Published : 16 Feb 2020 11:20 AM
Last Updated : 16 Feb 2020 11:20 AM

தெய்வமே சாட்சி 04: காதல் போயின் சாதல் சரியா?

நெல்லை மாவட்டத்தில் ஒரு காலத்தில் வடுகர் சாதியினர் அதிகம் வசித்துவந்த வடுகச்சிமதில் என்கிற கிராமத்தில் அரச குடும்பத்தின் மகளாகப் பிறந்தவர் சீனிமுத்து. பக்கத்திலிருந்த வள்ளியூரில் இதே வடுகர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனை சீனிமுத்து மனதார விரும்பினார். அவனைக் காணாமலே அவனைப் பற்றி அறிந்து, அது காதலாக மலர்ந்து பூத்துக் குலுங்கியது. இதேபோல், அந்த இளைஞனும் இவரைக் காணாமலே இவர் மீது மையல் கொண்டிருந்தான். ஒருவர் மீது ஒருவர் கொண்ட இந்தக் காதல் பற்றி இருவருக்குமே தெரியாது.

ஒரு கட்டத்தில் காதல் மீதூற சீனிமுத்து தன் படைகளை அனுப்பி வள்ளியூர் இளைஞனைக் ‘கவர்ந்து’ வர ஆணையிட்டார். அவருடைய வீரர்களும் அவ்விளைஞனைச் சுற்றி வளைத்து ஒரு பல்லக்கில் ராஜ மரியாதையுடன் ஏற்றி வடுகச்சி மதிலுக்குக் கொண்டுவந்தனர். வரும் வழியில் அந்த இளைஞன் தன்மான உணர்வு பொங்க தான் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுவதை அவமானமாகக் கருதினான். தன்னைக் கடத்துவது யார் என்று வீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, “அவளா என்னைக் கடத்தி வரச்செய்தாள்?” என்று கேட்டுத் தற்கொலை செய்துகொள்கிறான்.

சேதி கேள்விப்பட்ட சீனிமுத்து மனமுடைந்து கதறினார். பின்னர் ஒருவாறு தேற்றிக்கொண்டு, “அவன் பிணத்தை இங்கே கொண்டு வாருங்கள்” என ஆணையிட்டார். மணமாலையை அப்பிணத்துக்கு இட்டு, அவன் மீது விழுந்து தன்னுடைய உயிரைப் போக்கிக்கொண்டார். பார்த்திருந்த ஊர் மக்கள் அலறி, அரற்றி அழுதனர். அவள் செத்து விழுந்த அந்த இடத்தில் ஒரு கல் தூண் தானே எழுந்து வளர்ந்தது. அக்கல்தூணுக்கு சீனிமுத்து அம்மன் என்று பெயர்சூட்டி மக்கள் வழிபடத் தொடங்கினர். பிற்காலத்தில் அந்த ஊரிலிருந்து வடுகர் இனத்தவர் இடம்பெயர்ந்து சென்றுவிட, தேவர், நாயுடு இனத்தவர் சீனிமுத்து அம்மனை வழிபட்டுவருகின்றனர்.

காய்க்காத அத்திமரம்

பின்னர் அக்கல்தூணுக்கு இடையில் அத்தி மரம் ஒன்று வேர்ப்பிடித்து வளர்ந்து பெரிய மரமாகி நின்றது. அந்த மரத்தில் பூ பூக்கும்; ஆனால், காய் காய்க்காது. இன்றுவரை அம்மரம் காய்ப்பதில்லை என அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். சீனிமுத்து அம்மனோடு சேர்த்து இந்த மரமும் வழிபாட்டுக்கு உரியதாகி நிற்கிறது.

பூக்கிறது ஆனால், ஏன் காய்ப்பதில்லை என்று கேட்டால், “அவள் அவனுக்காகத்தானே பூத்து நின்றாள்? அதனால் பூக்கிறது. அதேநேரம் அவனோடு வாழ்ந்து குழந்தைப் பேறு பெறவில்லை அல்லவா? அதனால் மரம் காய்ப்பதில்லை” என்கின்றனர் அவ்வூர் மக்கள்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராக வடுகச்சி மதில் இப்போது உள்ளது. வள்ளியூர் என்பது நாங்குநேரியை அடுத்த ஒரு வருவாய் வட்டம். அரச குடும்பங்கள் என்பது மக்கள் ஏற்றிச் சொன்ன கற்பனையாக இருக்கலாம். நடந்த நிகழ்வு மட்டுமே நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிய கதைகளில் இருக்காது. மக்கள் தங்கள் நம்பிக்கைகள், அதீத உணர்வுகள் போன்றவற்றைக் கலந்துதான் கதையாகச் சொல்வார்கள். சொல்லச் சொல்ல சில சேதிகள் புதிதாகச் சேரும். சில சேதிகள் காணாமல் போகும். அக்கதை நமக்குக் கிடைக்கும் காலத்தைப் பொறுத்து அதன் தன்மை அமையும்.

