Published : 09 Feb 2020 12:19 PM
Last Updated : 09 Feb 2020 12:19 PM

அன்றொரு நாள் இதே நிலவில் 43: தவிக்கும் ஊருக்குத் தண்ணீர் கிடைக்குமா?

பாரததேவி

கிளை பரப்பிக் கிடந்த ஆலமரத்தினூடே நிலா மிதந்துகொண்டிருந்தது. அதன் பால் வெளிச்சத்தில் பூமி பொன் தகடாகத் தகதகத்தது. முன்பெல்லாம் நிலாவை ஆசையாய்ப் பார்க்கிறவர்களுக்கு இன்று அதைப் பார்ப்பதற்கு எரிச்சலாயிருந்தது.

சிலர் அந்த நிலவில் ‘கோட்டம்’ விழாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோட்டம் விழுந்தால் மழை வருமென்று ஒரு நம்பிக்கை மக்களிடையே இருந்தது. பல மாதங்களாகப் பறவைகளே அற்றுப்போன ஊரில் அன்றைக்கென்று ஒரு ஆந்தை ‘கிறீச்’ சத்தத்தோடு இவர்களின் ஊடாகப் பறந்துபோக, தோளில் கிடந்த துண்டை சைய்யென்று தூக்கியெறிந்த தனிக்கொடி, “சங்கிலியாண்டி ஒரு கஞ்சப்பய. தண்ணியும் கொடுக்க மாட்டான் ஒரு ... கொடுக்க மாட்டான். கூட்டத்தக் கலச்சிட்டு எல்லாரும் அவுக அவுக வேலையப் பாத்துட்டு படுக்கப் போங்கப்பா” என்றார் ஆவேசமாக.

ஈவு இரக்கம் பார்க்கும் பெண்கள்

நாட்டாமை பொறுமைகாத்தார். “உக்காரு தனிக்கொடி. சங்கலியாண்டி தண்ணி கொடுக்க மாட்டான்னு நீ என்னத்தக் கண்டே?” என்றதும் தனிக்கொடிக்கு இன்னும் கோபம் அதிகமாகியது.
“அவனே கொடுக்கேன்னு சொன்னாலும் அவன் பொண்டாட்டி கொடுக்கவிட மாட்டா”.

“சரிப்பா அவனுக்காகத்தேன் கூட்ட மின்னு ஒண்ணு போட்டுட்டோம். அவன் வாயிலருந்து என்ன வார்த்தை வருதுன்னு பாக்க வேண்டாமா? அவன் வராமலேயே நம்ம கூட்டத்தக் கலைச்சிட்டு வீட்டுக்குப் போனமின்னா அவன் நாளைக்கு நான் தண்ணி கொடுப்போமின்னுதேன் இருந்தேன், நீங்க எம்மேல நம்பிக்கையில்லாம கூட்டத்தக் கலைச்சிட்டுப் போனீகன்னா நானு என்ன செய்யட்டுமின்னு ஒரு வார்த்த சொல்லிட்டான்னா நாம என்ன செய்வோம்?”.

“அப்படி அவன் சொல்லுவான்னா நினைக்கே?”

“அட அப்படி ஒரு வார்த்த வந்துட்டா என்ன செய்ய? அவனும் ஒரு விவசாயிதான. இன்னைக்கு நமக்கு வந்த கதி நாளைக்கு அவனுக்கு வராதுன்னு என்னத்தக் கண்ட?”
“என்னமோ எனக்கு அவன்மேல நம்பிக்கையில்ல. அவன் ஒரு கடுசாலிப்பய. ஊருக்குள்ள ஆம்பளைக அப்படி இப்படி இருக்கது சகசம்தேன். ஆனா, பொம்பளைகள்ல ஒண்ணு ரெண்டு பேரு அப்படிக் கடுசா இருந்திட்டாலும் மத்த பொம்பளைக எல்லாம் ஈவு எரக்கம் பாக்கவக. புள்ளைகளோட பசியறிஞ்சி தாவம் தீப்பவக. அவுக தொண்ட நனையனாச்சிலும் ஒருவாக் கஞ்சி ஊத்துதவுக. ஒருவேள அன்னத்தாயே இந்தக் கூட்டத்துல வந்து நின்னு ‘எங்க கிணத்தில் நீங்க தண்ணி எடுத்துக்கோங்க’ன்னு சொன்னாலும் சொல்லுவா பாருங்க” என்றார் நாட்டாமை.

