Published : 31 Dec 2019 12:54 PM
Last Updated : 31 Dec 2019 12:54 PM

2020: அசத்தப் போகும் தொழில்நுட்பங்கள்!

எல். ரேணுகாதேவி

ஒவ்வோர் ஆண்டும் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாவதில் பஞ்சமில்லை. நாளை பிறக்க உள்ள 2020-ம் ஆண்டு நவீனத் தொழில்நுட்பங்களின் ஆண்டாகத் தொடங்க உள்ளது. ஆம், வரும் ஆண்டில் பல புதுமையான தொழில்நுட்பங்கள் சந்தைக்கு வரவுள்ளன. அதிசங்களையும் ஆச்சரியங்களையும் அள்ளித் தர உள்ள அந்தத் தொழில்நுட்பங்கள் என்னென்ன?

வாட் ஜி, ‘5 ஜி’

உலகம் இன்று உள்ளங்கைக்கு வந்துவிட்டது. உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வு அடுத்த நிமிடத்தில் நம் கைக்கு வந்துவிடுகிறது. படங்கள், வீடியோக்கள் மூலம் பகிர்வது என ஸ்மார்ட் போன் உபயத்தால் இது சாத்தியமாகிவிட்டது. தற்போது ‘3 ஜி’, ‘4 ஜி’ இணைய வசதியே பெரும்பாலும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படுகின்றன.

2020-ம் ஆண்டில் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் ‘5 ஜி’ இணைய வசதி அறிமுகமாக உள்ளது. இந்த ‘5 ஜி’ இணைய வசதியை அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பத் தொலைபேசி நிறுவனங்கள் நவீனப்படுத்தி உள்ளன. இந்த ‘5 ஜி’ தொழில்நுட்பத்தால் தகவல்கள், ஒளிப்படங்கள், வீடியோக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அதிவிரைவாகப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

ரோபோ கார்கள்

புத்தாண்டின் புதுவரவாக அறிமுகமாகிறது தானியங்கி ரோபோ கார்கள். ஓட்டுநர்கள் இல்லாமலேயே இந்தத் தானியங்கி ரோபோ கார்கள் இயங்கக்கூடியவை. ரோபோ கார்களின் வருகை இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ரோபோ கார்களைத் தயாரித்து வருகின்றன முன்னணி நிறுவனங்கள். டெஸ்லா நிறுவனம் 2020-ம் ஆண்டில் பத்து லட்சம் தானியங்கி ரோபோ கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான ‘வோமோ’ கலிபோர்னியாவில் சோதனை முறையில் ரோபோ தானியங்கி கார்களைப் பரிசோதித்துள்ளது. இந்த ரோபோ கார்களில் தானியங்கி பிரேக், போக்குவரத்து நெரிசல் இல்லாத வழித்தடங்களைக் கண்காணித்து அந்தச் சாலைகளில் தானாகப் பயணிப்பது, எதிரே வரும் கார்களின் வேகத்தைக் கணித்து அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.

மனித ரோபோக்கள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் கடந்த ஆண்டு ‘சோபியா’ என்ற மனித ரோபோ உருவாக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மைல் கல்லாக சோபியாவின் வருகை. இந்நிலையில் உணவுகளை டெலிவரி செய்வது, அலுவலகப் பணிகள் போன்றவற்றுக்கு உதவியாக மனித ரோபோக்கள், ட்ரோன்களைப் பயன்படுத்த புதிய ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது.

நிஜமாகும் மாய உலகம்

தற்போது ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ வீடியோ கேம்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக மாறி உள்ளது. செயற்கையான சூழலை நிஜத்தில் இருப்பதுபோல் உணரச் செய்வதுதான் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’. தற்போது இந்த ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் பணிகள் சூடுபிடித்துள்ளன. ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யின் அடுத்த பாகமாக ‘எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி’ என்ற புதிய தொழில்நுட்பம் வரும் ஆண்டு அறிமுகமாக உள்ளது. ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ பல மடங்கு புதிய அனுபவத்தை ‘எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி’ தரும் என்று இப்போதே ஏக எதிர்பார்ப்புகள் கிளம்பிவிட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x