Published : 13 Jan 2020 14:36 pm

Updated : 13 Jan 2020 14:36 pm

 

Published : 13 Jan 2020 02:36 PM
Last Updated : 13 Jan 2020 02:36 PM

நவீனத்தின் நாயகன் 09: ஆரம்பம் - கனவுகள் பலிக்கும் நேரம்!

navinathin-nayagan

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ஈலானுக்கு எப்போதுமே முதல் ஹீரோ, அம்மாவழித் தாத்தா ஜாஷூவா. சாதனை படைத்தோரின் வாழ்க்கை வரலாறுகளைத் தேடித்தேடிப் படித்தபோது, இன்னும் இருவர் – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein), பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin).


ஐன்ஸ்டைன் (1879 – 1955), இருபதாம் நுற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர். ‘‘சார்புக் கோட்பாட்டுக் கொள்கை” (Theory of Relativity) கண்டுபிடித்தார். பல துறைகளில், குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் சம்பிரதாயங்களை உடைத்துப் புதிய பாதைகள் போட்ட சித்தாந்தம்.

இதற்காக, 1921 – ல் இயற்பியலுக்கான நோபல்பரிசு பெற்றார். 1999 – ல், புதிய ஆயிர மாண்டைக் குறிப்பிட்டு பிரபல “டைம்” பத்திரிகைவெளியிட்ட சிறப்பிதழ், "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்னும் மகுடத்தை ஐன்ஸ்டைனுக்கு வழங்கியது. இயற்பியலில் இன்னொரு ஐன்ஸ்டைன் ஆகவேண்டும் என்பது ஈலானின் ஆசை.

இதைபோல், தொழில் முனைப்பில் ஈலானின் முன்னோடி, பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (1706 - 1790). சகலகலா வல்லவர். வறுமையில் பிறந்து,சொந்த முயற்சியால் படிப்படியாக முன்னேறியவர். அச்சகம் நடத்தினார். நாளிதழ் தொடங்கினார். எதிலும் புதுமை காட்டினார்.

அன்றைய பஞ்சாங்கங்களில் நாள்காட்டி, விவசாயிகள் விதை விதைக்க ஏற்ற நாட்கள், பருவநிலை விவரங்கள் ஆகிய சமாச்சாரங்கள் இருந்தன. இவற்றைத் தாண்டி, சுயமுன்னேற்ற அம்சங்கள், பழமொழிகள், கவிதைகள், கணித விடுகதைகள், சமையல் குறிப்புகள், ராசிபலன் எனப் பல புதுமைகளைச் சேர்த்தார். 1732 – ல் வெளியீடு. அடுத்த 27 வருடங்களுக்கு, பைபிளுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் விற்பனையான புத்தகம், பெஞ்சமினின் Poor Richard's Almanac.

எரிபொருள் சிக்கனமான ஸ்டவ், இடிதாங்கி, பைஃபோக்கல் மூக்குக் கண்ணாடி (Bifocal Spectacles) ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். ``தன் சுயநலத்துக்கு அல்ல, சமுதாய நன்மைக்கே” என்னும் உறுதியோடு, இந்தக் கருவிகளுக்குக் காப்புரிமை வாங்க மறுத்தார். இவற்றைத் தயாரிக்கும் உரிமையை அனைவரும் பயன்படுத்தும் இலவச சொத்தாக்கினார்.

1948. பெஞ்சமினுக்கு 42 வயது. தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தார். பணம் கொட்டும் பிசினஸ், வசதிகள், அன்பான மனைவி, குழந்தைகள், சமுதாயத்தில் மதிப்பு. மாபெரும் சபையினில் நடந்தால் மலையென வந்து குவியும் மாலைகள்... சாதாரண மனிதனுக்குத் திருப்தி வரும். இவர் மனதிலோ, தன்னலம் தாண்டிப் பொதுநலச் சேவையில் முத்திரை பதிக்கும் ஆசைகள், பேராசைகள். வெற்றிகரமான பிசினஸிலிருந்து விலகினார். பிலடெல்பியா நகரத்தில்நூலகம், பொது மருத்துவமனை, தீயணைப்புத் துறை, ஆயுள்காப்பீட்டு நிறுவனம், பென்சில்வேனியா பல்கலைக் கழகம் ஆகியவற்றை உருவாக்கினார்.

1750 காலகட்டத்தில் அமெரிக்க பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. விடுதலைப் போராட்டம் முளைவிடத் தொடங்கியிருந்தது. பெஞ்சமின் இதன் முன்னணி வீரர்களில் ஒருவரானார். சுதந்திரப்பிரகடன வரைவுக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். பிரான்ஸ் நாட்டுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, அமெரிக்க விடுதலைப் போருக்கு அவர்களிடம் ஆதரவும், நிதியுதவியும் வாங்கி வந்தார். நீடித்து நிற்கும் அவர் புகழுக்கு இவையும் காரணங்கள்.

