Published : 27 Jan 2020 12:58 PM
Last Updated : 27 Jan 2020 12:58 PM

யெஸ் வங்கியின் மீட்பர் யார்?

எம். ரமேஷ்
ramesh.m@hindutamil.co.in

ஒரு வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியின் (சிஇஓ) மதிப்பு என்னவாக இருக்கும். ரூ.1 கோடி அல்லது அதிகபட்சம் ரூ.100 கோடி. உங்கள் யூகம் சரியாக இருந்தால் ஒரே நாளில் ரூ.22 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்குமா? யெஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ராணா கபூர் கடந்த ஆண்டு செப்டம்பரில் பதவி விலகிய நாளன்று வங்கி பங்குகள் சரிந்ததில் ஏற்பட்ட நஷ்டம்தான் ரூ.22 ஆயிரம் கோடி. அவரது மதிப்பு ரூ.22 ஆயிரம் கோடி என்பதை நம்ப முடியாவிட்டாலும் சந்தை நிகழ்வுகள் அதைத்தான் உணர்த்தியுள்ளன.

கடந்த வாரம் தாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார பேரவை (டபிள்யூஇஎப்) மாநாட்டில் பேசிய பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார், யெஸ் வங்கி நொடித்துப் போக அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி குறித்து சர்வதேச மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு யெஸ் வங்கிக்கு என்னதான் நிகழ்ந்தது?

2004-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கிய சில தனியார் வங்கிகளில் ஒன்றாகத் துளிர்த்ததுதான் யெஸ் வங்கி. ஸ்டார்ட் அப் நிறுவனம் போல ராணா கபூர், அசோக் கபூர் எனும் இரண்டு தொழில்முனைவோர்களால் தொடங்கப்பட்டது இந்த வங்கி.வங்கித் துறையில் தனியார் ஈடுபட முன்வந்தாலும் நிதி திரட்டுவது மிகவும் சிரமமான காலகட்டமாக இருந்தது. அப்போதே மிகுந்த சிரமத்துக்கிடையே ரூ.150 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது இந்த வங்கி.

ஆனால் தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே பொதுப்பங்கு வெளியீடு மூலம் ரூ.300 கோடி திரட்டும் அளவுக்கு வளர்ந்தது. அப்போது வங்கிப் பங்கின் விலை ரூ.45 ஆக இருந்தது. 2017-ம் ஆண்டு இந்த வங்கிப் பங்கு உச்ச பட்ச விலையாக ரூ.385-க்கு விற்பனையானது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 13 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி வந்ததால் வங்கிப் பங்கு உச்ச பட்ச விலையைத் தொட்டது.

யெஸ் வங்கிக்கு தற்போது நாடு முழுவதும் 1,122 கிளைகளும், 1,220 ஏடிஎம்களும் உள்ளன.நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றும் முன்னோடி வங்கியாக இது திகழ்ந்தது. ஆனால் இன்று இவ்வங்கிப் பங்கு ரூ.40-க்கும் கீழாக சரிந்து கொண்டே இருக்கிறது. இதற்கு என்னதான் காரணம்?

வங்கியை உருவாக்கிய நிறுவனர் ராணாகபூரை பதவியில் தொடர விடாமல் தடுத்தது ரிசர்வ் வங்கி. ஆனால் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை அடுத்து வந்தவர்கள் மீது முதலீட்டாளர்கள் வைக்கவில்லை. இதன் விளைவாக சரிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது வங்கியின் கடன் சுமை ரூ.14,700 கோடியாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் 54.5 சதவீதமாகும்.

இந்நிறுவனம் அதிக அளவில் கடன் வழங்கியிருப்பது ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி அளித்த கடன் தொகை ரூ.10,206 கோடியாகும்.

கடந்தஆண்டு அக்டோபரிலேயே யெஸ் வங்கியின் செயல்பாடுகள் மட்டுமின்றி வங்கியின் பங்குகள்குறித்து 40 பங்கு தரகு நிறுவனங்கள் எதிர்மறைகருத்தை வெளியிட்டிருந்தன. போதாக்குறைக்கு வங்கி அளித்த கடன் தொகை விவரங்களை குறைத்து காட்டியதாக வெளியான வதந்திகளும் வங்கிப் பங்குகளின் சரிவுக்குக் காரணமாயின.

அனைத்துக்கும் மேலாக யெஸ் வங்கியில்தங்களுக்கு இருந்த பங்குகள் அனைத்தையும் விற்க ராணா கபூர் எடுத்த முடிவும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை இழப்புக்குக் காரணமானது. ராணா கபூர் குடும்ப நிறுவனமான யெஸ் கேபிடல் (இந்தியா) லிமிடெட், மோர்கன்கிரெடிட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வசமிருந்த யெஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்தன.

