Published : 31 Jan 2020 11:52 AM
Last Updated : 31 Jan 2020 11:52 AM

பாம்பே வெல்வெட் 20: காற்றில் கலந்த கவிதைகள்

பழைய டெல்லியின் பழைய புத்தகக் கடைகளில் அதுவும் ஒன்று. கடையை திறப்பதற்கு முன்பாகவே காத்திருக்கும் சிறுவனை, கடை உரிமையாளர் ஏற இறங்கப் பார்க்கிறார். வழக்கம்போல ஏதேனுமொரு கதைப் புத்தகம் தரும் யோசனையை உதறியவராக, தாகூரின் கவிதை நூலை எடுத்து நீட்டுகிறார்.

கவிதைப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துத் தயக்கத்துடன் வாங்கிச் சென்ற சிறுவனின் வாழ்க்கையை தாகூர் புரட்டிப்போடுகிறார். பின்னாளில் தனது கற்பனையாலும், கவிதை வரிகளாலும் பாலிவுட்டை ஆழ உழுத குல்சாரின் கவிமனம் இப்படித்தான் கருவானது.

சம்பூரன் சிங் கர்லா என ஆசையாகப் பெயர் சூட்டிய அம்மாவைப் பால்யத்திலேயே பறிகொடுத்திருந்தார் குல்சார். அவருடைய குடும்பம் தேசப்பிரிவினையில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தது. தனிமையும் கொசுக்கடியுமாகத் தூக்கம் தொலைத்த இரவுகளை வாசிப்பில் போக்கினார்.

தாகூரில் குவிந்த குல்சாரின் மனம் வங்காள இலக்கியத்தில் நீந்திக் களித்தது. இலக்கியத்தை அதன் தாய்மொழியிலே வாசிக்க வேண்டும் என்ற வேட்கையில் வங்காளமும் கற்றுக்கொண்டார். கண்ணைக் கவர்ந்த இயற்கையிலும், புலப்படாத அரூப உலகிலும் சஞ்சரிக்க அவர் வாசித்த இலக்கியங்கள் வழிசெய்தன. தாயின் இழப்பையும், தனிமையின் துயரையும் நேர்செய்த இலக்கியத்தின் மீது இளம் வயது குல்சாருக்குப் பிடிப்பு அதிகரித்தது.

பதின்ம வயதில் தாகூரின் பாதிப்பில் கவிதைகளை எழுதித் தள்ளிய மகனைத் தந்தை வெகுவாகக் கடிந்துகொண்டார். ‘வணிகத்தில் திளைத்த குடும்பத்தினர் மத்தியில் ஒரு கறுப்பு ஆடாக வளர்ந்தேன்’ என்று நினைவு கூர்கிறார் குல்சார். மும்பைக்குப் போய்ப் பிழைத்துக்கொள்கிறேன் என வீம்புடன் கிளம்பி, அன்றாடம் வயிற்றுப்பாட்டுக்கு வழி செய்தவாறே கவிதை, கதைகள் எழுதித் தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

முற்போக்கு எழுத்தாளர்களின் சந்திப்புகளில் தனது வரிகளால் கவனம் ஈர்த்தார். அவரது உருதுப் புலமையும், மந்திரம்போல் வார்த்தைகளைப் பிரயோகிக்கும் வேகமும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருடைய நட்பைப் பெற்றுத் தந்தன. அப்படித்தான் கவிஞர் சைலேந்திரா மூலம் இசையமைப்பாளர் சலீல் சவுத்ரியின் நட்பு கிடைத்தது. அந்த நட்புக்காக குல்சார் எழுதிய முதல் பாடல், இன்னொரு கவிஞரின் பெயரில் வெளியானது.

ரசிக மனத்தின் விழிப்பு

‘மோரா கோரா’ என்ற ‘பாந்தினி’ (1963) படப் பாடல் வெளியானதும் குல்சாரை பாலிவுட் திரும்பிப் பார்த்தது. மெட்டுக்குப் பாட்டு என்றபோதும், வெற்று வார்த்தைகளால் நிரப்பாது உயிரோட்டமான கற்பனைகளால் பாடல் நிறைந்திருந்ததில் திரையுலகம் அவரைப் பற்றிக்கொண்டது. சினிமாவில் பாடலுக்குப் பதில் கவிதை சேர்த்தவரை ஆரத்தழுவிக் கொண்டார்கள். குல்சார் என்ற புனைபெயரும் உருவானது. இலக்கியம் பேசும் நட்பு வட்டத்தின் விரிவாக்கத்துக்காக, சினிமாவுக்குப் பாடல் எழுதத் தொடங்கிய குல்சாரும் பின்னர் அதில் கரைந்து போனார்.

இயக்குநர் பிமல் ராயின் உதவியாளராகத் திரை வாழ்க்கையைத் தொடங்கிப் பின்னர் முழு நேரப் பாடலாசிரியராகிப் போனார். அறுபதுகளின் இறுதி - எழுதுபகளின் தொடக்கம் குல்சாரின் கவிதை வரிகள் பிரபலமாயின. ‘காமோஷி’யில் ‘அவள் கண்களின் வாசனையை நான் கண்டுகொண்டேன்’ என்பதாக குல்சார் எழுதியபோது ரசிக மனம் விழித்துக்கொண்டது. ‘குட்டி’ (Guddi) திரைப்படத்துக்கான ‘ஹம்கோ மன் கி சக்தி தேனா’, இன்றைக்கும் இந்தி பேசும் மாநிலங்களின் பள்ளிகளில் பிரார்த்தனைப் பாடலாக நீடிக்கிறது. அங்கே தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணி படங்கள் வரை குல்சாரின் கற்பனை வரிகள் மொழிகளைக் கடந்து இந்தியர்களை ஆட்டுவித்து வருகின்றன.

