Published : 09 Feb 2020 12:19 PM
Last Updated : 09 Feb 2020 12:19 PM

என் பாதையில்: இனம் புரியாத அச்சம்...

சமீபத்தில் எங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் ஒரு செயல்பாட்டுக்காகக் கோயிலுக்குச் சென்றேன். நான் அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கிறேன். அனைத்து கடவுளர்களையும் மதிக்கிறேன். இந்த நாட்டில் வாழும் அனைவரும் இந்தியர் என்றே நினைக்கிறேன்.

சக ஆசிரியர்களும் மாணவர்களும் நீங்கள் கோயிலுக்கு வருவீர்களா என்று கேட்டனர். இந்தக் கேள்வி என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியது. சின்ன வயதில் எனக்கு அம்மை, பால் பருக்கள் வந்தபோது பள்ளிவாசலிலுள்ள மீன் தொட்டியிலும் மாரியம்மன் கோயிலிலும் உப்பு வாங்கிப்போடச் சொல்வார்கள் அம்மாவும் பாட்டியும். நானும் பாட்டியும் கோயிலுக்கும் மசூதிக்கும் சென்று உப்பைப் போட்டுவிட்டு வருவோம்.

நோய் குணமாவதற்காக நம்பிக்கையின் பெயரில் மாற்று மதச் சகோதரர், சகோதரிகள் பள்ளிவாசல் செல்வதும், என்னைப் போன்றவர்கள் கோயிலுக்குச் செல்வதும் எங்கள் ஊரில் இயல்பான விஷயம். நோய்தீர வேண்டும் என்பதற்காக வெவ்வேறு வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதைப் பார்த்து, ‘நீங்கள் கோயிலுக்கு வருவீர்களா, பள்ளிவாசலுக்கு வருவீர்களா, தேவாலயத்துக்கு வருவீர்களா?’ என்று யாரும் அப்போது கேட்டதில்லை.

மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு எங்கள் வீட்டில் அனைவரும் செல்வோம். ராட்டினம் சுற்றுவோம். பொருட்கள் வாங்குவோம். மகிழ்ச்சியாகத் திரும்பி வருவோம். அதேபோல் எங்கள் ஊர் பள்ளிவாசலுக்கு ரமலான் மாதத்தில் நோன்புக்கஞ்சி வாங்குவதற்காக என்னுடன் சுமதியும் நிவேதாவும் வரிசையில் நிற்பார்கள். கடம்பு அண்ணன் 27-ம் நாள் நோன்புக்கஞ்சி காய்ச்ச பங்களிப்பு செய்வார். அன்று கறி போட்டு நோன்புக்கஞ்சி காய்ச்சுவதால் ஊரே மணக்கும். அனைத்து மக்களும் நோன்புக்கஞ்சியை வாங்கிச் சுவைப்பார்கள்.

ஆனால், மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதத்தின் பெயரால் தற்போது பிரிவினைவாதக் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. அதுவும் ஆசிரியர்களின் வாட்ஸ் அப் குழுக்களிலேயே இந்தக் கருத்துகள் பரவிவருவது அச்சத்தைத் தருகிறது. இஸ்லாமியர்கள் வந்தேறிகள், சமூகவிரோதிகள் என்று தூற்றும்போது மனம் சொல்ல முடியாத அளவுக்குத் துன்பப்படுகிறது.

நம் நாட்டு சுதந்திரத்துக்காக அனைத்து மக்களும் போராடினார்கள் என்ற தகவலைப் பதிந்தால்கூட மதவெறியாகப் பார்ப்பது, இறையாண்மையை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

தற்போதைய நமது நாட்டுச் சூழல் ஓர் இனம்புரியாத வருத்தத்தை மனத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. வருங்காலத் தலைமுறையினரைப் பிரிவினைவாத சக்திகள் பயன்படுத்திக்கொள்வார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

உங்கள் அனுபவம் என்ன?

வாசகிகளே, அனுபவங்களே நம் ஆசிரியர்கள். அவை நம் வாழ்க்கைப் பாதையை மாற்றும் திறன் கொண்டவை. நெகிழவைத்த நிகழ்வு, தெளிவுவந்த தருணம், புரியவைத்த உறவு, சமூகச் சிந்தனை மலர்ந்த நாள், மாற்றத்துக்கு வித்திட்ட மனிதர் என எந்த அனுபவமாக இருந்தாலும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் அனுபவம் பிறருக்குப் பாடமாக அமையலாம்; உறவுகளைப் பிணைக்கும் பாலமாக அமையலாம். தாமதிக்காமல் எழுதுங்கள்.

- நா. ஜெஸிமா ஹுசைன், திருப்புவனம்புதூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x