பெஞ்சமினை ஹீரோவாக வரித்ததற்கு ஈலான் சொல்லும் ஐந்து காரணங்கள்;

1. பெஞ்சமின் ஒரு சுயம்பு லிங்கம். அச்சுத்தொழில், எழுத்து ஆகிய திறமைகளை ஆசான் யாரும் இல்லாமல் தானே கற்றுத் தேர்ந்தவர்.

2. அறிவுஜீவிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு, தன் திறமைகளைப் பட்டை தீட்டியவர்.

3. வாசிப்பை சுவாசிப்பாகக் கொண்டவர்.

4. நேரம், பணம் இரண்டையும் சிக்கனமாகச் செலவிடுபவர்.

5. தன் கண்டுபிடிப்பு ஆற்றலை, மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் ஒருமுகப்படுத்தியவர்.

இந்த ஐந்து கொள்கைகளும் ஈலானின் வாழ்க்கைக் கலங்கரை விளக்கங்களாயின.

ஐன்ஸ்டைன் ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து உச்சம் தொட்டவர்; பெஞ்சமின் அமெரிக்கக் குடிமகன். ஈலானும், அம்மாவும் ஏற்கெனவே, கனடா தற்காலிகப் புகலிடம், அமெரிக்கா போவதற்கான நுழைவாயில் என்று முடிவு செய்திருந்தார்கள். ஐன்ஸ்டைன், பெஞ்சமின் வாழ்க்கை வரலாறுகள் இந்த ஆசையை இன்னும் உறுதியாக்கின. கல்லூரிப் படிப்பின் இரண்டாம் வருடத்தில் இருந்த அவன் தன் கனவுபுரிக்குப் போகும் வழி தேடினான். மாணவனாகப் போவது தான் சுலப வழி. மேற்படிப்புக்காக அப்ளை செய்யத் தொடங்கினான்.

அவனுக்கு எதிலும், எப்போதும் முதல் தரம் வேண்டும்; இரண்டாம் தரத்தை ஏற்றுக்கொள்ளவே மாட்டான். ஆகவே, தலைசிறந்த கல்லூரிகளுக்கு மட்டுமே விண்ணப்பங்கள். அதிலும், அவன் தேர்வு , ஹீரோ பெஞ்சமின் ஃபிராங்க்ளின் நிறுவிய, உலகின் டாப் 10 கல்விநிலையங்களில் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக் கழகம். இதற்கான அறிவு, மதிப்பெண்கள், பேச்சுப்போட்டிப் பரிசுகள் போன்ற கிரீடங்கள் அவனிடம் இருந்தன. ஒரே ஒரு பிரச்சினைதான். அங்கே படிப்புக் கட்டணம் மிக அதிகம். அவனிடம் அத்தகைய பணவசதி இல்லை. ஸ்காலர்ஷிப் கிடைத்தால் மட்டுமே சாத்தியம்.

1988–ம் ஆண்டில், பாலோ கொயலோ (Paulo Coehlo), போர்த்துக்கீசிய மொழியில் புத்தகம் எழுதினார். தமிழ் உட்பட 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. விற்பனை 6 கோடி 50 லட்சம் பிரதிகள்! இந்த நூலின் மையக்கருத்து என்ன தெரியுமா? ``நீங்கள் எதற்காவது மனமார ஆசைப்பட்டால், அதை அடைய இந்தப் பிரபஞ்சமே உங்களுக்கு உதவி செய்யும்.” (When you want something, all the universe conspires in helping you to achieve it.) ஈலானுக்குப் பாலோ கொயலோவின் வாக்குப் பலித்தது. பென்சில்வேனியா பல்கலைக்கழகம் முழுக் கல்வி உதவித்தொகையோடு அட்மிஷன் தந்தது.

இதைவிடப் பெரிய பரிசாக வேறெதை ஈலான் எதிர்பார்த்திருக்க முடியும்? படிப்புக் கட்டணம் கிடையாது. ஆனால், சாப்பாடு, கைச்செலவுகள் அமெரிக்கக் கல்லூரிகளில் அறை மட்டுமே தருவார்கள். கான்டீனிலோ, வெளியிலோ, எங்கேயும் விருப்பம் போல் உணவருந்தலாம். ஆனால், அவ்வப்போது காசு தரவேண்டும். அம்மா தன் சேமிப்பிலிருந்து 2,000 டாலர்கள் புரட்டித் தந்தார். அடுத்தபடியாக, எப்போது, எவ்வளவு பணம் அனுப்பமுடியும் என்று தெரியாது. அது தீரும் முன், அவன் ஏதாவது பகுதிநேர வேலை தேடும் கட்டாயம்.

