Published : 10 Jan 2020 12:55 pm

Updated : 10 Jan 2020 12:55 pm

 

Published : 10 Jan 2020 12:55 PM
Last Updated : 10 Jan 2020 12:55 PM

விடைபெறும் 2019: மனம் கவர்ந்த புதுமுகங்கள்

farewell-2019

சினிமாவில் தன் முகம் தென்பட்டுவிடாதா என்று ஏங்கிக் கிடக்கும் எத்தனையோ பேர், அறிமுகப் படங்களில் கவன ஈர்ப்பை ஏற்படுத்திய பிறகுதான் உச்ச நட்சத்திரங்களாக மிளிர்கிறார்கள். அந்த வகையில் அறிமுக நடிகர் என்று நம்பமுடியாத அளவுக்கு முதல் படத்திலேயே தடம் பதித்து, 2019-ல் தங்கள் திறமையை அடையாளம் காட்டிய கலைஞர்களின் பட்டியல் இது.

த்ருவ் விக்ரம் - ஆதித்ய வர்மா

‘ஆதித்ய வர்மா'வில் அட்டகாசமான நடிப்பை வழங்கினார் த்ருவ் விக்ரம். அப்பா விக்ரமை நினைவூட்டும் குரல், அவரது உடல்மொழியின் சாயல் என தன்னையும் அறியாமல் சில இடங்களில் வெளிப்படுத்திய த்ருவ், படத்தை முழுவதுமாகத் தன் தோளில் தாங்கினார். முதல் படம் என்று சொல்லும்படி எந்தத் தடுமாற்றத்தையும் த்ருவிடம் பார்க்க முடியவில்லை. கதாபாத்திரத்துக்காக மெனக்கெடலில் அட போட வைத்தார்.

ஷமன் மித்ரு - தொரட்டி

‘தொரட்டி' படத்தின் மூலம் யதார்த்தத்தின் சாட்சியாக நிற்கிறார் ஷமன் மித்ரு. தயாரிப்பாளராக இருந்து நாயகனாக புரமோஷன் பெற்றாலும் நடிப்பில் எந்தக் குறையும் வைக்காமல் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தினார். களவாணிகளின் நண்பனாக இருந்துகொண்டு, கறிக் கஞ்சிக்காக ஆட்டுக்குட்டியை எடுத்துச் செல்லும் ஷமன், மனைவியை இழந்து நின்ற தருணத்தில் குமுறும்போது தேர்ந்த நாயகனுக்கான இயல்புகளை வெளிப்படுத்தினார். யதார்த்தப் படங்களில் ஷமன் நிச்சயம் பொருந்துவார்.

ஆன் ஷீத்தல் - காளிதாஸ்

அழகாக இருப்பதைக் காட்டிலும் அழுத்தமாக நடிப்பதே பெண்ணுக்குப் பேர் சொல்லும் படமாக அமையும் என்பதை ‘காளிதாஸ்' மூலம் ஆன் ஷீத்தல் நிரூபித்தார். தன்னுடன் நேரம் செலவழிக்காத கணவனின் அன்புக்காக ஏங்கும் ஆன் ஷீத்தல், கற்பனைக் கதாபாத்திரத்துடன் வாழ்வது, வாழ்க்கையின் குழப்பமான மனநிலையில் கொலைகளுக்கான வேராக அமைவது என மிகவும் சிக்கலான கதாபாத்திரத்தை நேர்த்தியாகக் கையாண்டு அசரவைத்தார்.

டீஜே அருணாசலம் - அசுரன்

‘அசுரன்' படத்தில் தனுஷின் மூத்த மகனாக அரிதாரம் பூசியவர் ஈழத் தமிழர் டீஜே அருணாச்சலம். அம்மாவை அடித்த வடக்கூரான் கும்பலை தட்டிக் கேட்ட துணிச்சல், அப்பாவைக் காலில் விழ வைத்த வடக்கூரானை திரையரங்கக் கழிப்பறையில் தாக்கி அவமானப்படுத்துவது என இளைஞனுக்கே உரிய கோபத்தையும் ஆதங்கத்தையும் அழுத்தமான நடிப்பில் கண்முன் நிறுத்தினார்.

மேகா ஆகாஷ் - பேட்ட, எனை நோக்கி பாயும் தோட்டா

‘எனை நோக்கி பாயும் தோட்டா' மூலம் அறிமுகம் ஆனவர் மேகா ஆகாஷ். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே இந்தப் படம் ஒருவழியாக இந்த ஆண்டு வெளியானது. அதற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து ‘பேட்ட', ‘பூமராங்', ‘வந்தா ராஜாவாதான் வருவேன்' என மொத்தம் நான்கு படங்களில் திறமை காட்டினார் மேகா ஆகாஷ். கமர்ஷியல் நாயகிக்கான கச்சிதமான வார்ப்பில் காந்தமாய் ஈர்த்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ் - மெஹந்தி சர்க்கஸ்

