Published : 10 Feb 2020 12:58 PM
Last Updated : 10 Feb 2020 12:58 PM

எண்ணித் துணிக: கம்பெனியை கரையேற்றும் கலாச்சாரம்!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

கோயில் விக்ரகத்தை எத்தனை அழகாய் அலங்காரம் செய்து ஏற்றினாலும், பல்லக்கு தானாய் கிளம்பி தெருவில் பவனி வராது. அதை தூக்கிச் செல்ல ஆட்கள் வேண்டும். எப்படி தூக்குவது, எந்த திசையில் செல்வது, என்ன வேகத்தில் செல்வது என்று அவர்களுக்குத் தெளிவாய் தெரிவிக்கப்பட வேண்டும்.

சமீபத்தில் உருவான ஸ்டார்ட் அப் முதல் பேரன் பேத்தி எடுத்த பன்னாட்டு கம்பெனிகளை நடத்தும் விதமும் கிட்டத்தட்ட இதேபோலத்தான். ஸ்டார்ட் அப் ஐடியா எத்தனை அமர்க்களமாய் இருந்தாலும் அதன் விதியின் பெரும் பகுதி அதை சுமந்து செல்ல நியமிக்கப்படும் ஊழியர்கள் கையில் இருக்கிறது. சரியான ஆட்களை சரியான இடத்தில் அமர்த்தினால் மட்டுமே சரியான திசையில் ஸ்டார்ட் அப் சரியாய் பயணிக்கும். அதைச் சரியாய் செய்யும் பொறுப்பு ஸ்டார்ட் அப் ஓனரான உங்கள் கையில்தான் இருக்கிறது.

டீமை உருவாக்குவது என்பது திறமையான ஊழியர்களைத் தேடிப் பிடித்து வேலையில் அமர்த்துவது மட்டுமல்ல. திறமை மட்டும் பத்தாது. அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாய் ஒருமுகத்தோடு உழைக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் இணைப்பு முக்கியம்.

இதற்குத் தேவை கம்பெனிக்கென்று பிரத்யேக கலாச்சாரம். கம்பெனி கலாச்சாரம் என்பது அக்கம்பெனியை வழி நடத்திச் செல்ல, ஊழியர்களை ஒன்றிணைத்து ஒற்றுமையாய் பணி செய்ய வகை செய்யும் கார்ப்பரேட் சூழல். கம்பெனியின் விஷன், மிஷன், அதை வழி நடத்தும் விழுமியங்கள், தினப்படி நடவடிக்கைகள், செயல்பாட்டு ஸ்டைல் இதன் கலவைதான் கலாச்சாரம்.

கம்பெனிக்கு கலாச்சாரமா என்று கேட்காதீர்கள். நம் குடும்பத்திற்கே கலாச்சாரம் உண்டு. அது வெளிப்படையாக வீட்டிலுள்ளவர்களால் பேசப்படாவிட்டாலும் குடும்பத்துக்குள் எவ்வகையான நடத்தை அனுமதிக்கப்படும், எந்த விஷயங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது என்று குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் சூழல்தான் கலாச்சாரம். அதுபோலத்
தான் கார்ப்பரேட் கலாச்சாரமும்.

கம்பெனி கலாச்சாரம் என்ன என்பதை விளக்குவது கடினம் என்றால் அதை உருவாக்குவது அதை விட கடினம். கம்பெனி கலாச்சாரம் என்பது விளையாட்டு விஷயமல்ல என்பதை விளையாட்டிலிருந்தே ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம். ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியைப் பாருங்கள்.

ஐபிஎல்லை பல முறை வென்றவர்கள். வெல்லவில்லை என்றாலும் ஃபைனல் வரையாவது தவறாமல் வந்துவிடுவார்கள். ஐபிஎல் என்பது ஏழு அணிகள் ஃபைனலில் யார் சிஎஸ்கேவுடன் ஆடப்போவது என்று தங்களுக்குள் போட்டி போடும் விளையாட்டு என்று வேடிக்கையாக கூறுவார்கள். இந்தியாவில் எந்த மூலையில் சிஎஸ்கே ஆடினாலும் நம்மூர் கிராமங்களில் திருவிழா அன்று மாமன் மேல் மஞ்ச தண்ணீர் கொட்டி விளையாடுவது போல் மஞ்ச சட்டை சகிதம் வந்து அன்பை பொழியும் ரசிகர் கூட்டம் கொண்ட அணி சிஎஸ்கே. சூப்பர்ஸ்டார் சொல்வது போல் இது சேர்த்த கூட்டமல்ல, அன்பால் தானாய் சேர்ந்த கூட்டம்!

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி இதுவே என்று ரசிகர்கள் முதல் வல்லுனர்கள் வரை போற்ற காரணம் என்ன? தல தோனி இருந்தாலும் பெரிய சூப்பர்ஸ்டார்ஸ் இருக்கும் அணி என்று இதை சொல்ல முடியாது. 20-20 என்ற இளைஞர்களுக்கான ஆட்டத்தில் சிஎஸ்கேவில் ஆடுபவர்களில் பாதி பேருக்கு மேல் பேரன் பேத்தி எடுத்தவர்கள். மற்ற அணி வீரர்களுக்கு சம்பளம்
தரப்படும் என்றால் நியாயமாக சிஎஸ்கே வீரர்களுக்கு பென்ஷன் தர வேண்டும்.

