Published : 29 Dec 2019 10:09 AM
Last Updated : 29 Dec 2019 10:09 AM

முகங்கள்: எல்லோரும் வாசிக்கக் கத்துக்கிடணும்

சுப.ஜனநாயகச்செல்வம்

வகுப்பறையில் உள்ளது உலகம் என்பார்கள். அதனால்தான் வகுப்பறையை உலகத்தைக் காட்டும் கண்ணாடியான நூல்கள் நிறைந்த நூலகமாக்கியிருக்கிறார் தென்றல். ஆசிரியையான இவர், மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால், மாணவர்கள் மூலம் அவர்களுடைய பெற்றோரிடமும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதுதான் தென்றலைத் தனித்து அடையாளப்படுத்துகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மகர்நோன்பு பொட்டல் அருகே உள்ளது ‘ஸ்ரீ கார்த்திகேயன் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி’. இங்கே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 250 மாணவர்கள் படிக்கின்றனர். 1910-ம் ஆண்டு திண்ணைப் பள்ளியாக வேலாயுதம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி தற்போது நூற்றாண்டைக் கடந்து அரசு உதவிபெறும் பள்ளியாகச் செயல்பட்டுவருகிறது.

ஆரம்பத்தில் குருகுலப்பள்ளியாக இருந்த போது கண்டிப்புடன் இருந்த பள்ளியை வேலாயுதத்தின் மகன் பாலசுப்பிரமணியன், அன்பால் அரவணைத்துச் சென்று அரசு உதவிபெறும் பள்ளியாக மாற்றினார். அதனால் அவரை அப்பகுதி மக்கள் ‘பாலு அண்ணன், பாலு சார்’ பள்ளி என அழைத்துத் தற்போது அது ‘அண்ணன் சார் பள்ளி’ என்ற அளவில் நிலைத்துவிட்டது.பாலசுப்பிரமணியன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தன் மனைவி ஆனந்தாவைப் பட்டப் படிப்பு படிக்கவைத்துத் தமிழாசிரியராக்கியதோடு, தன்னுடைய மகள்கள் முத்துவள்ளி, சுவேதா, தென்றல், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஐவரையும் ஆசிரியராக்கியுள்ளார்.

பெற்றோரின் வழியில்

பாலசுப்பிரமணியன், ஆனந்தா இருவரும் ஓய்வு பெற்றுவிட்டாலும் இவர்களுடைய மகள் சுவேதா, தற்போது இந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அதோடு, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் பா.தென்றல், வகுப்பறையை நூலகமாக்கியிருக்கிறார். மாணவர்களிடம் புத்தகங்களைக் கொடுத்தனுப்பி அவர்களுடைய பெற்றோரையும் வாசிக்கச் செய்துவருகிறார்.

“இந்தப் பள்ளியை வழிநடத்தியவரின் பெயரை எங்கள் நூலகத்துக்கு வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதற்கு ‘அண்ணஞ்சார்’ நூலகம் எனப் பெயரிட்டிருக்கிறோம். 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்த நூலகம், மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. நாங்கள் மூன்று சகோதரிகள் இதே பள்ளியில் பணியாற்றுகிறோம்.

திருமணநாளுக்கு என் கணவர் பரிசாக வழங்கிய 20 ஆயிரம் ரூபாயைக் கொண்டு இந்த நூலகத்தை அமைத்துள்ளேன். படிக்கும் வகுப்புக்கு ஏற்ப மாணவர்களுக்குப் புத்தகங்களைக் கொடுப்போம். அவர்களுடைய பெற்றோருக்கும் புத்தகங்களைக் கொடுத்து அனுப்புவோம். மாணவர்களின் உறவினர்கள் படிப்பதற்கும் புத்தகங்களைக் கொடுக்கிறோம்” என்கிறார் தென்றல்.

நீதிபோதனை வகுப்புகள், பொம்மலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் மூலம் மாணவர்களுக்குக் கல்வி என்பதைக் கற்கண்டாக இனிக்கச் செய்கிறார்கள். கவிதை எழுதும் போட்டி, கடிதம் எழுதும் போட்டி போன்றவற்றை நடத்தி மாணவர்களின் திறமைக்கு மேடையமைத்துத் தருகின்றனர். மாணவர்களிடையே கதை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ‘தேவதைகள் கூட்டம்’ என மாணவர்கள் கதை சொல்லும் நிகழ்ச்சியையும் நடத்திவருகிறார் தென்றல். மாணவர்களின் அறிவியல் திறமையை வெளிப்படுத்த அறிவியல் கண்காட்சியையும் நடத்துகின்றனர்.

சகோதரிகள் தென்றல், பா.லெட்சுமி, ஜி.சுவேதா மூவரும் தாங்கள் எழுதிய புத்தகங்களைக் கடந்த மாதம் வெளியிட்டனர். வாசிப்பின் மகத்துவத்தைச் சொல்வதுடன் நிறுத்திவிடாமல் தங்கள் செயல் மூலம் அதை அர்த்தப்படுத்தியும் வருகின்றனர் இந்தச் சகோதரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x