Published : 01 Feb 2020 12:10 PM
Last Updated : 01 Feb 2020 12:10 PM

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பூச்சி செல்வம்

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்ட பின்
நீரினும் நன்றதன் காப்பு.

வேளாண்மைச் சாகுபடியில் இதுவரை உற்பத்திப் பெருக்கத்துக்கான வழிமுறைகளைப் பற்றிப் பார்த்தோம். தற்போது பயிர் சாகுபடியின்போது பயிரில், மாறிவரும் தட்பவெப்ப நிலையின் காரணமாக பயிரில் ஏற்படும் தாக்கம், பூச்சி, பூஞ்சாணங்களிலிருந்து பயிரைப் பாதுகாத்தல், வன விலங்குகளிலிருந்து பயிரைப் பாதுகாக்கும் முறைகள், களைகளிலிருந்து பயிரைப் பாதுகாக்கும் எளிய முறைகள் பற்றி பார்ப்போம்.

பருவகாலம், அடிக்கடி மாறுபடுகிறது. பல பகுதிகளில் மழைக்காலம் குறுகியும் கோடைக்காலம் நீண்டும், இன்னும் சில பகுதிகளில் இவற்றுக்கு மாறாக மழைக்காலம் அதிகரித்தும் கோடைக்காலம் குறுகியும் பயிரின் வளர்ச்சி, விளைச்சல் ஆகியவற்றைப் பாதிக்கிறது. சில பகுதிகளில் மழைக்குறைவின் காரணமாக ஒரு பருவச் சாகுபடியே இல்லாமல் போய்விடுகிறது. அது ஒரு வருடத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து நான்கைந்து வருடங்கள்வரை நீட்டிப்பதும், பின்னர் ஒரு வருடத்தில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்புவதுமாக மனித முயற்சியால் முன்னரே அறிய முடியாத அளவுக்குத் தட்பவெப்ப சூழ்நிலை மாறிவருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில் ஒரு பயிர் சாகுபடிசெய்து அதிலிருந்து நல்ல விளைச்சலைப் பெற நாம் எடுக்கும் முயற்சி கைகூட வேண்டும். இதற்கான எளிய வழிமுறைகள் என்ன?

தத்தம் பகுதிக்கேற்ற ரகப் பயிரை தேர்ந்தெடுத்து விதைத்தல் முக்கியமான ஒரு தத்துவம். ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் அந்நிலத்துக்கு வளரும் தன்மையுடைய பயிர், ரகங்களை தேர்ந்தெடுத்துப் பயிர் செய்தால், அது அனைத்துச் சூழ்நிலையையும் தாங்கி வளரும். அத்தகைய பயிர்களை முன்னர் சாகுபடியின்போது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து விதைக்கலாம்.

பருவநிலை மாறுதல் தாக்கம் காரணமாக ஒரு பயிரை மட்டும் நம்பியிராமல் பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்யலாம்.

பயிர்ச் சுழற்சி முறைகளைக் கடைபிடித்துச் சாகுபடி மேற்கொள்வது மற்றொரு வகை. இது பல்வேறு வழிகளில் பூச்சி, பூஞ்சாணங்களிலிருந்து பயிரைக் காப்பதுக்கும், மண்ணில் உள்ள சத்துக்களை பயிர் அளவாக எடுத்துக் கொள்வதற்கும் வழிவகை செய்கிறது. அப்பகுதிக்கேற்ற பருவ சூழ்நிலைக்கேற்பப் பயிரை விதைப்பது அளவுக்கதிகமாக இடுபொருட்களைப் பயிர் வளர்ச்சிக்கு அதுவும் ரசாயன உரங்களைப் பூச்சி, பூஞ்சாண மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது பயிருக்கு நல்லது.

ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் பயிர் சாகுபடியில் பயிரைப் பாதுகாக்க முக்கிய வழிமுறை. சாகுபடி செய்யப்படும் பயிர், ரகம், பூச்சி நோய்த் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியுடையதாக இருத்தல் அவசியம்.

பருவத்துக்கு ஒத்துப்போகும் ரகங்களைத் தேர்ந்தெடுத்துப் பயிர் செய்வது நோய், பூச்சி ஆகிய தாக்குதலிலிருந்து விடுதலையளிக்கும். பயிரைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள் ஆகியவை எவ்விதம் பரவுகிறது என்பதைத் அறிந்தால் மட்டுமே. அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

பூச்சிகள் முட்டைகளிட்டு, புழுக்களாக வெளிவந்து பயிர்களில் இலைகளை உண்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் கூட்டுப் புழுக்களாக மாறிப் பின்னர் முழு அந்துப் பூச்சியாக மாறும். அதன் பிறகு மறுபடியும் சுழற்சி முறையில் முட்டைகளை இட்டுப் பெருகிப் பயிரை அழிக்கும். இது போல் வண்டினங்களும் புழு – கூட்டுப்புழு – வண்டு என மாறிப் பயிரைச் சேதம் செய்யும். தத்துப் பூச்சிகள் குஞ்சுகளாகவே பிறந்து, வளர்ந்து முழு வளர்ச்சியடைந்து பயிருக்குச் சேதம் விளைவிக்கும்.

இது போல நோய்கள் பூஞ்சாணங்கள் மூலம் பயிரில் பரவுகிறது. இவ்வகை பூஞ்சாணங்களின் துகள்கள் காற்று, நீர், உயிரினங்கள் ஆகியவை மூலம் பரவி பயிரின் மேல் படிந்து சேதத்தை உண்டாக்குகிறது.

பல பூச்சிகள் குறிப்பிட்ட பயிரையோ பயிர்களையோ தாக்கி அழிப்பதுபோல், சில எதிரிப்பூச்சிகளும், இப்பூச்சிகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டுள்ளன. இதன் காரணமாக பயிரில் பன்முகச் சூழல் இயற்கையாகவே காணப்படுகிறது. இவ்வாறு இயற்கையின் அமைப்பிலேயே, பயிர்களைத் தாக்கும் பூச்சி இனங்களை மற்றொரு வகைப் பூச்சி இனங்கள் அழிப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பயிரில் பூச்சிக்கொல்லி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகளில் பயிர் பாதுகாப்புசெய்ய வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளில் முதலில் பல்வேறான இயற்கை முறையில் பூச்சி, பூஞ்சாணச் சேதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்த முடியாத நிலையில் பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் குறிப்பிட்ட அளவுக்குப் பயன்படுத்த வேண்டும். இம்முறையே நீடித்த பயிர் சாகுபடிக்கு உகந்தது.

கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com n சொ.பழனிவேலாயுதம்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x