உலை வைக்கக்கூடத் தண்ணியில்லை

சற்றுத் தூரத்தில் சங்கிலியாண்டி ரொம்ப சாவகாசமாக வந்துகொண்டிருந்தார். அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு எட்டுமே ஏனோ அவர் உறுதியாகத் தண்ணீர் தர மாட்டார் என்று நினைக்கத் தோன்றியது. அந்த அளவுக்கு அவர் நடையில் கர்வம் ஏறியிருந்தது. “ஏ.. நாட்டாம. தனிக்கொடி சொன்னது நூத்துல ஒரு வார்த்த. அந்த சங்கிலியாண்டி என்ன மாதிரி சொகுசு நடைபோட்டு வரான் பாரு. இதுல வெத்தல சுழட்டல் வேற.

இவன் கிணத்துல தண்ணியிருக்குன்னு ரொம்பத்தேன் திமிரா ஏறிப்போயிருக்கான்” என்று சன்னாசி சொல்லவும் நாட்டாமை பயந்தார். “ஏய் மெல்லப் பேசு. வாரவன் காதுல உன் பேச்சு விழுந்திரப் போவுது. இப்போ நாம ஒத்தப்பொட்டுத் தண்ணி இல்லாம உக்காந்திருக்கோம். அதனால, நமக்குக் காரியந்தேன் முக்கியம், வீரியம் முக்கியமில்ல” என்று மெல்ல அதட்டலாகச் சொன்னார் நாட்டாமை.

“என்ன நாட்டாம, அம்புட்டுப்பேரும் வந்துட்டீகளா? நெலா புறப்பட்டு ஒரு நாழிதான் ஆவுது. எல்லாரும் கஞ்சித் தண்ணியக் குடிச்சிட்டு பதறாம வருவீகன்னு நெனச்சி நானும் கொஞ்சம் அசமந்தமா இருந்துட்டேன்” என்று சங்கிலியாண்டி சொல்லவும் “ஏலேய் கிறுக்குப் பயலே. நெலா உன் வழுக்கத் தலைக்கு மேல நவண்டு மேக்கால போவதுக்குத் தவிச்சிக்கிட்டு இருக்கு. உனக்கு இப்பத்தேன் நெலா கெழக்கு வாசல்ல உக்காந்திருக்காக்கும்” என்றார் நாட்டாமை.

“சரி வீட்டுல கொஞ்சம் அவசர சோலி இருக்கு. கூட்டத்த சட்டுப்புட்டுன்னு பேசி முடிங்க” என்றார் சங்கிலியாண்டி. “இந்தக் குசும்புதான வேண்டாங்கேன். என்னமோகாலம் பஞ்சமா போச்சு. கடவுள் புண்ணியத்துல உன் கெணத்துல தண்ணி இருக்கு. இப்ப நீயும் பாத்துக்கிட்டுத்தான இருக்க, குடிக்கக்கூடத் தண்ணி இல்லாம எல்லாரும் தொண்டையும் நாக்கும் வறண்டுபோயி கெடக்காக” என்று நாட்டாமை சொல்லிக்கொண்டிருந்தபோது பெண்கள் கூட்டத்திலிருந்து, “நாளி மாவக் கூழாக் காய்ச்சி புள்ளைகளுக்குக் கொடுப்பமின்னா உலை வைக்கக்கூடத் தண்ணி இல்ல” என்று ஒரு குரல் கேட்கவும் நாட்டாமைக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

“ஏத்தா அது எவ? அதேன் ஆம்பளைக பேசிக்கிட்டு இருக்கமில்ல. அதென்ன எங்களுக்கு முந்திக்கிட்டுப் பேசுதவ. கூட்டம் முடியந்தண்டியும் எவளாச்சிலும் வாயத் தொறந்தீக..” என்று அதட்டலோடு நிறுத்திய நாட்டாமை, “சங்கிலியாண்டி பொம்பளப் புள்ளைக பேசத நீ பெருசா எடுத்துக்கிடாத. சரி இப்ப என்னோட விருப்பம் மட்டுமல்ல, ஊருக்காரக விருப்பமும்தேன். உன் கிணத்துல யாரையும் குளிக்க விடாத” என்று சொல்லிமுடிக்கு முன்பே “சிறுக்கி புள்ளைகள நானா குளிக்கச் சொல்லுதேன். அதுகளா வந்து குளிக்கி” என்றார்.

