Published : 09 Feb 2020 12:19 PM
Last Updated : 09 Feb 2020 12:19 PM

தெய்வமே சாட்சி 03: பெண்களின் தலையில் விடியும் பொறுப்பு

ச.தமிழ்ச்செல்வன்

வாழைத்தோப்புக்குக் காவல்காரர் ஒருவர் இருந்தார். இரவும் பகலும் அந்தத் தோட்டத்தை அவர் காவல் காத்துவந்தார். நல்ல காவல்காரர் என்று பேர்பெற்றவர். அது பஞ்ச காலம். ஊரெல்லாம் பஞ்சம். ஆனாலும், அவர் காவல் காத்த தோட்டத்தில் வாழை மரங்கள் நன்கு விளைந்து குலைதள்ளியிருந்தன. ஒரு பழம்கூடக் களவு போகாமல் அப்படியோர் அரணாக அவருடைய காவல் இருந்துவந்தது.

சில நாட்களாக அவர் எண்ணி வைத்ததைவிடக் காலையில் வீட்டுக்குப் போய்விட்டு வந்து பார்க்கும்போது பழங்கள் குறைந்துவருவதைக் கண்டுபிடித்தார். நம்ம காவலுக்கே சவாலா என்று ஆத்திரம் கொண்டார். விடிய விடிய காவல் காத்தபோதும் விடியற்காலையில் சற்று நேரம் அவர் தன் வீட்டுக்குப் போய் அன்றைக்கான காலை, மதிய உணவை எடுத்துக்கொண்டு வருவார். அந்தக் கொஞ்ச நேரத்தில்தான் களவு நடப்பதாக அவர் புரிந்துகொண்டார்.
பசியாற்றிய தாய்

அந்தத் தோட்டத்துக்குப் பக்கத்தில் ஒரு குடிசையில் தாயும் ஆணொன்று பெண்ணொன்றாக இரண்டு குழந்தைகளும் வாழ்ந்து வந்தார்கள். தகப்பன் இல்லாத அந்தக் குழந்தைகளுக்கு அந்தத் தாய்தான் ஒரே ஆதரவு. பஞ்ச காலமானதால் அவளுக்கும் வேலை இல்லை. வீட்டில் பசியும் பட்டினியும் அன்றாடக் கதை ஆகிவிட்டன.

பெத்த மக்க பட்டினி கிடப்பதைக் காணச் சகியாத தாய், என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்தாள். ஆபத்துக்குப் பாவமில்லை என்று சாமியைக் கும்பிட்டுவிட்டு, அந்தத் தாய் பக்கத்துத் தோட்டத்தில் காவல்காரர் வெளியேறும் நேரம் பார்த்துப் பழங்களைப் பறித்துவந்து பிள்ளைகளுக்குக் கொடுத்துப் பசியாற்றத் தொடங்கினாள்.

திருட்டுப்போகும் பழங்களால் ஆத்திரமடைந்த காவல்காரர் எப்படியாவது திருடனைக் கண்டுபிடித்துத் தண்டனை கொடுக்கக் கொலைவெறியோடு காத்திருந்தார். அன்று காலையில் அவர் வீட்டுக்குப் போவதுபோல் போக்குக் காட்டிவிட்டு, ஒரு புதருக்குள் கையில் ஈட்டிக் கம்புடன் மறைந்திருந்தார். அதிகாலையில் இரண்டு குழந்தைகளும், “அம்மா பசிக்குதே… பசிக்குதே” என்று அழ ஆரம்பித்துவிட்டன. வழக்கம்போல அந்தத் தாயும் காவல்காரர் போவதைப் பார்த்துவிட்டுப் பழம் பறித்துவரக் கிளம்பினாள்.

பசி தாங்க முடியாத பிள்ளைகள் அம்மாவுக்குப் பின்னாடியே ஓடினார்கள். செழித்து வளர்ந்திருந்த வாழைத்தோப்புக்குள் சலசலப்பு தெரியவும் காவல்காரர் உஷாரானார். அதிகாலை இருட்டில் பதுங்கிப் பதுங்கி அந்தத் தாய் பழங்களைப் பறித்தாள். அவசரமாக இரண்டு பழங்களை உறித்துப் பிள்ளைகளிடம் கொடுத்தாள். ‘அவக் அவக்’ என்று அவர்கள் தின்ன ஆரம்பித்தார்கள்.

பலியான தாய்

ஆள் அரவம் கேட்கும் திசையை நோக்கி ஈட்டியை வீசினார் காவல்காரர். அது நேராகச் சென்று தாயின் நெஞ்சிலேயே பாய்ந்தது. “எம் மக்களே...” என்று அலறியபடி ரத்தம் பீறிட வரப்பிலே வீழ்ந்தாள் தாய். பாதி தின்ற பழத்தையும் துப்பிவிட்டுக் குழந்தைகள் இருவரும் “அம்மா… அம்மா…” என்று கதறியபடி ரத்தவெள்ளத்தில் வீழ்ந்துகிடந்த தாயைச் சுற்றி சுற்றி வந்து அழுதனர். காவல்காரர் வந்து திருடன் யார் என்று பார்ப்பதற்குள் எல்லாம் முடிந்துபோயிருந்தது. வீழ்ந்த நிலையில் தாயும் இரண்டு பிள்ளைகளும் சிலைகளாக மாறிவிட்டார்களாம். அந்தச் சிலையை எடுத்து வந்துதான் கோயில்கட்டி, துர்க்கை அம்மனாகக் கும்பிடுகிறார்களாம்.