அறிமுக நடிகர்கள் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வாய்த்துவிடாத ஒன்று அறிமுகக் காட்சியே மறக்க முடியாத ஒன்றாக அமைவது. அது ‘மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எளிதில் வாய்த்தது. மதுபான விடுதியில் பாட்டுப் போட்டியின்போது அறிமுகமாகும் மாதம்பட்டி ரங்கராஜ் அட்டகாசமான நல்வரவு.
80-களின் சாயலில் ஒரு கலா ரசிகனுக்கான தோற்றத்துடன் மாதம்பட்டி ரங்கராஜ் அப்படியே பொருந்திப் போனதுதான் ஆச்சரியம். 25 வயதுத் தோற்றம் 45 வயதுத் தோற்றம் என முதல் படத்திலேயே இருவிதமான பரிமாணங்களில் இளையராஜாவின் ரசிகனாகவே மாறிப் போயிருந்தார்.

பிரியங்கா ரூத் - கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்

தமிழ் சினிமாவில் பெண்கள் பழிவாங்கத் துடித்தால், அவர்கள் பின்னிருந்து இயக்கும் கருவிகளாகவோ திட்டம் தீட்டுவதில் மூளையாகவோ செயல்படுவார்கள் என்ற வழக்கமான ஃபார்முலாவை உடைத்து தன் உயிரைப் பணயம் வைத்து பழிவாங்கும் விதத்தில் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' நாயகி பிரியங்கா ரூத் அதிரவைத்தார். கவர்ச்சி ததும்பும் காதல், கணவனை இழந்து தவிக்கும் தருணம், கொலைவெறியைக் கண்களில் படரவிட்டு நிற்கும் கம்பீரம், சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷம் எனத் திரும்பிப் பார்க்க வைத்தார்.

விஷ்வா - சாம்பியன்

நிஜத்தில் விளையாட்டு வீரராக இருப்பதால் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட சாம்பியனில் சிரத்தையான நடிப்பில் விஷ்வா வியப்பூட்டினார். பதின்பருவ மாணவனுக்கே உரித்தான கோபம், விளையாட்டின் மீதான ஆர்வம், ஆடுகளத்தில் நிகழ்த்தும் அதிரடி, அப்பாவின் சாவுக்குப் பழிவாங்கப் புறப்படும் ஆக்ரோஷம் என பாய்ச்சலை நிகழ்த்தினார்.

லிஜோமோள் ஜோஸ் - சிவப்பு மஞ்சள் பச்சை

அம்மாவாக நடந்துகொள்ள முடியாத குற்ற உணர்வு, அக்காவாக நடந்துகொள்ளும்போது அன்பின் வெளிப்பாடு, காதலியாக நடந்துகொண்டதில் உள்ள தேவை, தம்பியை நினைத்து உருகும் குணம், கணவனையும் தம்பியையும் சேர்த்து வைக்கப் போராடும் மனம் எனத் தேர்ந்த நடிப்பால் ‘சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் மூலம் வசீகரித்தார் லிஜோமோள் ஜோஸ். குடும்பப் பாங்கான முகம், கண்ணியமான உடல்மொழி இரண்டாலும் தனித்து ஜொலித்தார்.

நாகவிஷால் - கே.டி. (எ) கருப்புதுரை

குழந்தைக் கதாபாத்திரம் என்றால் நாகவிஷாலைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ‘கேடி' படத்தின் இரு பலங்களில் ஒற்றை பலம் நாகவிஷால்தான். கருப்புதுரையை ‘கேடி’ என்று சுருக்கமாக அழைப்பதில் தொடங்கி, அவரை அன்பால் மிரட்டியது, அவருடைய நடவடிக்கைகளுக்குப் பொருள் புரியாமல் தவிப்பது வரை எல்லாக் காட்சிகளிலும் ராமசாமிக்கு ஈடுகொடுத்து பெரிய நடிகர் போலவே நடித்து, பிரமிப்பைத் தந்தார். சின்ன வயதிலேயே பெரிய மனிதரின் பக்குவத்தோடு, படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், லாகவமாக நடித்த விதம் பாராட்டுக்குரியது.

அரிசங்கர் - தோழர் வெங்கடேசன்

‘தோழர் வெங்கடேசன்' படத்தின் மூலம் அற்புதமான நடிப்பால் மனதில் நின்றார் அரிசங்கர். ‘என் கை போச்சே' என்று கதறி, ‘சேகர் அண்ணே மன்னிச்சிடு' என்று பவ்யமாகக் கூறி, முதலாளி என்று கெத்து காட்டி, ஸ்டேஷனுக்குள் தன்னிடம் வேலை செய்யும் சிறுவனிடம் கெஞ்சி பலவிதங்களில் பக்குவமான நடிப்பை வழங்கினார். பஸ்ஸுக்குப் பாதுகாப்பு வழங்காவிட்டால் கோர்ட்டில் போட்டுக் கொடுத்துடுவேன் என்று போலீஸிடமே போட்டு வாங்கிய விதம் பலே.

