Published : 11 Feb 2020 12:24 pm

Updated : 11 Feb 2020 12:25 pm

 

Published : 11 Feb 2020 12:24 PM
Last Updated : 11 Feb 2020 12:25 PM

தொல்லியல் அறிவியல்: சிந்துவெளியில் பேசப்பட்ட மொழி திராவிடமா, ஆரியமா?

archeology

ஆதி வள்ளியப்பன்

மானிட நாகரிகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவது ‘இண்டஸ் வேலி சிவிலைசேஷன்’ என்ற சிந்துவெளி நாகரிகம். இந்தத் தளம் கண்டு பிடிக்கப்பட்ட நாள் தொடங்கி, அறிவியல், வரலாறு, தொல்லியல் உள்ளிட்ட துறைசார் வல்லுநர்கள் இந்த நாகரிகத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள இன்றுவரை தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 2020 மத்திய பட்ஜெட் உரையின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று இதற்குப் புதுப் பெயரிட்டுள்ளார்; ‘ஷ்ரேனி’ என்ற வர்த்தகச் சங்கங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் சிந்துவெளி முத்திரைகளில் காணக்கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிந்துவெளி வரிவடிவம் குறித்து முதன்மை ஆய்வுகளை மேற்கொண்ட மறைந்த ஐராவதம் மகாதேவன், பின்லாந்து ஆய்வாளர் அஸ்கோ பர்போலா ஆகியோரே நிதி அமைச்சர் அறிவித்த கருத்துகள் சார்ந்த திட்டவட்டமான முடிவுவை எட்டியிருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிந்துவெளியின் மொழி எது? சிந்துவெளி முத்திரைகளில் பதிக்கப்பட்டுள்ள எழுத்துகள் எதைச் சுட்டுகின்றன? இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை தேடி கடந்த நூறாண்டுகளாக ஆராய்ச்சிகள் தொடர்ந்துவருகின்றன; திட்டவட்டமான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை.

அதேநேரம் சிந்துவெளி தொடர்பான மரபணுத் தரவுகள், தொல்லியல், மொழியியல் ஆய்வுகள் ஆகிய அனைத்தும் ஒரே முடிவை நோக்கியே நகர்ந்துள்ளன. இந்த மூன்று வெவ்வேறு துறை சார்ந்த ஆய்வுகளும் சுட்டும் ஒரே திசை, சிந்துவெளியில் பேசப்பட்டது பூர்வ திராவிட மொழி (Proto-Dravidian language) என்பதுதான்.

ஈரானின் ஸாக்ரோஸைச் (Zagros) சேர்ந்த உழவர்கள், ஆதி இந்தியர்கள் ஆகியோரின் கலப்புதான் சிந்துவெளி நாகரிக மக்கள் என்பது நவீன மரபணுத் தரவுகள் முன்வைக்கும் முடிவு. தொல்லியல் ஆதாரங்களும்அகழாய்வுச் சான்றுகளும் இந்த முடிவை வலுப்படுத்துகின்றன.

ஈலாமைட் – திராவிட மொழிகள்

எழுத்து முறை 5000-5500 ஆண்டுகளுக்கு முன்புதான் உருவானது. ‘கியூனிஃபார்ம்’ எனப்படும் சித்திர எழுத்து முறையில் எழுதப்பட்ட மெசபடோமிய நாகரிக மொழிகள் எவையும் இன்றைக்குப் பேசப்படுவதில்லை. ஸாக்ரோஸ் பகுதியைச் சேர்ந்த உழவர்கள் சிந்துவெளி நாகரிகத்துக்கு இடம்பெயர்ந்து வந்தார்கள்.

அப்படி வந்தபோது, அவர்கள் கொண்டுவந்த மொழி பூர்வ ஈலாமைட்டாக (Elamite) இருக்க வேண்டும். இன்றைக்கும் பலூசிஸ்தானில் வாழும் பிராஹூய் (Brahui) இனக்குழு மக்கள் பிராஹூய் என்ற திராவிட மொழியையே பேசுகிறார்கள். (அவர்களின் பூர்வ தொழில் கால்நடை மேய்த்தல்) பிராஹூய் மொழி ஈலாமைட் மொழியுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டது.

