Published : 07 Jan 2020 01:23 PM
Last Updated : 07 Jan 2020 01:23 PM

விசில் போடு 13: தொல்லைச் சுற்றுலாக்கள்

டூருக்குப் போறதும் போருக்குப் போறதும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். கும்பலைக் கூட்டிக்கிட்டு டூருக்குப் போறதைவிடக் குண்டைத் தூக்கிட்டுப் போருக்குப் போலாம். ஓட்டுற காரு, ஓடுற தேரு, ஊத்துற பீரு வரை பல வகைகள் இருப்பது மாதிரி, டூர்களிலும் பல வகை உண்டு.

புத்துல இருக்கிற பாம்பு கொத்தி, தத்தெடுக்கப் போனவன் செத்துப்போன கதைதான் குடும்பத்தோட கோயில் டூர் போறது. வீட்டுல திங்க வேண்டிய புளிச் சோற்றை, வண்டியேறிப் போய் கோயில் வளாகத்துல திங்கிறதுக்குத் தமிழர்கள் கண்டுபிடிச்சதே கோயில் டூர். வாய்ல போட்டு சாப்பிடப் போற சோற்றை வயல்ல வச்சு தின்னா என்ன, வாசல்ல வச்சு தின்னா என்னய்யா? மாசாமாசம் மளிகைப் பொருட்கள் விலை ஏறுற மாதிரி கோயில் டூருக்கு மலையேறுறவங்க இருக்காங்க.

கோயில் டூர்

கோயில் டூர் போறப்ப கொஞ்சம் கவனமா இருக்கணும். இல்லன்னா நாய்க்குப் பேரை நான் வைக்கிறேன், சோற்றை நீ வைன்னு, அவனவன் வேண்டுதலுக்கு அடுத்தவனுக்கு மொட்டை அடிச்சு விட்டுடுவாங்க. ‘நீ +2ல நல்ல மார்க் வாங்கணும்னு வேண்டிக்கிட்டேன், நாங்க விளக்குப் போட நெய்யத் தூக்கிட்டு ரோப்கார்ல போறோம், நீ பையத் தூக்கிட்டுப் படிக்கட்டுல வந்திடுன்னு வார்த்தைகளில் வாள் செஞ்சு நம்ம தோள்ல இறக்குவாங்க’. இதுல சில வீட்டுல ஒரே நாள்ல ஒன்பது கோயிலுக்குக் கூட்டிட்டுப்போவாங்க. இப்பதானே கன்னியாகுமரியில கப்ளிங்ஸ் விளையாடுன, அதுக்குள்ளே திருச்செந்தூர்ல டிக்கிலோனாவுக்கு ரெடியான்னு சாமிகளே கன்பீயூஸ் ஆயிடுவாங்க.

டூர்களில் குடும்ப டூர் இருக்கே என்று யோசிக்க வைத்துவிடும். எட்டு நாட்டைக் கட்டி ஆளும் எத்தனகூட, போதும்டா சாமின்னு பொறுமையான புத்தனாக்கி போதி மரத்தடில உட்கார வைத்துவிடும், சரியான பிளான் இல்லாம போற ஃபேமிலி டூர். குளிரும்போது பெட்ரூம்ல பேனை போடக் கூடாது, கோவமா இருக்கும்போது யாருக்கும் போனை போடக் கூடாது, ஃபேமிலியா இருக்கும்போது டூருக்கு பிளானை போடக் கூடாது. குடும்பமா அருவிக்கு முன்னால நின்னு ஒரு போட்டோ, மலையும் பள்ளத்தாக்கும் தெரியுற மாதிரி ஒரு போட்டோ, பூங்காவுல படுத்த மாதிரி ஒரு போட்டோ, பூவைப் பிடிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி ஒரு போட்டோ. இந்த நாலு போட்டோவ எடுக்க நாலாயிரம் செலவு பண்ணி போறதுதான் ஃபேமிலி டூர்.