யெஸ் வங்கியை உருவாக்கிய அதன் நிறுவனர் ராணாகபூர், வங்கியில் ஒரு பங்கைக் கூட வைத்திருக்காமல் விற்பனை செய்ய எடுத்த முடிவு காரணமாக தனியார் முதலீட்டு நிறுவனங்களும் யெஸ்வங்கியில் தங்களுக்கு இருந்த பங்குகளை மளமளவென விற்பனை செய்தும் வங்கி மீதான மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணமானது.

யெஸ் வங்கியின் பங்குகளை வைத்திருந்த கோடக் பரஸ்பர நிதி (1.14%), எஸ்பிஐ பரஸ்பர நிதி (1.70%), பிராங்க்ளின் டெம்பிள்டன் (1.14%) ஆகியனவும் கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் முழுவதுமாக விற்றுவிட்டு வெளியேறியது முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திவிட்டது. இது தவிர டபிள்யூஎஃப் ஆசிய சிறு நிறுவன நிதியம் தன் வசம் இருந்த 1.63% பங்குகளையும் விற்றது.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டிலேயே 265-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் யெஸ் வங்கி பங்குகளை விற்றுவிட்டன. இதேபோல நார்வேயைச் சேர்ந்த ஓய்வுக் கால நிதியை நிர்வகிக்கும் நிறுவனம் மற்றும் ஹெச்டிஎஃப்சி பரஸ்பர நிதியும் தனது பங்கு அளவை குறைத்துக் கொண்டுள்ளன. இரண்டாம் காலாண்டில் மட்டும் மூன்று முன்னணி காப்பீட்டு நிறுவனங்களும், நான்கு வங்கிகளும் தாங்கள் வைத்திருந்த யெஸ் வங்கி பங்குகளை விற்றுவிட்டு வெளியேறின.

ராணா கபூரின் வெளியேற்றம் தவிர்க்க முடியாதது என்றாலும், நிறுவனங்களின் கட்டுப்பாடு வங்கியின் செயல்பாடுகளை எந்த வகையிலும் பாதிக்காது என்றாலும், உள்ளூர் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்தது வங்கிக்கு மிகப் பெரும் பாதகமாக அமைந்தது.

வங்கியின் நிதி ஆதாரத்தை திரட்ட வங்கி மேற்கொண்ட முயற்சிகளும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. வங்கியின் முதலீட்டாளர் நலன் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்துள்ள பொதுமக்களின் நலன் பாதிக்கக் கூடாது என்பதற்காக வங்கியை வேறு வங்கியுடன் இணைக்கலாம் என்ற யோசனையை ரிசர்வ் வங்கி வலியுறுத்தத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் ஐந்தாவது மிகப்பெரிய தனியார் வங்கியாக பெருமைபெற்ற யெஸ் வங்கியின் சிறப்பான காலங்கள் முடிந்துவிட்டன. பெரும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி அது திரும்பாததால் மிகப் பெரும்நிதி நெருக்கடியில் சிக்கி உழலும் நிலைக்கு இதை அதன் நிறுவனரே தள்ளிவிட்டார்.

ஓராண்டில் மட்டும் யெஸ் வங்கி பங்குகள் 80 சதவீத அளவுக்கு சரிந்துவிட்டன. இது மேலும் சரிந்து திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்படும் முன்பு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது உள்ள சூழ்நிலையில் யெஸ் வங்கி இனி தனித்து செயல்படுவது என்பதுசாத்தியமற்றது. சுற்றிலும் உள்ள எதிர்மறையான கருத்துகளும், கடுமையான நிதி நெருக்கடியும் இனி மேலும் வங்கியை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல உதவாது. வங்கியில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் இப்போது செய்வதறியாது தவிக்கின்றனர்.

மற்றொரு தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியுடன் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் கோடக் வங்கி தலைவர் உதய் கோடக், அதிகபட்சகடன் சுமையை ஒருபோதும் விரும்பாதவர். ஆரம்பத்திலேயே அவர் யெஸ் வங்கியை எடுத்து நடத்த ஆர்வம் காட்டவில்லை. இதனால் இப்போதைக்கு பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே யெஸ் வங்கியின் மீட்பராக உள்ளது.

வங்கித் தலைவர் டாவோஸில் அருளிய உறுதிமொழிகள் யெஸ் வங்கி முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதலாய் அமைந்திருக்கும். ஒருவேளை அதன் வெளிப்பாடாகத்தான் எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார், பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளதாகக் கருதலாம்.

குளோபல் டிரஸ்ட் வங்கி பாணியில் மோசமான நிர்வாகத்தால் சரிந்த தனியார் வங்கிப் பட்டியலில் யெஸ் வங்கியும் சேர்வது காலத்தின் கட்டாயம் போலும். யெஸ் வங்கி இனி தனித்து செயல்படுவது என்பது சாத்தியமற்றது. சுற்றிலும் உள்ள எதிர்மறையான கருத்துகளும், கடுமையான நிதி நெருக்கடியும் இனி மேலும் வங்கியை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல உதவாது. வங்கியில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் இப்போது செய்வதறியாது தவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x