Published : 30 Dec 2019 11:48 AM
Last Updated : 30 Dec 2019 11:48 AM

அலசல்: தரச்சான்று நிறுவனங்களின் மதிப்பு என்ன?

1997-ம் ஆண்டு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்ட மிக பெரிய நிதி நெருக்கடி, 2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட சப்-பிரைம் (வீட்டுக் கடன்) நெருக்கடி என இரண்டு பெரும் பிரச்சினை உருவான போது அப்பிரச்சினையைப் பற்றி பேசியவதை விட அவர் தரச்சான்று நிறுவனங்களைப் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டன. தற்போது அடுத்த நிதி ஆண்டில் வளர்ச்சிப் பாதையில் இந்தியா பயணிக்கும் என்றெல்லாம் ஆரூடம் கூறிவருகின்றன தரச்சான்று நிறுவனங்கள். இவை ஒருபுறம் என்றாலும் கடந்த வாரத்தில் இக்ரா (ஐசிஆர்ஏ),

கேர் (சிஏஆர்இ), இந்தியா ரேட்டிங்ஸ் ஆகிய மூன்று தரச்சான்று நிறுவனங்களுக்கு தலா ரூ.25 லட்சம் அபராதத்தை விதித்தது பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி. ஐஎல்அண்ட் எப்எஸ் நிறுவனத்தின் நிதி நிலை தொடர்பாக தவறான மதிப்பீடுகளை இவை அளித்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது. இதனால்
அது திவாலாவதை உணராமல் பொதுமக்களும், அரசு நிறுவனங்களும் அதில் தொடர்ந்து முதலீடு செய்து வந்துள்ளனர்.

ஒரு நிறுவனத்தின் கடன் பொறுப்புகள், நிதிநிர்வாகம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அது கடனை திரும்ப செலுத்தும் திறன், அதற்கு வரவேண்டிய நிலுவைத் தொகை வசூலிக்கும் திறன் ஆகியவற்றை தணிக்கை செய்த பிறகே தரச்சான்று வழங்க வேண்டும். அவ்விதம் தணிக்கை செய்த பிறகு இவை வழங்கிய குறியீடுகள், நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் பாதுகாப்பானவை என அறுதியிட்டு கூறும் வகையில் அமைந்திருந்தன. தவறான வழிநடத்தல் காரணமாக இந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரிசில், இக்ரா, கேர், பிரிக்வேர்டு ரேட்டிங்ஸ், இந்தியா ரேட்டிங்ஸ், எஸ்எம்இஆர்ஏ ஆகிய நிறுவனங்கள் தவிர மூடி’ஸ், ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (எஸ் அண்ட் பி), ஃபிட்ச் ஆகிய சர்வதேச நிறுவனங்களும் உள்ளன. இம்மூன்று நிறுவனங்கள் மட்டுமே தரச்சான்று சந்தையில் 95 சதவீத இடத்தைப் பிடித்துள்ளன.

மூடி’ஸ் மற்றும் எஸ் அண்ட் பி நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. ஃபிட்ச் நிறுவனம் நியூயார்க் மற்றும் லண்டனில் இரட்டை தலைமையகங்களோடு செயல்படுகிறது. பிட்ச் நிறுவனத்தின் 15 சதவீத சந்தை பங்களிப்பை தவிர 80 சதவீத சந்தையை மூடி’ஸ் மற்றும் எஸ் அண்ட் பி நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளன.

இந்தியாவின் பொருளாதார நிலை, வங்கிகளின் வாராக் கடன், ஜிடிபி உள்ளிட்டவை பற்றி அவ்வப்போது மதிப்பீடுகளை இவை கணித்து வெளியிடுகின்றன. இந்த தரச்சான்று நிறுவனங்களின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்கிறது.
இந்தியாவில் மிகப் பெரிய நிறுவன ஊழலாகக் கருதப்படும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டபோதிலும், அதுகுறித்து தணிக்கை செய்த நிறுவனம், உரிய தகவலை அளிக்கத்தவறியது.

இந்நிறுவனத்தை தணிக்கை செய்த பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (பிடபிள்யூசி) நிறுவனத்துக்கு இந்தியாவில் தணிக்கை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் தரச்சான்று நிறுவனங்களை முறைப்படுத்த தனி அமைப்பு ஏதும் கிடையாது. இதனாலேயே இவை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் செயல்படுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை.

அவை பெரும்பாலும் அமெரிக்க பங்குச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தரச்சான்று மதிப்பீடுகளை நிறுவனங்களுக்கு வழங்கி பழக்கப்பட்டவை. இந்திய நிறுவனங்கள், இந்திய கடன் சந்தை, இந்திய பங்குச் சந்தை ஆகியவை இவற்றுக்குப் புதியவை. அமெரிக்காவில் ஏஏஏ என்ற சான்று பெற்றவை மைக்ரோசாஃப்ட் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மட்டுமே. இந்தியாவிலோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 80 சதவீத நிறுவனங்கள் ஏஏஏ சான்று பெற்றவை.

அமெரிக்காவில் பெரும்பாலும் பிபிபி குறியீடு பெற்ற நிறுவனங்கள்தான் அதிகம். அமெரிக்காவில் நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் பெரும்பாலானவை பொதுமக்களிடம் முதலீடு திரட்டாதவை. ஆனால் இந்தியாவில் நிறுவன கடன் பத்திரங்களில் பொதுமக்களின் முதலீடும் உள்ளது. அமெரிக்க கடன் பத்திர சந்தை மதிப்பு அந்நாட்டின் ஜிடிபி-யில் 45% அளவுக்கு உள்ளது. இந்தியாவில் இது வெறும் 14% மட்டுமே. அமெரிக்க பங்குச் சந்தைக்கும், இந்திய பங்குச்சந்தைக்கும் மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது. அதேபோல நிறுவனங்களின் மதிப்பீடும் வித்தியாசமாகிறது.

ஆனால் இவையெல்லாம் எதுவுமே தெரியாமல் அமெரிக்க பாணியிலேயே இந்திய நிறுவனங்களை மதிப்பீடு செய்கின்றனவோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. கடந்த காலங்களில் தரச்சான்று நிறுவனங்களின் மதிப்பீடு குறித்து காலஞ்சென்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடங்கி, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம்,

முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். தரச்சான்று நிறுவனங்கள் தங்களை சுய மதிப்பீடு செய்ய வேண்டிய தருணமிது. இல்லையெனில் அவற்றின் மதிப்பீடுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x