பாக்கு தட்டும் பேப்பர் டம்ளரும் கண்டுபிடிக்கப்பட்டதே ஃபேமிலி டூருக்காகத்தான். எல்லோரும் சூரியோதயத்துக்காகக் கிழக்கைப் பார்க்கிறப்ப, அப்பா மட்டும் நேத்து நைட்டு வாங்கின கொசுவர்த்திச் செலவை எழுதிட்டோமான்னு கணக்கைப் பார்த்துக்கிட்டு இருப்பாரு. இன்பச் சுற்றுலாவை துன்பச் சுற்றுலாவா மாத்தவே ரெண்டு பேரு இருப்பாங்க. டிரைவர் தூங்கிடக் கூடாதுன்னு பெருசு ஒண்ணை முன்னால உட்கார வைப்பாங்க. அஞ்சு நிமிஷம்தான் அரட்டைச் சத்தம் கேட்கும். அதுக்கப்புறம் பெருசோட குறட்டைச் சத்தம்தான் கேட்கும். உளியில அடிச்சாலும் வலியில கத்தக் கூடாத சூழல்தான் இந்தக் குடும்ப டூர்.

குற்றால டூர்

குளிக்க குடிக்க, குடிக்க குளிக்கன்னு இருக்கவே போற டூர்தான் குற்றால டூர். போற வண்டி மட்டும் பாதையில போகும். ஆனா வண்டிக்குள்ள எல்லா டிக்கெட்டும் போதையில போகும். அருவில விழுகுற அரை டம்ளர் தண்ணில ஐந்நூறு பேரு குளிப்பாங்க, முதுகையும் முதுகையும் உரசியே மொத்த உடம்பையும் நனைப்பாங்க. குளிக்கப் போயிட்டு குப்பை லாரி கணக்கா அழுக்கோட வரதெல்லாம் ஆளில்லா கிரகத்துல பால் வியாபாரம் பண்ற மாதிரி.

அடுத்தது, அடி ஸ்கேல் வச்சு வாள் சண்டை போடுற வயசுல போற ஸ்கூல் டூர். பஸ்ல ஏறும்போதே வாத்தியாரு ஆளுக்கொரு நம்பர் கொடுத்திடுவாரு. டேய் இருபத்தியாறு என்னடா தூங்குறப்ப விரல் சூப்புற? ஏன்டா முப்பத்தியேழு எதுக்குடா பதினெட்டோட ஐஸைத் தட்டிவிட்டன்னு கடைசி வரைக்கும் தமிழ் சினிமால வர கான்ஸ்டபிள் மாதிரி நம்பர்தான். சந்தோஷ் நாராயணன் பாட்டுக்கு ஆசைப்பட்டு பஸ் ஏறினா, உள்ளே சீர்காழி கோவிந்தராஜன் சந்தனம் மணக்குதுன்னு சிரிச்சுக்கிட்டு இருப்பாரு.

ரஜினி, கமல் படம் போடுவாங்கன்னு காத்திருந்தா, “நக்கீரா உத்துப்பாரு”ன்னு ரோஸ் பவுடர் பூசிக்கிட்டு சிவாஜி டென்ஷனா நிப்பாரு. எறும்பு மாதிரி சாரசாரையா கூட்டி போய் விவேகானந்தர் பாறையைக் காட்டுவாங்க. வாத்தியாரு திட்டுவாரேன்னு உச்சா வந்தாக்கூட அடக்கி வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு செட்டு, வீட்டுல கொடுத்துவிட்ட முப்பது ரூவாய்க்கு நீ எலந்த வடை வாங்கு, நான் உளுந்த வடை வாங்கறேன், காக்கா கடி கடிச்சுக்கலாம்னு கூட்டணி போட்டுக்கிட்டு இருக்கும் ஒரு செட்டு.