தேனி மாவட்டத்தில் உள்ள பூதிப்புரம் கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் ரயில்வே தண்டவாளத்தைத் தாண்டி ஒரு தனியார் தோட்டத்துக்குள் அமைந்துள்ளது துர்க்கை அம்மன் கோயில். வருடந்தோறும் மாசி மாதம் இரண்டு நாட்கள் இந்த அம்மனைக் கும்பிடுகிறார்கள். பயறு வகைகளை அவித்து, சர்க்கரைப்பொங்கல் வைத்துக் கும்பிடுகிறார்கள். அம்மன் சிலைக்கு முன்னால் எலுமிச்சைபழச் சாற்றினாலேயே தரையை மெழுகிக் கோலம் போட்டு, எலுமிச்சை பழத்திலேயே திரி வைத்து விளக்குப் போட்டால், பெண்களுக்குத் திருமணம் நடக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

தப்பித்துக்கொள்ளும் ஆண்கள்

இப்படிப் பசிக்கொடுமையால் செத்த கதைகள் நல்லதங்காள் காலத்திலிருந்து தொடர்கதையாக நீண்டுகொண்டுதான் இருக்கின்றன. ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் போட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட நல்லதங்காள் தமிழகம் முழுவதும் வணங்கப்பட்டு வருகிறாள். திருவில்லிபுத்தூர் வட்டத்தில் காட்டுக்குள் அமைந்துள்ள சடைச்சியம்மனின் கதையும் இதுதான். சடைச்சிக்கு ஏழு பிள்ளைகள்.

கணவனுக்கும் மாமியாருக்கும் அவளைக் கண்டாலே பிடிக்காது. தினமும் அவளுக்கும் பிள்ளைகளுக்கும் அடியும் உதையும் வசவும்தான் சாப்பாடு. அப்போது பஞ்சமும் வந்துவிட்டது. அவளையும் பிள்ளைகளையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டனர். காட்டு வழியே அழைத்து வரும்போது கிடைத்ததையெல்லாம் சாப்பிட்டுச் சில நாட்கள் பசியாறினர்.

ஒன்றும் கிடைக்காமல் பசியால் பிள்ளைகள் துவண்டுபோன ஒரு நாளில் சடைச்சி பாழுங்குளத்தில் பிள்ளைகளுடன் மூழ்கித் தெய்வமானாள் (சடைச்சி அம்மன் கதை, சு.சண்முகசுந்தரம் - நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் நூலிலிருந்து). பொறுப்பில்லாத தகப்பன்கள், குடிகாரக் கணவன்கள், பஞ்ச காலத்தில் பொறுப்புத் துறப்புச் செய்து தப்பும் ஆடவர்கள், கடன் தொல்லைக்குப் பயந்து சாமியாராகப் போய்விடும் ‘புத்திசாலி’ ஆண்கள், நோயால் செத்துப்போகும் ஆண்கள் என விதவிதமான ஆண்களுக்கு வாக்கப்பட்டுச் சீரழியும் பெண்களால் நம் சமூகம் நிரம்பிவழிகிறது. அதற்காகப் பொறுப்புகளிலிருந்து பெண்கள் ஒருபோதும் தப்பி ஓடுவதில்லை. கணவன் கூடவே வாழ்ந்தாலும் பொறுப்பு அவளுக்குத்தான்.

துர்க்கை அம்மன் கதையில் அவளுடைய கணவனைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பசியாற்றும் பொறுப்பு அவள் மீது நம் குல மரபுப்படி விழுந்துவிட்டிருக்கக்கூடும். அவள் உழைத்துப் பார்க்கிறாள். பஞ்சம் வந்துவிட்டபின் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் சிலையாகி நின்றார்கள் என்று கதையில் சொல்லப்படுவது அதீதக் கற்பனைதான். அந்தக் காட்சி, கண்டவர் மனங்களில் சிலையாக உறைந்திருக்க வேண்டும். எளிய கிராமத்து மக்கள் தங்கள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவளுக்குச் சிலை எழுப்பியிருப்பார்கள். எதற்காக இறந்தார்களோ அதையே படையலாகக் கொண்டு செலுத்துவது நாட்டுப்புறத் தெய்வ மரபாக இருக்கிறது.

ஆகவே, அவளுக்குப் பயறு வகைகளை அவித்தும் சர்க்கரைப் பொங்கலிட்டும் படைக்கிறார்கள். வடக்கு லண்டனில் ஹைகேட் கல்லறையில் அமைந்துள்ள கார்ல் மார்க்ஸ் நினைவிடத்துக்குச் செல்லும் மக்கள் ரொட்டி வாங்கிச் சென்று அங்கே வைத்து அஞ்சலி செலுத்துவதை இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

ரொட்டி வாங்கக் காசில்லாமல், ஜென்னி மார்க்ஸின் மார்பிலிருந்து குழந்தைக்குப் பால் சுரக்காமல் ரத்தம் வந்த கதை அவர்கள் நெஞ்சில் ஆட, ரொட்டிகளை மார்க்ஸுக்குப் படைக்கிறார்கள். ஜென்னியும் இன்னொரு துர்க்கை அம்மன்தான். பசியாற்றுதல் என்னும் பெரும் பொறுப்பு என்றென்றும் பெண்ணின் தலைச்சுமையாகத் தொடர்வதன் அடையாளம்தான் இக்கதைகள் எல்லாமே.

(கதை சொன்னவர்: பேச்சியம்மாள்,
பூதிப்புரம், போடிநாயக்கனூர் ஒன்றியம்.
சேகரித்தவர்: எம்.சித்ரா)

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x