Published : 08 Jan 2020 01:17 PM
Last Updated : 08 Jan 2020 01:17 PM

டிங்குவிடம் கேளுங்கள்: மல்லிகைக்கு மட்டும் மணம் ஏன்?

மல்லிகைப் பூவுக்கு மட்டும் வாசனை இருக்கிறது. கனகாம்பரத்துக்கு வாசனை இல்லையே ஏன், டிங்கு?

- அ. கோபி, 3-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, கக்காம்பட்டி.

தாவரங்கள் பெரும்பாலும் பூச்சிகளையும் பறவைகளையும் மகரந்தச் சேர்க்கைக்கு நம்பியிருக்கின்றன. சில பூக்கள் பகலில் மலர்கின்றன. சில பூக்கள் மாலையில் மலர்கின்றன. பகலில் மலரும் கனகாம்பரம், செம்பருத்தி போன்ற பூக்கள் கண்கவர் வண்ணங்களில் காணப்படுகின்றன.

பூச்சிகளும் பறவைகளும் நிறத்தைப் பார்த்து, பூந்தேனைச் சுவைக்க வருகின்றன. அப்போது மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இரவில் மலரும் மல்லிகை, முல்லை போன்ற பூக்கள் எளிதாகக் கண்களுக்குப் புலப்படும் விதத்தில் வெளிர் நிறங்களிலும் நறுமணத்துடனும் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் பூச்சிகள் இந்தச் செடிகளை நாடி வருகின்றன, மகரந்தச் சேர்க்கையும் நடைபெறுகிறது, கோபி.

மண்புழுவுக்கு மட்டும் எலும்பு இல்லையே ஏன், டிங்கு?

- ரெ. பிரேமிகா, 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொய்யாமணி.

புழுக்கள் எளிமையான வடிவமைப்பைப் பெற்றுள்ளன. இவற்றுக்கு முதுகெலும்பும் கிடையாது, கடினமான ஓடும் கிடையாது. இவற்றின் உடல் தசைகள் வளையங்களாக, பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மென்மையான தசைகளை நீட்டவும் சுருக்கவும் முடியும் என்பதால், மண்ணுக்குள் நகர்வதற்கு ஏற்றதாக இருக்கிறது. மண்புழுக்களால் தலைப் பக்கமிருந்தும் வால் பக்கமிருந்தும் எந்தத் திசையில் வேண்டுமானாலும் நகர முடியும், பிரேமிகா.

மாத்திரைகளைத் தேநீர், காபியோடு சேர்த்துச் சாப்பிடலாமா, டிங்கு?

- அக்‌ஷயாதேவி, 5-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, குமரி.

மாத்திரைகளை அப்படியே விழுங்க இயலாது. அதனால் தண்ணீரைப் பயன்படுத்தி விழுங்கலாம். காபியில் Caffeine, தேயிலையில் Theine போன்ற வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றுடன் மாத்திரைகளைச் சேர்த்துச் சாப்பிடும்போது, மாத்திரைகளின் வீரியம் குறைந்துவிடும் சாத்தியம் இருக்கிறது. இரும்புச் சத்துக்கான மாத்திரைகளை இப்படிச் சாப்பிடும்போது உடலில் சத்தைச் சேர விடாமல் தடுக்கவும் செய்துவிடுகிறது. அதனால்தான் தண்ணீரில் மாத்திரைகளைப் போட வேண்டும் என்கிறார்கள், அக்‌ஷயா தேவி.

ஆசிரியர்கள் சிவப்பு மையையும் மாணவர்கள் நீல மையையும் பயன்படுத்துவது ஏன், டிங்கு?

- ஈ. ஆஃபியா பானு, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி பள்ளி, சமயபுரம், திருச்சி.