காலேஜ் டூர்

வெண்ணைய்யைக் கொதிக்கவச்சா நெய், உண்மையா மறைச்சு வச்சா பொய். இதுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுதான் பேக்கேஜ் டூர். வட இந்தியாவுக்குப் போகலாம்னு ரயில் பொட்டியையே ஜெயில் பொட்டியா மாத்தி கூட்டிட்டுப் போறது கும்பிபாகம்னா, காந்தி பத்தி பேசுறவர்ல இருந்து கால் கிலோமீட்டருக்கு ஒரு தடவை வாந்தியெடுக்கிறவரை எல்லாம் பஸ்ல அடைச்சுட்டுப் போறது கிருமிபோஜனம். இந்த குரூப் டூரோட ஆகப் பெரிய கொடுமை கைடுங்கதான். ஓவருக்கு ஒன்பது வைடு போடுற அசோக் டின்டாவோட அதிகக் கடுப்பைக் கிளப்புவாங்க இந்த கைடுங்க.

போரடிக்காத டூர்ன்னா அது காலேஜ் டூர்தான். கொக்கு தொண்டைல சிக்குன மீன் மண்டை மாதிரி கடுப்பான டூர்களுக்கு மத்தியில் சிறப்பான டூர் இது. பொறுப்பில்லாத வயசா இருந்தாலும் வெறுப்பில்லாத மனசு கொண்டு வாழும் காலம் கல்லூரிக் காலம். கிளாஸுக்கே வராதவன்கூட காலேஜ் டூருன்னா வந்திடுவான். எந்த ஊருக்குப் போலாம்னு முடிவெடுக்கிறது, கைல எடுத்துத் தேய்ச்சா ரப்பரு, கால்ல போட்டுத் தேய்ச்சா ஸ்லிப்பருன்னு சிம்பிளா முடிய வேண்டிய விஷயம், அதுக்கு ஒரு பொதுக்குழு கூட்டி, செயற்குழு பூட்டி பஸ் கிளம்பறதுக்குப் பத்து நிமிஷம் முன்னாடிதான் முடிவெடுப்பாங்க.

பஸ்ல டான்ஸ் ஆரம்பிச்சு அப்புறம் பஸ்ஸே டான்ஸ் ஆடும். பஸ்ல ஏறுறப்ப சூப்பர் டீசண்டா இருந்த லெக்சரர், ரப்சர் பண்ணியே, இறங்குறப்ப சுகர் பேஷண்ட் ஆக்கிடுவாங்க. கர்லா கட்டைய காணோம்னு தாயக்கட்டைலகூட டம்பல்ஸ் எடுக்கலாம், கொண்டை ஊசியைக் காணோம்னு கோனூசில பிம்பல்ஸ் நசுக்கலாமான்னு புரபஸருங்க பாடம் காத்துக்கிற அனுபவங்கள் அவை.

வாழ்க்கையே வாழ்வா சாவான்னு இருந்தாலும் எல்லோருக்கும் இருக்கிற கனவு கோவா டூர். கோவாவுக்கு டூர் போக பிளான் பண்ற பல குரூப் கடைசியில கழுதைக்குக் கால் நெட்டையா இருந்து என்ன ஆகப்போகுது இல்ல கங்காருக்குத்தான் வால் குட்டையா இருந்து எதுவாகப் போகுதுன்னு, கடைசியில கொடைக்கானலுக்கோ கொல்லிமலைக்கோதான் டூர் போகும். தன்னோட கல்யாணத்துக்கு முன்னால கோவாவுக்கு டூர் போகனும்னு பிளான் போட்ட பல பேரு, தங்கள் பொண்ணோட கல்யாணம் முடிஞ்சும் போக முடியாம, வாரத்துல வரலாம் சனி, வாழ்க்கைல வரக்கூடாது இனின்னு வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க.

ஆடுற மேட்சேல்லாம் சச்சின் நூறடிக்கணும்னு ஆர்வமா நினைச்சவங்க எல்லாம் இப்ப வாழ்க்கை எவ்வளவு போரடிச்சாலும் சோர்வா வாழப் பழகிக்கிட்டோம். வாழ்க்கையே கொஞ்ச நேரம், இதுல இதுக்கு கிலோ கணக்கில் பாரம். மனசை லேசாக்குவோம், வயதைப் பழசாக்குவோம். மனதுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று தொலைத்த சந்தோஷங்களை மீண்டும் அள்ளுவோம்.

- (சத்தம் கேட்கும்)
‘தோட்டா’ ஜெகன்
தொடர்புக்கு:thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x