Last Updated : 26 Jan, 2020 09:53 AM

 

Published : 26 Jan 2020 09:53 AM
Last Updated : 26 Jan 2020 09:53 AM

முகம் நூறு: வழிகாட்டிகளாக உயர்ந்து நிற்கும் பெண்கள்

பசியால் வாடுகிறவனுக்கு மீனைத் தருவதைவிட மீன் பிடிக்கக் கற்றுத் தருவது சிறந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையமும் அதைத்தான் செய்துவருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள் இல்லை, தொழிற்சாலைகள் இல்லை, தொழில் முன்னேற்றம் இல்லை என்றெல்லாம் எதிர்மறையாகவே பேசப்பட்டுவரும் நிலையில் தொழில் முனைவோரை உருவாக்கும் பணியில் அந்த மையம் ஈடுபட்டுவருகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இம்மாவட்டத்தில் 4,646 பெண் தொழில் முனைவோரை இம்மையம் உருவாக்கி இருப்பதும், அவர்களில் பலரும் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு முன்னேறியிருப்பதும் பலரும் அறியாத சாதனை!

இந்தியாவில் இத்தகைய பயிற்சி மையங்கள் 586 உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 32 மையங்கள் இருக்கின்றன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்கீழ் 12 மாவட்டங்களில் இதுபோன்ற மையங்கள் செயல்பட்டுவருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்தப் பயற்சி மையத்தை பாளையங்கோட்டை மகாராஜநகர் 5-வது குறுக்குத்தெருவில் நடத்துகிறது. பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு பயிற்சி அளித்து அவர்கள் சுயமாகத் தொழில் செய்வதற்கு இம்மையம் வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.

சணல் பொருள்கள் தயாரித்தல், மளிருக்கான மேம்படுத்தப்பட்ட அழகுக்கலை, நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் பயிற்சி, செயற்கை நகைகள் தயாரித்தல், கணினி பயிற்சி, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பெண்கள் ஆடைகள் வடிவமைப்பு, தோட்டக்கலை பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி, பொம்மைகள் தயாரித்தல் என்று பல்வேறு பயிற்சிகள் இந்த மையத்தால் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகள் மூலம் பத்து ஆண்டுகளில் மட்டும் 4,646 பெண் தொழில் முனைவோரை இந்த மையம் உருவாக்கியிருக்கிறது.

கைகொடுக்கும் பாட்டி வைத்தியம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ஜெயா, எம்.காம். பட்டதாரி. இந்த மையத்தில் டேலி பயிற்சி பெற்று, கணினியில் விதவிதமாக டிசைன் செய்து ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்து வழங்குகிறார். ஆன்லைன் மூலம் ஆர்டர்களைப் பெறும் அளவுக்குத் தொழிலில் முன்னேறிவருகிறார்.

பாளையங்கோட்டையிலுள்ள தலைமை தபால் நிலையம் அருகே பெண்களுக்கான அழகு நிலையத்தை வெற்றிகரமாக நடத்திவரும் மாரியம்மாள், தையல் தொழிலைச் செய்துவந்தார். இந்த மையத்தில் அழகுக் கலை பயிற்சி பெற்று இப்போது மாநகரின் சிறந்த அழகுக் கலை நிபுணர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பி.காம். பட்டதாரியான இவர், தனது சொந்த முயற்சியால் மூலிகைக் குளியல் பொடி, தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மூலிகை எண்ணெய் போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்கிறார். தன்னுடைய பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்ட வைத்தியம் இவருக்குக் கைகொடுக்கிறது.

மானிய கடனுதவி

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட வணிக வளாகத்தில் சணல் பைகளை விதவிதமாகத் தயாரித்து விற்பனை செய்துவரும் சுமதி, திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களுக்குத் தாம்பூலப் பைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான சணல் பைகளைத் தயாரித்து அசத்துகிறார். அடிப்படையில் தையல் தொழிலை மேற்கொண்ட இவருக்கு, ஞெகிழிக்கு மாற்றாகச் சணல் பைகளைத் தயாரித்து வழங்குவது பெருமை சேர்த்திருக்கிறது. அரசுத்துறைகளும் தனியாரும் நடத்தும் கண்காட்சிகளில் இவரது சணல் பைகளும் தவறாமல் இடம்பெறும்.

பனை தொழிலை மையமாகக் கொண்டு தேவர் குளம் பகுதி பெண்களுக்குப் பனையோலைப் பெட்டிகள் உள்ளிட்ட பனையோலைப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால் இப்போது அப்பகுதியில் பனையோலைப் பொருட்கள் தயாரிப்பு களைகட்டியிருக்கிறது.

தொழில்முனைவோராக, மற்றவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அளிப்பவர்களாக முன்னேறிக்கொண்டிருக்கும் இந்தப் பெண்களைச் சந்தித்துத் பேசியபோது, சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் அவர்களிடம் நிரம்பி வழிவதை உணர முடிந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் ரா. சியாமளநாதன் கூறும்போது, “தொழில் பயிற்சி பெறுவதற்காகப் பெண்கள் அதிக அளவில் ஆர்வமாக வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாகக் கிராமப்புறங்களில் கல்வியில் பின்தங்கிய பெண்கள் பலரும் வெவ்வேறு பயிற்சிகளைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு மானிய கடனுதவிகளையும் அளிக்கிறோம்” என்றார்.

சவால்களை எதிர்கொண்டு சாதிக்கும் இந்தப் பெண்கள், முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு வழிகாட்டிகளாக விளங்குகிறார்கள்.

படங்கள்: மு.லெட்சுமி அருண்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x