பல வண்ண மைகளின் பயன்பாட்டுக்குப் பெரிதாக விளக்கமோ, சட்டமோ இல்லை. மாணவர்கள் அதிகம் எழுத வேண்டியிருப்பதால், நீல மை கண்களை உறுத்தாமலும் பளிச்சென்றும் தெரியும். ஆசிரியர் அதே நீல மையால் திருத்தினால், அந்தத் திருத்தம் சட்டென்று கண்களுக்குப் புலப்படாது. எனவே சிவப்பு மையால் திருத்துகிறார்கள்.

நம் நாட்டில் மாணவர்கள் நீலம், ஆசிரியர்கள் சிவப்பு, உயர் அதிகாரிகள் பச்சை என்று மைகளைப் பயன்படுத்துகிறார்கள். இது வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. மற்றபடி நீங்களோ நானோ சிவப்பு மையையோ பச்சை மையையோ பயன்படுத்தினால் சட்டப்படி தவறு இல்லை. ஆனால், வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக நீங்கள் சிவப்பு மையைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஆசிரியர்கள் சொல்லக்கூடும், ஆஃபியா பானு.

செங்கல் எப்படித் தயாரிக்கிறார்கள், டிங்கு?

- பி. சபரிஸ்ரீ, 5-ம் வகுப்பு, எஸ்.என்.ஆர். வித்யா நேத்ரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, விண்ணப்பள்ளி கிராமம், ஈரோடு.

சுமார் 9,500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் களிமண்ணைப் பயன்படுத்தி, வெயிலில் காய வைத்து, செங்கற்களாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். நீண்ட காலம் உழைக்க வேண்டும் என்பதற்காகப் பிறகு சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர். களிமண்ணில் கற்கள் அகற்றப்பட்டு, அலுமினா, சுண்ணாம்பு, இரும்பு ஆக்சைடு, மக்னீசியம் போன்ற மூலப் பொருட்களைச் சேர்த்து, அச்சில் வார்த்து, சூளையில் சுட்டு செங்கற்களாக எடுக்கிறார்கள்.

செங்கல்லின் அளவு ஒவ்வொரு நாட்டுக்கும் சிறிதளவு வேறுபடுகிறது. இந்தியாவில் 190மிமீ X 90மிமீ X 90மிமீ, 200மிமீ X 100மிமீ X 100மிமீ அளவுகளில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன, சபரிஸ்ரீ. என் நண்பன் அழகிய பேனாவைப் பரிசாகக் கொடுத்தான். மிகவும் கவனமாகத்தான் வைத்திருந்தேன், எப்படியோ தொலைந்துவிட்டது. பரிசைப் பத்திரமாக வைத்திருக்கத்

தெரியாதவன், என் நண்பனாக இருக்க வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டான். இதில் என் தவறு என்ன, டிங்கு?

- ஆர். நவீன் குமார், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

உங்கள் தவறு ஒன்றும் இல்லை, நவீன் குமார். நட்போ உறவோ பொருட்களில் இல்லை. நாம் எவ்வளவு அன்பையும் மதிப்பையும் வைத்திருக்கிறோம் என்பதில்தான் நட்போ உறவோ நீடித்திருக்கும். உங்கள் நண்பர் கொடுத்த பரிசை நீங்கள் அலட்சியமாகத் தொலைத்திருக்க மாட்டீர்கள். அதேபோல் நண்பரும் அதிக அன்பு வைத்திருப்பதால்தான் உங்களுக்குப் பரிசைக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், இது போன்ற பரிசுப் பொருட்கள் நீண்ட காலம் நிலைக்கக்கூடியவை அல்ல. அதனால் அவற்றை வைத்து ஒருவரின் நட்பை எடை போடக் கூடாது. ’அன்பு ஒன்றே நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடியது. அதைத் தொலைக்காமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்’ என்பதை உங்கள் நண்பரிடம் சொன்னால், அவரும் புரிந்துகொள்வார். உங்கள் நட்பையும் தொடர்வார், கலங்க வேண்டாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x