Published : 03 Feb 2020 01:21 PM
Last Updated : 03 Feb 2020 01:21 PM

அலசல்: தேவையற்ற தாமதம் நல்லதல்ல!

கடந்த வாரம் ஓரியண்டல் ஸ்டிரக்சர் இன்ஜினீயர்ஸ், சேடக் எண்டர்பிரைசஸ், கேஎன்ஆர் கன்ஸ்டிரஷன், சத்பாவ் இன்பிராஸ்டிரக்சர் மற்றும் ஐஆர்பி இன்பிராஸ்டிரக்சர் டெவலப்பர்ஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) அளித்த திட்டப் பணியிலிருந்து வெளியேறியுள்ளன. இந்த ஐந்து நிறுவனங்களும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய 8 திட்டப் பணிகளிலிருந்து வெளியேறியுள்ளன.

இந்த நிறுவனங்கள் வெளியேறியதற்கு முக்கியக் காரணம், தாங்கள் மேற்கொள்ள விருந்த சாலை அமைக்கும் திட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் குறித்த காலத்துக்குள் பணிகளைத் தொடங்க முடியவில்லை என்பதுதான். சேடக் நிறுவனத்துக்கு சிம்லா பைபாஸ் திட்டப் பணி அமைக்கும் பணி 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளிக்கப்பட்டது.

கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு மீஞ்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான சாலை பணி 2018 மார்ச்சில் அளிக்கப்பட்டது. ஓரியன்டல் ஸ்டிரக்சுரல் இன்ஜினீயர்ஸ் நிறுவனத்துக்கு விழுப்புரம் முதல் புதுச்சேரி வரையிலான திட்டப் பணி 2018 மார்ச்சில் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி முதல் பூண்டியங்குப்பம் வரையிலான சாலை திட்டப் பணி மற்றும் பூண்டியங்குப்பம் முதல் சட்டநாதபுரம் வரையிலான பணியும் ஐஆர்பி இன்ஃபிரா நிறுவனத்துக்கு 2018 மார்ச்சில் வழங்கப்பட்டது. விசாகப்பட்டினம் துறைமுக சாலை, பீமாசேர் சந்திப்பு முதல் அஞ்சார் – பூஜ் சாலை பணி, பனவாரா முதல் பெட்டடஹள்ளி வரையிலான பணிகள் 2018 மார்ச்சில் அளிக்கப்பட்டன. ஆனால் இவற்றில் எந்தத் திட்டங்களும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

அப்படியே கிடப்பில் கிடக்கின்றன. பொருளாதார தேக்கநிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது ரியல் எஸ்டேட் மற்றும் சாலை கட்டமைப்பு துறைகள்தான். குறிப்பாக இவ்விரு தொழில்கள் மட்டுமே பெருமளவிலான வேலைவாய்ப்பை குறிப்பாக கல்வித் தகுதி இல்லாதவர்களுக்கும் அளிக்கும் துறைகளாக விளங்குகின்றன. விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு சாலை போக்குவரத்து மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதிலும் பெருகிவரும் வாகன நெருக்கடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட வேண்டியது அவசர அவசியமாக உள்ளது.

மத்திய அரசும் இதைக் கருத்தில் கொண்டே ரூ.5.35 லட்சம் கோடி மதிப்பிலான ‘பாரத்மாலா’ எனும் சாலை கட்டமைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதில் முதல் கட்டமாக 24,800 கி.மீ தூரத்துக்கு புதிய சாலைகள் அமைப்பதும், தேசிய நெடுஞ்சாலைகளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு புதிப்பிப்பதும் அடங்கும். சாலை கட்டமைப்பு பணிகளில் நிலவும் தேக்கத்துக்கு அளவே கிடையாது என்பதைப் போலத்தான் உண்மை நிலவரம் உள்ளது.

2012-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்ட துவாரகா எக்ஸ்பிரஸ் வழி சாலைப் பணி பாதி முடிவடைந்த நிலையில் நிலங்கள் தொடர்பான வழக்குகளால் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தாமதமாகும் திட்டப்பணிகளின் மதிப்பு மட்டும் ரூ. 150 கோடிக்கும் அதிகம். சாலை கட்டமைப்பு திட்டப் பணிகளில் நிலவும் மந்தநிலை குறித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வாரம் ஆய்வு செய்தார்.

அப்போது இத்துறையில் நிலவும் தேக்க நிலைக்கு அதிகாரிகள் காரணம் என்ற புகாரும் கூறப்பட்டது. இதையடுத்து திட்டப் பணிகள் தாமதத்துக்கு காரணம் அதிகாரிகளாக இருப்பின் அவர்களை பணி நீக்கம் செய்யவும் தயங்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் குழு அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை முடுக்கிவிடும் முக்கிய காரணிகளில் ஒன்றான சாலை கட்டமைப்பு பணிகளில் நிலவும் தேக்கநிலை அசாதாரணமானது. இதில் அமைச்சரின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் இல்லாமல் செயல்திட்டமாக மாறினால் தற்போது திட்டப்பணிகளில் நிலவும் தேக்கநிலை மாற வாய்ப்பு ஏற்படும். இல்லையெனில், தேக்கம் தொடர்கதைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x