சிந்துவெளி நாகரிகம் குறித்த தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டு இன்னும் நூறாண்டுகள்கூட முடியவில்லை. ஆனால், அதற்கு முன்பே ஈலாமைட் - திராவிட மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது. தமிழ் எழுத்து மொழிக் கொள்கைகளின் அடிப்படையிலேயே ஈலாமைட் எழுத்து மொழியும் இயங்குவதாக பிரிட்டனைச் சேர்ந்த மொழியியலாளர் எட்வின் நாரிஸ் 1853-ல் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு மூன்று ஆண்டுகள் கழித்து வெளியான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலில் ராபர்ட் கால்டுவெல்லும் இதே தொடர்பை வலியுறுத்தியுள்ளார்.

எள் தொடர்பு

திராவிட மொழி ஆராய்ச்சியாளரான முனைவர் டேவிட் டபிள்யு. மெக்ஆல்பின், பூர்வ ஈலாமோ - திராவிட மொழிகள் குறித்த ஆய்வுக் கட்டுரையை 1981-ல் எழுதினார். 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஈலாமைட் அழிந்துவிட்டது; என்றாலும், தன்னுடைய ஆய்வுக்கு 250 ஈலாமைட் வேர்ச்சொற்களை எடுத்துக்கொண்டார். அவற்றில் 40 சதவீத வேர்ச்சொற்கள் இரண்டு மொழிக் குடும்பத்திலும் பொருந்திப் போயின.

சிந்துவெளி நாகரிகத்திலிருந்து மெசபடோமியாவுக்கு முக்கியத் தாவரம் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டது. அந்தத் தாவரம் எள். மெசபடோமிய நாகரிகத்தின் முதன்மை மொழிகளில் ஒன்றான அக்காடியனிலும் திராவிட மொழிகள் அனைத்திலும் இந்த எண்ணெய் வித்துத் தாவரத்தின் பெயர் இன்றைக்கும்கூட எள் என்றே வழங்கப்படுகிறது.

இந்தத் தொடர்பே சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் பண்டைய திராவிட மக்கள்தாம் என்ற கருதுகோளை வலுப்படுத்துகிறது என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் பிராங்க்ளின் சி. சவுத்வொர்த். இப்படி மரபணுத் தரவுகள், தொல்லியல், அகழாய்வுச் சான்றுகள் வலியுறுத்தும் திராவிடத் தொடர்பை சர்வதேச மொழியியல் அறிஞர்களும் தங்கள் ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்துகிறார்கள்.

ஐராவதம் மகாதேவனின் முடிவு

உலகம் போற்றும் தமிழ்த் தொல்லியல் அறிஞரான ஐராவதம் மகாதேவன், சிந்துவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவை ‘The Indus Script: Text, Concordance and Tables’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். சிந்துவெளி எழுத்துகள் குறித்த ஆராய்ச்சிகளில் அந்த நூல் ஒரு மைல்கல்.

“சிந்துவெளியின் மொழி பூர்வ திராவிடம்தான் என்பதற்கான ஆதாரங்கள் என்னுடைய ஆய்வில் கிடைத்திருக்கின்றன. சிந்துவெளி வரிவடிவத்தை முழுமையாகக் கண்டறிந்துவிட்டதாக நான் கூறமாட்டேன். அதேநேரம் சிந்துவெளி முத்திரைகள் திராவிட மொழித் தன்மையைப் பிரதிபலிக்கின்றன” என்று ஐராவதம் மகாதேவன் மற்றொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல் அஸ்கோ பர்போலா தொடங்கி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன், ‘எர்லி இந்தியன்ஸ்’ நூலாசிரியர் டோனிஜோசப் வரை சிந்துவெளி எழுத்துகள் குறித்து ஆதாரப் பூர்வமாக எழுதியிருக்கிறார்கள். மொழி, பண்பாட்டு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட இவர்களின் விரிவான ஆய்வுகளின் மூலம் சிந்துவெளியில் பேசப்பட்டது பூர்வ திராவிட மொழிதான் என்பது நிறுவப்பட்டுள்ளது.

அப்படியானால் சிந்துவெளி மக்கள் எப்போது தென்னிந்தியாவுக்கு வந்தார்கள்? ஸாக்ரோஸிலிருந்த கால்நடை மேய்ப்பர்கள் சிந்துவெளிக்கு வந்த பிறகு, தென்னிந்தியப் பகுதிகளுக்கும் 5,000 ஆண்டுகளுக்கு முன்னதாகக் குறிப்பிட்ட அளவுக்கு வந்திருக்க வேண்டும். அதிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சிந்துவெளி நாகரிகம் சரியத் தொடங்கியது.