மகள் மேக்னாவுடன் குல்சார்

இயக்குநர் அவதாரம்

‘ஆனந்த்’ (1971) படத்துக்கான அவரது பாடல் வரிகளுடன் வசனங்களும் சிலாகிக்கப்பட்டன. புற்றுநோயால் தனது கடைசி நாள்களைக் கழிக்கும் இளைஞன் ஒருவனின் ஏகாந்தமான வாழ்வின் தத்துவ விசாரணைகள் படத்துக்கு உருக்கம் சேர்த்தன. ‘ஆனந்த்’ திரைப்படம், ஆகச் சிறந்த இந்தித் திரைப்படமாகக் காலம் கடந்தும் பேசப்படுவதில் குல்சாரின் வசனங்களுக்கு முக்கியப் பங்குண்டு. வசனத்தின் வரிசையில் அதே ஆண்டில் இயக்கத்திலும் இறங்கினார் குல்சார்.

வேலையிழந்த இளைஞர்களின் கோபக்கார முகத்துக்கு அடையாளமாய் அவரது முதல் படமான ‘மேரே அப்னே’(1971) வெளியானது. தொடர்ந்து எழுபதுகளில் விதவிதமான கதைகளைத் திரையில் பரீட்சித்து வெற்றிகரமாக்கினார். கேட்கும், பேசும் திறனற்ற தம்பதியரை மையமாகக் கொண்டு வாழ்க்கை வாழ்வதற்கே என்று போதித்த ‘கோஷிஷ்’ (1972), தாயின் காதலனுடனான மகளின் விநோத உறவைப் பேசிய ‘மௌசம்’(1975), ஒரு நடன மாதுவுக்கும் அவள் பார்வை பறிபோகக் காரணமானவனுக்குமான உணர்வுபூர்வமான உறவைச் சொன்ன ‘கினாரா’ (1977) என எழுபதுகளின் காலம் கடந்து நிற்கும் படங்களை இயக்கினார். வங்காள, ஜப்பானிய இலக்கியங்களில் இருந்தெல்லாம் கதைக்கான சரடுகளைப் பிடித்தாலும், குல்சாரின் கவிமனத்தின் செதுக்கல் பாலிவுட் திரைப்படங்களுக்குப் புதிய திறப்பைத் தந்தது.

திரைப்படங்களின் பொருத்தமான ஜோடியாக இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் சேரும்போது இனிமையான பாடல்கள் பிறக்கும். இதர மொழிகளைப் போலவே இந்தியிலும் அப்படியான போக்கு தீவிரமாக உண்டு. எஸ்.டி.பர்மன் – சாஹிர், ஷங்கர் ஜெய்கிசான் – சைலேந்திரா, லக்‌ஷ்மிகாந்த் பியாரிலால் – ஆனந்த் பக்‌ஷி என்ற வரிசையில் ஆர்.டி.பர்மன் – குல்சார் ஜோடியின் பாடல்கள் பாலிவுட்டின் தனி அடையாளமாக நீடித்திருக்கின்றன.

விருதுகளை அலங்கரித்தவர்

‘ஜெய் ஹோ’ பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து ஆஸ்கர் விருது பெற்றதுடன், அதே பாடலுக்காக கிராமி விருதும் வென்றார். 60 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணத்தில் அவரைப் பல தேசிய விருதுகளும், பத்ம, பால்கே விருதுகளும் அலங்கரித்துள்ளன. எழுபதுகளில் ஹேமமாலினிக்கு நிகராக விளங்கிய நடிகை ராக்கியை குல்சார் திருமணம் செய்துகொண்டதில், ஓராண்டே நீடித்த மண வாழ்க்கையில் மகள் மேக்னா பிறந்த பிறகு இருவரும் விவாகரத்தின்றிப் பிரிந்தனர்.

‘எனது சற்றே நீளமான சிறுகதை’ எனத் தனது இல்லற வாழ்க்கையை வர்ணிக்கும் குல்சார், தனது திரைவாரிசாக மகளை வளர்த்திருக்கிறார். 60-களின் பாலிவுட் திரைப்படங்களில் தனது பங்களிப்பைத் தொடங்கியவர், அண்மையில் மகள் மேக்னா இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ‘சப்பாக்’ திரைப்படம்வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்களைத் தந்துவருகிறார். இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகவிருக்கும் சிறப்புப் பாடலுக்கும் குல்சார் துடிப்பான வரிகளைச் சமைத்திருக்கிறார்.

குழந்தைகளை நோக்கி

பாடல்கள், கதை வசனம், இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றுடன் சினிமாவுக்கு வெளியே கவிதைகள், கதைகள் எழுதுவதிலும் குல்சார் தனி ஈடுபாடு காட்டினார். தனது உருது படைப்புக்காக சாகித்ய அகாடெமி விருது வாங்கிய குல்சார், குழந்தைகளுக்கான படைப்புகளில் அவர் கட்டமைத்த கற்பனைகள் தலைமுறைகள் கடந்தும் பேசப்படுகின்றன.

ஜங்கிள் புக், ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல் - வசனம் எழுதுவதை ஆத்மார்த்தமாகச் செய்தார். 85 வயதில் தனது சினிமா ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டு இலக்கியத்தில் குறிப்பாகக் குழந்தைகளுக்கான படைப்புகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். பழைய புத்தகக் கடையின் தாகூர் கவிதை நூலிலிருந்து தான் உருவான பாதையில், குல்சாரின் குழந்தைகளுக்கான படைப்புகள் தொடர்கின்றன. n எஸ்.எஸ்.லெனின் n

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x