சந்தோஷ் நம்பிராஜன் - டுலெட்

ஒளிப்பதிவாளர்கள் நடிகர்களாவது அரிதினும் அரிது. ஆனால், இதிலிருந்து வேறுபட்டு ஒளிப்பதிவாளர்கள் சூழ் சினிமாவில் ஒரு நாயகன் உருவான விதம் அலாதியானது. ‘கருப்பம்பட்டி', ‘கத்துக்குட்டி' படங்களின் மூலம் ஒளிப்பதிவாளராக பரிச்சயமான சந்தோஷ் நம்பிராஜன், செழியன் இயக்கிய ‘டுலெட்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். நடுத்தரக் குடும்பத்தின் வீடு தேடும் படலத்தின் வலிகளை அப்படியே நமக்குள் கடத்திய விதத்தில், பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் தன்னை நிரூபிக்கப் போராடும் உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் சந்தோஷ் ஆச்சரிய வரவு!

சத்யகலா - தொரட்டி

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நாயகியா என்று புருவம் உயர்த்தி நிமிர்ந்து பார்க்க வைத்த பெருமை சத்யகலாவையே சேரும். கிராமத்துப் பெண்ணின் துடுக்குத்தனத்தையும் தைரிய குணத்தையும் அப்படியே ‘தொரட்டி'யில் பிரதிபலித்தார். அடம் பிடித்து மித்ருவைக் கட்டிக்கொள்ளும் அவர், கணவனிடம் மட்டும் கண்களால் பேசியதும், களவாணிகளிடம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உறுதியுடன் பேசியதும் ரசனை. கணவன் மீதான கண்டிப்பையும் காதலையும் ஒருசேரக் காட்டும்போது தேர்ந்த நடிப்பால் மனதில் நிறைந்தார். குளத்தில் இருந்து மீட்கும்போது சத்யகலா சவமாகவே காட்சி அளித்தது அவர் நடிப்புக்குக் கிடைத்த நற்சான்றே!

அபி ஹசன் - கடாரம் கொண்டான்

கடாரம் கொண்டானில் விக்ரமை விட அபி ஹசனுக்குத் தான் காட்சிகள் அதிகம். ‘வேறேதும் தேவையில்லை நீ மட்டும் போதும்’ பாடலின் மூலம் படம் பார்க்காத ரசிர்களிடமும் அபி ஹசன் அப்ளாஸ் அள்ளினார். மனைவி அக்‌ஷரா ஹாசன் மீதான காதல், அவரை மீட்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிவது, இளம்பெண்ணை மிரட்டி பின் மன்னிப்புக் கோருவது என அப்பாவி முகத்தை மீறியும் அதிரடி காட்டியும், பரிதவிப்பான நடிப்பிலும் ஸ்கோர் செய்தார்.

அர்ஜுன் தாஸ் - கைதி

‘கைதி'யால் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த சிறந்த எதிர் நாயகன் அர்ஜுன் தாஸ். ஆர்.ஜே.வாக இருந்து நடிப்பின் மீதான ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தவர். போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞனின் நடை, உடை, பாவனைகளை அப்படியே அச்சரம் பிசகாமல் பிரதிபலித்தார். ரகுவரனை நினைவூட்டும் நடிப்பு என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு அர்ஜுன் தாஸ் தன் ஆளுமையை ஒற்றைப் படத்தில் நிறுவினார்.

அஸ்வந்த் - சூப்பர் டீலக்ஸ்

‘சூப்பர் டீலக்ஸ்' படம் பார்த்த அத்தனை பேர் இதயத்திலும் இயல்பாக இடம் பிடித்தவர் ராசுக்குட்டி கேரக்டரில் நடித்த அஸ்வந்தாகத்தான் இருக்க முடியும். தந்தையின் வருகையை எதிர்பார்த்து வாசலுக்கும் வீட்டுக்கும் ஓடும் ஆர்வம், தந்தையைப் பார்க்கும் குதூகலம், ‘நீ ஆம்பிளையானாவா இரு, பொம்பிளையானாவா இரு... ஆனா எங்ககூட இருந்து தொலையேன்' என்ற எதிர்பார்ப்பில்லாத, தூய்மையான அன்பைப் பிரதிபலித்த அஸ்வந்த் நம்ப முடியாத நடிப்பில் தனித் தடம் பதித்தார். 7 வயதுச் சிறுவனுக்குள் இப்படிப்பட்ட நடிப்பா என்று பார்த்தவர்கள் அசந்து போனார்கள்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

விடைபெறும் 2019புதுமுகங்கள்அறிமுகப் படங்கள்உச்ச நட்சத்திரங்கள்த்ருவ் விக்ரம்ஆதித்ய வர்மாதொரட்டிகாளிதாஸ்அசுரன்மெஹந்தி சர்க்கஸ்கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்சாம்பியன்சிவப்பு மஞ்சள் பச்சைதோழர் வெங்கடேசன்கைதிசூப்பர் டீலக்ஸ்எனை நோக்கி பாயும் தோட்டா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author