அந்த நிலையில், சிந்துவெளி மக்களும் தென்னிந்தியாவில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தவர்களுடன் கலந்ததால் திராவிட நாகரிகம் தழைத்திருக்க வேண்டும். அவர்கள் பேசிய மொழிகளின் வேர் ஈரானில் இருந்து கிளைத்திருப்பதற்கான சாத்தியங்களையே பெரும்பாலான ஆய்வுகள் சுட்டுகின்றன என்பதில் இருவேறு கருத்தில்லை.

சரஸ்வதி ஆறு எது?

காகர் (Ghaggar) ஆறுதான் சரஸ்வதி ஆறு என்று இன்றைக்கு ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த ஆறு, சிவாலிக் மலைப் பகுதியில் தோன்றி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், பாகிஸ்தானின் சோலிஸ்தான், சிந்து ஆகிய பகுதிகளில் பாய்ந்தது. முன்பு காகர் என்றும் தற்போது ஹக்ரா (Hakra) என்றும் இந்த ஆறு குறிப்பிடப்படுகிறது.

சிந்துவெளி நாகரிகம் சிந்து நதியில் மட்டுமல்லாமல் ஹக்ராவின் கரைகளிலும் செழித்தது. இந்த ஹக்ராதான் பண்டைய சரஸ்வதி ஆறு; இதைக் கண்டடைவதன் மூலம் ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்லர் என்ற கூற்றுக்கு நிரூபணமாக முன்வைக்க முயலப்படுகிறது.

வேதங்களில் முதலாவதாகக் கருதப்படும் ரிக் வேதத்தில், மலைச்சிகரங்களையே தகர்க்கக்கூடிய பேராறாக சரஸ்வதி போற்றப்படுகிறது. ஆனால், ஹக்ராவோ மலைச்சிகரங்களைத் தகர்க்கும் பேராறு அல்ல; பருவமழையால் உயிர்பெறும் பருவகால ஆறாகவே இருந்திருக்கிறது.

ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுவதைப் போல், ஹக்ரா பேராறாக இருந்திருந்தால், ஆண்டு முழுவதும் நீர் பாய்ந்த ஜீவநதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், பருவமழை தப்பியதாலேயே வறண்டு, பிறகு மறைந்தது.

4,200 ஆண்டுகளுக்கு முன்பு பருவமழைப் பற்றாக்குறையால் ஆறுகள் வறண்டதாலேயே எகிப்து, மெசபடோமியா, சீனா, இந்தியா ஆகிய பகுதிகளில் தழைத்த நாகரிகங்கள் ஒரே காலகட்டத்தில் சரிவைக் கண்டன. இதே காரணத்தால்தான் சிந்துவெளியும் சரிந்தது. சர்வதேச ஸ்டிராடிகிராபி (பாறைப்படிவியல்) ஆணையம் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

அப்படியானால் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறு எது? ஆப்கானிஸ்தானைக் கடந்தே ஆரியர்கள் இந்திய நிலப்பகுதிக்கு வந்துசேர்ந்தார்கள். அப்படி வந்தபோது அங்கிருந்த ஹராவைதி (Harahvaiti) ஆற்றையே சரஸ்வதி என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பதற்கான சாத்தியம் அதிகம். இந்தோ-ஈரானிய மொழிகளில் ‘ச’ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் ‘ஹ’ என்ற எழுத்தால் மாற்றப்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

சிந்து எனப்பட்டது ஹிந்து என்று மாறியது இப்படித்தான். அதைப் போலவே ஹராவைதி, சரஸ்வதி ஆகிவிட்டது. இமாலயப் பனி உருகுதலால் ஆண்டு முழுவதும் நீரைப் பெறும் ஜீவநதி இது. இன்றைக்கு அர்கான்தப் (Arghandab) என்றழைக்கப்படும் ஹராவைதி, ரிக் வேதம் குறிப்பிடுவதுபோல் உண்மையிலேயே பேராறுதான்.

நன்றி: டோனிஜோசப் எழுதிய ‘எர்லி இந்தியன்ஸ்’ நூல்
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

சிந்துவெளிபேசப்பட்ட மொழிதிராவிடம்ஆரியம்தொல்லியல் அறிவியல்Archeologyதிராவிட மொழிகள்சரஸ்வதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author