்பூட்டும் சூழலில் மூச்சுமுட்டுவதாக உணர்ந்து சலித்துப்போகிறாள் அவள். சுய அறிதலை அடைவதற்கு முற்பட்டு உலகியல் வாழ்க்கையைத் துறக்க முடிவு செய்கிறாள். ஹரித்வாரில் சாதுக்களும் சாத்விகளும் அடங்கிய குழுவொன்றுடன் போகிறாள். ஆனால், அங்கிருந்து உண்மையைத் தேடும் தனது ஆர்வம் மிக்கப் பயணத்தில் தன்னந்தனியாகப் போவது என்ற முடிவுடன் விலகி நடக்கத் தொடங்குகிறாள்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான, ‘இதுதான் நம் வாழ்க்கை’ (ஏக் ஹமாரா ஜீவனா) நாவல் தமிழில் தி.சா.ராஜுவால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘நேஷனல் புக் டிரஸ்ட்’டின் அனைத்திந்திய நூல் வரிசை வெளியீடு இது. ஒரு சிறிய கிராமத்தில் எப்போதும் போதையில் மூழ்கிக் கிடக்கும் நாராயண் அம்லியின் வாழ்க்கையில் எதிர்பாராமல் குறுக்கிடுகிறாள் பானோ. தன் தம்பியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் எருமை, வயல் உள்பட கொஞ்சநஞ்ச சொத்தையும் விற்று மருத்துவம் பார்க்கிறார்கள் பானோவின் வீட்டார். சிகிச்சை பயனளிக்காமல் அவன் இறந்துபோகிறான். அப்பாவும் வயலை இழந்த ஏக்கத்திலேயே படுத்த படுக்கையாகி விடுகிறார். பானோவுக்குத் திருமணமாகிறது. கணவன் சரவண் மிகவும் நல்லவர்தான்; ஆனால், அவருடைய நான்கு சகோதரர்கள் பானோவிடம் தவறாக நடக்க முற்படுகிறார்கள். அதனால் அவர்கள் தனிக்குடித்தனம் வந்து மகிழ்ச்சியாகப் போகிறது இல்லறம். நிலத்தகராறில் சரவண் அடிபட்டு மரணம் அடைந்துவிடுகிறான். தந்தையே பானோவை வேறு ஓர் ஆணுக்கு விற்க முயல்கிறார். பானோ மனம் உடைந்து கங்கையில் குதித்துத் தற்கொலைக்கு முயல்கிறாள். அங்கேதான் நாராயண் அம்லி அவளைக் காப்பாற்றிக் கூப்பிட்டு வந்திருக்கிறான்.

தீ மிதி வாழ்க்கை

நாராயண் தீராக்குடியன். அவனுடன் போராடி மாற்றிவிட பானோ முயல்கிறாள். ஓரளவு வெற்றியடைந்து வீட்டின் பொருளாதார நிலையைச் சரிசெய்து முன்னேறி வருகிறாள். ஆனால், நாராயணின் சகோதரி வந்து போன பின் பானோவின் வாழ்க்கையில் மீண்டும் புயல் வீசுகிறது. நாராயண் பானோவிடம் மிகவும் அன்புடன் இருந்தாலும், அவனுக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக இன்னொரு திருமணம் செய்ய ஏற்பாடாகிறது. ஊரில் ஜோகர், கோயில் பூசாரி என்று பல ஆண்களின் அத்துமீறல்கள் வேறு. எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு துயரங்களால் அலைக்கழிந்துகொண்டிருக்கும் பானோவுக்கு நாராயணின் இரண்டாம் மனைவி பாக்வந்தியின் நடத்தை மிகுந்த வேதனையளிக்கிறது. நாராயணின் நண்பன் ஒருவனிடம் பானோவை ஒப்படைப்பதற்கு அவன் முடிவுசெய்துவிடுகிறான். இதற்குள் நாராயணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிடுகின்றன. அந்தக் குழந்தைகளிடம் தன் அன்பைக்காட்டி மகிழும் பானோ, வேற்று ஆணுடன் வந்து வெளியூருக்குப் புறப்படத் தயாராகும்படி சொல்லும் நாராயணின் செயலால் நொந்துபோகிறாள்.