“தெய்வம் என்பது மனிதனின் படைப்பூக்கத்துக்கு நிலைக்களனாக இருப்பதையும் காணலாம். தனக்குரிய, தனக்குத் தேவையான தெய்வத்தைத் தானே உருவாக்கிக்கொள்ளுதல், அதற்குரிய வழிபாட்டு முறைகளை ஏற்படுத்துதல் ஆகியவை இந்தப் படைப்பு மனநிலையின் செயல்பாடுகள்” என ‘நாமக்கல் தெய்வங்கள்’ என்கிற தொகுப்பு நூலின் முன்னுரையில் முனைவர் பெருமாள் முருகன் மிகச் சரியாகக் குறிப்பிடுவார்.

ஆண் மனத்தின் வெளிப்பாடு

“கதை என்பது உண்மையை ஒட்டிப் புளுகுவது” என்று ஓரிடத்தில் புதுமைப்பித்தன் குறிப்பிடுவார். உண்மையை ஒட்டிப் புனைவதையே அவர் அவ்விதம் குறிப்பிடுகிறார். புனைவு என்பது நூறு சதவீதம் கற்பனையாக இருக்க முடியாது. அக்கதை எழுகிற காலத்தில் சமூகத்தில் நிலவும் ஆதிக்கச் சிந்தனைகள் அப்புனைவை வழிநடத்தியே தீரும். தெய்வக்கதைகளைப் புனைவதும் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகக் கடத்துவதும் பெரும்பாலும் பெண்கள் என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெண்களின் பரிவுணர்வு, இயற்கை நியாயம், தாய்மையுணர்வு, வாழ்க்கை குறித்த நிச்சயமின்மை, விலகி வீட்டிலோர் பொந்தில் அடைபட்ட வாழ்நிலை உருவாக்கும் அச்சவுணர்வு, ஏதேனும் மாயம் நிகழ்ந்து வாழ்க்கை நன்றாக ஆகிவிடாதா என்கிற ஏக்கம் போன்ற எல்லாவித உணர்வுகளுக்கும் இத்தெய்வக்கதைகளில் இடம் இருப்பதைக் காணலாம்.

சீனிமுத்து அம்மன் கதையில் அடித்தளமாக இருப்பது, காதலித்தவளாகவே இருந்தாலும் தான் கடத்தப்பட்டதை, அதுவும் ஒரு பெண்ணால் கடத்தப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியாத ‘ஆண் மனம்’தான். எத்தனையோ ஆயிரம் பெண்களைச் சிறையெடுத்து மணம் முடித்த ஆண்களின் வீரம் காவியங்களாகப் போற்றப்படும் இந்த மண்ணில்தான் சீனிமுத்து என்கிற பெண்ணின் கதை நிகழ்ந்துள்ளது. காதல் கண்ணை மறைக்க, அவள் அவனைக் கடத்தி வரச்செய்தாள். காதலையும் தாண்டி ஆணாதிக்கச் சிந்தனை அவன் கண்ணை மறைத்ததால் தற்கொலை செய்துகொள்கிறான்.

சீனிமுத்துவின் மாரடைப்பும் மரணமும் உணர்வுக் கொந்தளிப்பில் நிகழ்ந்துவிடுகின்றன. ஆண் இல்லாமல் பெண் எப்படி வாழ்வது என்கிற நினைப்பும் காதலித்தவன்/காதலித்தவள் கிட்டாவிட்டால் மரணம்தான் கதி என்கிற வழிவழியாக வந்த அரைவேக்காட்டுச் சிந்தனையும் இக்கதைக்குள் உள்ளடங்கி இருக்கின்றன. வாழ்க்கையை மேலும் அழகாக மாற்றுவதற்குத்தான் காதலே ஒழிய, வாழ்க்கையையே பலிகொடுப்பதற்கா காதல்? தோல்வியிலும் மரணத்திலும் முடியும் காதலைத் தெய்விக நிலைக்குக் கொண்டுசெல்லும் சமூக உளவியல் இன்றுவரை தொடரத்தான் செய்கிறது. அதில் ஓர் உடைப்பை ஏற்படுத்தும் உரையாடல்களை சீனிமுத்து அம்மன் போன்ற தெய்வக்கதைகளை முன்வைத்து நாம் தொடங்க வேண்டும்.

இக்கதையில் வரும் அத்தி மரம் பூப்பதும் காய்க்காமல் இருப்பதும் பற்றிய செய்தி, பெண் பிறப்பின் நோக்கமே பூப்பதும் காய்ப்பதும்தான் என்கிற ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு. மனிதர்களின் பிற்போக்கான சிந்தனை இங்கே மரத்தின் மேல் ஏறி நிற்கிறது.

(கதை சொன்னவர்: வி.விவேகானந்தன், வடுகச்சி மதில். சேகரித்தவர்: ஜி.ராஜன்)

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x