“அது எப்பவும் நம்ம ஊரு வழக்கம்தான. கிணத்தில் தண்ணி இருந்தா சிறுபிள்ளைக வந்து குளிக்கத்தான செய்வாக. அதுக்குத்தேன் இப்ப கூட்டமே போட்டுருக்கு”
“எதுக்கு? புள்ளைகளைக் குளிக்க வேண்டான்னு சொல்றதுக்கா?”
“நம்ம ஊருல ஒத்தப் பொட்டுத் தண்ணியில்ல. அதேன் படியில முள்வேலிய அடச்சிட்டு உன்கிட்ட கேட்டுக்கிட்டு ஊரு புழக்கத்துக்கு உன் கிணத்துத் தண்ணிய வச்சிக்கிடலாமின்னு ஊருக்காரக நெனைக்காக. இந்தப் பஞ்ச காலத்துக்கு மாட்டேன்னு சொல்லாம நீ ஊருக்கு உதவி பண்ணனும்” என்றார் நாட்டாமை.

சங்கிலியாண்டியின் தயக்கம்

சங்கிலியாண்டி அவரு பொண்டாட்டி சொன்னதுபோல் மௌனமாக வெத்தலையை மென்றுகொண்டிருந்தார். தனிக்கொடிக்குக் கோபம் புறுபுறுவென்று ஏறியது. கூட்டத்தையோ அங்கே இருக்கும் மக்கள், மனுசர்களையோ பார்க்காமல் சங்கிலியாண்டியின் கன்னத்தில் மாறி மாறி நாலு அறை அறைந்துவிட்டுப் போயிருவோம். பெறவு எது வந்தாலும் பாத்துக்கிடுவோமென்று நினைத்துக்கொண்டு ஒரு இடத்தில் நிற்க முடியாமல் அங்கும் இங்குமாய் ஒவ்வொரு எட்டாக வைத்துக்கொண்டிருந்தார்.

“என்னடா சங்கிலி, நாட்டாமை இப்ப பேசுனது உன் காதுல விழுந்ததா, இல்லையா?” என்றார் சான்னாசி. “கேட்டுச்சி.. ஆனா” என்று சங்கிலியாண்டி ஏதோ சொல்லப்போக இடைமறித்தார் நாட்டாமை. “நீ ஒண்ணும் சும்மா தண்ணிதர வேண்டாம். நம்ம காடுகள்ல எல்லாம் மழை பேஞ்சி செழிச்சி வௌஞ்சதும், இப்ப உன் கெணத்தில எடுக்கத் தண்ணிக்கு ஆளுக்கு ஒரு மரக்கான்னு தவசத்த அளந்து கொடுத்திருதோம்” என்றார் கெஞ்சும் விதமாக. “இப்ப எடுக்கத் தண்ணிக்கு இனிமே மழைபேஞ்சு வௌஞ்ச பெறவு கொடுப்பீகளாக்கும்” என்றான், ‘இனிமே’ என்ற சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தபடி சங்கிலியாண்டி.

“பெறவென்ன, இப்பவா ஒவ்வொரு மரக்கா தானியம் கொடுக்க முடியும்? அவனவன் வீட்டுல குலுக்கையிலிருந்து அடுக்குப் பான வரைக்கும் காத்தாடிப் போயி கெடக்கு. பச்சைப் புள்ளைகளுக்கே அவக ஆத்தாமாருக அரை வவுத்துக்குத்தேன் கஞ்சி ஊத்திக்கிட்டு இருக்காக.

பாவம் அதுக அழுத கண்ணும் பசிச்ச வவுறுமா புடுங்கிப்போட்ட கீரத்தண்டா அலயிதுக” என்று நாட்டாமை சொன்னதும், “சரி எங்க கெணத்தில வந்து தண்ணிய எடுத்துக்கோங்க” என்று சொல்லத்தான் சங்கிலியாண்டிக்குத் தோன்றியது. ஆனால், மனத்துக்குள் பதிந்துபோன தன் பொண்டாட்டியின் ஞாபகம் அவரைப் பதறவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x