பானோவின் வாழ்க்கையைத் ‘தீ மிதி வாழ்க்கை’ என்று ஓரிடத்தில் மூன்றே வார்த்தைகளில் சித்தரித்திருக்கிறார் டிவானா. பஞ்சாபி நாவல் இலக்கியப் போக்குகள் பற்றிய முன்னுரையில், விமர்சகர் மோஹன்சிங், தலிப் கௌர் டிவானா பற்றிய மதிப்பீட்டைக் கச்சிதமாகக் கூறியிருக்கிறார்: “பஞ்சாபி நவீனங்களில் சிறப்புமிக்க மரபு வடிவம் ஒன்று தற்போதுதான் உருவாகி இருக்கிறது. அது தலிப் கௌர் டிவானா, குருதயாள் சிங் ஆகியோர் மூலம்தான் வடிவம் பெற்றது என்று கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். தலிப் கெளர் டிவானாவும் அக்கினிப் பரீட்சை, நமது பாதை, என் அடையாளம், இதுதான் நம் வாழ்க்கை, ஆதவனும் கடலும் ஆகிய ஐந்து புதினங்களை எழுதியிருக்கிறார். இவருடைய படைப்புகளில் வரும் பெண்கள் அனைவரும் வாழ்க்கைப் போக்கைக் கண்டித்து எதிர்நீச்சல் போடுபவர்களாக இருப்பார்கள். ஆனால், ‘இதுதான் நம் வாழ்க்கை’யில் வரும் நாயகி பானோ, நீரின் போக்கிலேயே மிதந்து போனாள். எதிர்ப்படும் இன்னல்களைப் பொருட்படுத்துவதில்லை. உயிருள்ள சவமாக அவள் நடந்துகொள்ள முயல்கிறாள். எங்கேயாவது தப்பித் தவறி அவளுடைய வாழ்க்கை வேர் பிடித்து மண்ணில் ஒட்ட முயலும்போது மீண்டும் ஒரு பேரலை வரும்; அவளை நிலைகுலைக்கும்.

பெண்ணுக்கு மறுக்கப்படும் நீதி

இந்தப் புதினத்தின் மூலம் அவர் சொல்ல விரும்பும் செய்தி ஒன்றிருக்கிறது. அது, இந்தச் சமுதாயத்தில் பெண்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்பதே. வாழ்க்கை என்ற பெருவிளையாட்டில் அவள் வெறும் பகடை. எங்கே வேண்டுமானாலும் நகர்த்தலாம். அந்த நிலை இன்றைய புதிய கருத்தோட்டங்களாலும் சிறிதும் மாறுபட்டு விடவில்லை என்பதை அவர் கவிதை மொழியில் ஒரு சோகப் பின்னணியுடன் காட்டியிருக்கிறார்.

தான் விரும்பாமலே வந்த கிராமத்தில், தான் சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவந்த ஒரு வீட்டைவிட்டு நியாயமற்ற காரணங்களுக்காக வெளியேற்றப்படும்போது, பானோ சமுதாய நியதிகள் அனைத்தையும் துறந்து, நடைப் பிணமாக வெளியேறிச் செல்கிறாள். குறையாடையுடன், தலையில் முக்காடு தரிக்காமல் வெறுங்காலுடன் அவள் வெளிநடக்கும் வர்ணனை, நம் நெஞ்சைப் பிழிகிறது. நமது அறவுணர்வைச் சீண்டி, தார்மிக ஆவேசத்தை வெளிக்கொணர்கிறது. அது படைப்பாளியின் மிகப் பெரிய வெற்றி.

தலிப் கௌர் டிவானாவின் இறுதி நாள்களில், இரண்டு விஷயங்கள் நம் கவனத்திற்குரியவை. ஒன்று, அவர் பணியாற்றிய பஞ்சாபி பல்கலைக்கழகம், அவர் பணி ஒய்வு பெற்ற பின்னரும் இறுதிவரை தொடர்ந்து அவரும் குடும்பத்தினரும் அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலேயே கொடுக்கப்பட்டிருந்த வீட்டில் வசிக்க அனுமதித்திருந்தது. இரண்டு, அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், மாநில அரசின் சார்பில் மருத்துவச் செலவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமது மண்ணின் படைப்பாளிக்கு அந்த மாநில மக்கள் செலுத்திய மரியாதை இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x