அப்படி சீனியர் சிட்டிசன்ஸ் போல் இருந்தும் பலர் மனதை கவரும் மஞ்ச கலர்க்காரர்களின் மகிமையும் மகாத்மியமும்தான் என்ன? சிஎஸ்கே அணியில் தவழும் பிரத்யேக கலாச்சாரம்தான் அதன் வெற்றிக்குப் பிரதான காரணம். ஒருவருக் கொருவர் சேர்ந்து வெற்றி பெறத் தேவையான டீம் ஸ்பிரிட் அபரிமிதமாக இருக்கிறது இந்த அணியில். இதன் பிரதான பிளேயர்கள் ஐபிஎல்லின் தொடக்கம் முதல் இன்றுவரை மாறவே இல்லை. ஒரே டீமில் ஒற்றுமையாய் பல வருடம் சேர்ந்திருப்பதால்தான் ‘டீம் சிஎஸ்கே’ என்ற கலாச்சாரம் சிறப்பாய் சிரிக்கிறது.‘நாங்கள் ஏலத்தில் பிளேயர்களை தேர்வு செய்யும் போது திறமையை விட சிஎஸ்கே கலாச்சாரத்திற்கு ஒத்து வருவாரா என்றுதான் பார்க்கிறோம்.

திறமை இருந்தும் சிலரை தேர்வு செய்வதில்லை’ என்கிறார் அணி கோச் ‘ஸ்டீஃபன் ஃப்ளெமிங்’ கம்பெனிகளில் மனித வள மேம்பாட்டு நிபுணர்கள் அங்கீகரிக்கும் அருமையான அணுகுமுறை இது. அதனாலேயே ஊர் பெயர் தெரியாத பிளேயராக இருந்தாலும் சிஎஸ்கே கலாசாரத்துக்கு ஏற்றவர் என்றால் தேர்வு செய்யப்படுகிறார்.

இதனால் சிஎஸ்கே அணியினரிடம் அழகான புரிதல் நிலவுவதை பார்க்கலாம். ஒருவர் வெற்றியில் மற்றவர் பங்கேற்று மகிழ்வதை கவனிக்கலாம். சிஎஸ்கே கலாச்சாரத்தின் முக்கிய அம்சம் அதன் டிரெஸ்ஸிங் ரூமில் நிலவும் மகிழ்ச்சியான மனநிலை. செய்யும் செயலை மனமுவந்து மகிழ்ச்சியுடன் செய்தால் எதுவும் சக்சஸ் என்று ஆடுகிறது சிஎஸ்கே. கிரிக்கெட்டை அனுபவித்து ஆடு என்பது சிஎஸ்கே கொள்கை. அதனாலேயே எந்த டென்ஷன் சூழலிலும் சிஎஸ்கே கலங்குவதில்லை.

இறுதி போட்டியன்றும் டீம் குழுமி சொல்வது ஒன்றையே: ‘இது இன்னொரு நாள் மட்டுமே. சிறந்ததை தருவோம். வருவதை ஏற்போம்’. மற்ற டீம்கள் விக்கெட் வீழ்த்தினால், சிக்ஸர் அடித்தால் காணாததைக் கண்டது போல் குதிப்பார்கள். சிஎஸ்கே இதற்கு நேர் எதிர். ‘சின்ன வெற்றிகளை கொண்டாடு; ஆனால் கோப்பை வெல்வதே இலக்கு என்பதை மறக்காதே’ என்பதே டீம் கோட்பாடு. கம்பெனிகளில் மாத சேல்ஸ் டார்கெட் அடைந்தால் தய்யாதக்கா என்று குதிப்பார்கள். நல்ல கம்பெனிகள் ஆண்டு இலக்கை அடைந்த பின்னரே இளைப்பாறுவார்கள். அதுபோல் சின்ன தோல்விகளால் சிஎஸ்கே மனம் தளர்வதில்லை.

ஒரு மாத சேல்ஸ் குறைகிறதே என்று மனம் தளர்ந்தால் உத்வேகம் குறையும். பல கம்பெனிகள் சரிந்து விழ ஒரு காரணம் அதற்குள் நடக்கும் பாலிடிக்ஸ். யார் பெரியவன் என்ற சண்டை. நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற ஈகோ. ஆளுக்கொரு பக்கம் கம்பெனியை இழுத்து குடுமிப்பிடி யுத்தம். இப்படி இருந்தால் தொழில் வளராது. இதுவும் சிஎஸ்கே கலாச்சாரத்தில் இல்லை. இத்தனைக்கும் பல சர்வதேச கேப்டன்கள் இருக்கும் அணி இது.

அனைவரும் டீம் மீட்டிங்கில் பங்கு கொண்டு ஐடியா தருகிறார்கள். ஆனால், தோனி முடிவுக்கு கட்டுப்படுகிறார்கள். அதனால் சிஎஸ்கேவில் ஐடியாக்களுக்கு பஞ்சமில்லை. பாலிடிக்ஸ் கொஞ்சமுமில்லை! அதுபோல் உங்கள் ஸ்டார்ட் அப்புக்கென்று ஒரு கலாச்சாரத்தை வடிவமையுங்கள். பிறகு பாருங்கள். சிஎஸ்கே போல் சிக்ஸரும் சக்ஸஸுமாய் சிறப்பீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x