அமெரிக்கப் படிப்பு தன் குடும்பத்தின் திருப்புமுனை என்பதை ஈலான் உணர்ந்தான். ஆகவே, அத்தனை சிரமங்களுக்கும் அவன் தயார். புறப்பட்டான். தம்பி கிம்பலும், தங்கை டோஸ்க்காவும் அழுதார்கள். அவனுக்கும், அம்மாவுக்கும் கண்ணீரே வரவில்லை. ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரை, இது லட்சியப் பயணம்.

ஈலான் பல்கலைக்கழகத்துக்கு வந்தான். அவன் இதுவரை வசித்த கனடாவின் கிங்ஸ்டன் நகரத்திலிருந்து பிலடெல்பியா 619 கிலோமீட்டர் தூரம்தான். அதாவது, சென்னையிலிருந்து திருநெல்வேலி போகும் தூரம். ஆனால், வாழ்க்கைமுறையில் எத்தனை வித்தியாசம்? கிங்ஸ்டனில் நிதானமான வாழ்க்கை.பிலடெல்பியாவில் ஸ்பீட், ஸ்பீட். எல்லோரும் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு ஓடினார்கள். ஈலான், நாளைய வேலையை நேற்றேசெய்யத் துடிப்பவன். ஆகவே, இந்த வேகத்தைஅவன் விரும்பினான், ரசித்தான், அனுபவித்தான்.

அடிமட்டத்திலிருந்து வருபவர்களுக்கு வாய்ப்புக் கதவுகள் எப்போதாவது தான் திறக்கும்.உழைப்பைக் கொட்டி, அதை நிரந்தமாக்கிக்கொள்ள வேண்டும். சிறுவயது முதலே, அறிவியல் புத்தகங்களைக் கரைத்துக் குடித்ததால், இயற்பியல் பாடத்தில் ஏகப்பட்ட ஆர்வம். வருங்காலத்தில் பிசினஸ் தொடங்கவேண்டும் என்னும் ஆசை. அதற்குப் பொருளாதார அறிவு தேவை என்று அவன் வழிகாட்டி பீட்டர் நிக்கல்சனும், பிறரும் சொல்லியிருந்தார்கள்.

பல்கலைகழகக் கல்லூரியில் இயற்பியல் படிப்பும், அதே வளாகத்தில் இருந்த பிரபல வார்ட்டன் ஸ்கூலில் (Wharton School) பொருளாதாரப் படிப்பிலும் சேர்ந்தான். இரட்டைக் குதிரை சவாரி. இரு மடங்கு உழைக்கவேண்டும். படிப்பு, படிப்பு, படிப்பு. உடல் அசதியால் தூக்கம் கண்களைத் தழுவும்போது மட்டுமே படுக்கை. இந்த உழைப்பு சாதாரண மனிதர்களைச் சோர்வடையச் செய்யும். ஆனால், ஈலான் நரம்பு நாளங்களில் புதிய ரத்தம் பாய்ச்சியது.

அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் என விவாதிக்கும் அலைவரிசைத் தோழர்கள் கிடைத்தார்கள். அவர்களோடு கணிசமான நேரம் செலவிட்டான். அம்மா சொன்னார்,``ஒரு நாள். ஈலானின் சக மாணவர்களோடு லஞ்சுக்குப் போனேன். முழுநேரமும் பிசிக்ஸ் சமாச்சாரங்கள் பற்றிப் பேச்சு. உணவு விடுதி அதிரும்படி சிரித்தார்கள். என்ன பேச்சோ, என்ன ஜோக்கோ, எனக்கு ஒன்றுமே புரியவில்லை.”

இப்படி சீரியஸாக இருந்தாலும், அம்மாவழித் தாத்தாவின் ரத்தம் உடலில் ஓடியதால், ஈலான் மனம் த்ரில்லுக்கு ஏங்கியது. ஹாஸ்டல் வாழ்க்கைபோரடித்தது. சக மாணவனான ஆடியோ ரெஸ்ஸிக்கும் (Adeo Ressi) இதே எண்ண ஓட்டம். ஹாஸ்டல் அறையைக் காலி செய்தார்கள். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெகுதூரத்தில் இருந்த பத்து அறைகள் இருந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள். இரண்டே பேருக்கு

இத்தனை பிரம்மாண்ட வீடு எதற்கு? அதிலும் ஈலான் ஒவ்வொரு பென்னியையும் கணக்குப் பார்த்துச் செலவு செய்யும் சிக்கனச் செம்மலாயிற்றே? வீட்டுச் சொந்தக்காரருக்குத் தெரியாமல் அவர்கள் போட்டிருந்தது ஒரு டுபாக்கூர் திட்டம்!

(புதியதோர் உலகம் செய்வோம்!)


நவீனத்தின் நாயகன்ஆரம்பம்கனவுகள்அம்மாவழிஈலான் மனம்முதல் ஹீரோAlbert EinsteinBenjamin Franklin

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author