Published : 15 Dec 2019 10:10 AM
Last Updated : 15 Dec 2019 10:10 AM

பார்வை: பெண்களைப் பூட்டிவைத்தால் குற்றங்கள் குறைந்துவிடுமா?

பிருந்தா சீனிவாசன்

சூரியன் உதிப்பது எவ்வளவு இயல்பானது, இயற்கையானது என ஏற்றுக்கொள்கிறோமோ அப்படித்தான் பெண்கள் மீதான வன்முறை களையும் கடந்துசெல்லப் பழக்கப்பட்டுவிட்டோம். பெண்கள் மீதான வன்முறை குறித்த செய்திகள் இல்லாமல் பொழுதுகள் புலர்வதில்லை என்றாகிவிட்டது.

ஒன்றிரண்டு சம்பவங்களைச் சொன்னாலே நிதர்சனம் புரிந்துவிடும். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுச் சிறையில் இருக்கும் 122 பேரைத் தன் முதுகலை ஆய்வுக்காகச் சந்தித்தார் மதுமிதா பாண்டே. டெல்லி திஹார் சிறையில் தான் சந்தித்தவர்களைப் பற்றி அவர் சொல்வதைக் கேட்கும்போது பதறுகிறது. காரணம் அந்த நூற்றுச் சொச்சம் பேரில் ஒருவர்கூடத் தான் செய்த தவறுக்காக வருந்தவில்லை. தாங்கள் செய்தது குற்றம் என்பதைக்கூட அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

குற்றவாளியின் வருத்தம்

விதிவிலக்காக ஒருவர் மட்டுமே வருந்தினாராம். அந்த வருத்தம் என்ன தெரியுமா? “கன்னித்தன்மையை இழந்த அந்தப் பெண்ணை இனி யார் மணந்துகொள்வார்கள்? விடுதலையாகி வெளியே வந்ததும் நானே அவளை மணந்துகொள்வேன்” என மத்திம வயதில் இருக்கும் அவர் சொல்லியிருக்கிறார். ஐந்து வயதுச் சிறுமியை வல்லுறவு செய்த குற்றத்துக்காக ஐந்து ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பிறகும் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார். அவர் மட்டுமல்ல; பெரும்பாலான வல்லுறவுக் குற்றவாளிகள் தங்களது செயலை நியாயப்படுத்தியே பேசியிருக்கிறார்கள். “அந்தப் பெண் எங்களை எதிர்க்காமல் இருந்திருந்தால் தாக்கியிருக்க மாட்டோம்” என்று சொல்லியிருக்கிறார் நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர்.

பெண்களைப் பண்டமாகவும் போகப்பொருளாகவும் நினைக்கிறவர்கள்தாம் வல்லுறவுக் குற்றங்களில் ஈடுபடு கிறார்கள் என்பதல்ல இதன் பொருள். குற்றங்கள் நிகழ்த்தக் காத்திருக்கிறவர்களும் இப்படியான மனநிலையோடுதான் இருக்கிறார்கள்.

மூளைக்குள் இருக்கும் சிக்கல்

சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்த கூட்டம் ஒன்றில் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது 20 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் பெண்களின் ஆடை குறித்துப் பேசினார். “நான் பசியோடு இருக்கிறேன். என் முன்னால் அறுசுவை உணவு நிறைந்த தட்டு இருக்கும்போது சாப்பிடத்தானே தோன்றும்?” எனக் கேட்டார். அவர் கல்லூரி மாணவராக இருக்கக்கூடும். படித்த, நாகரிகத்தில் மேம்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் அந்த இளைஞரும் பெண்களைப் பற்றி இப்படித்தான் புரிந்துவைத்திருக்கிறார். பெரும்பான்மையான ஆண்களின் மூளைக்குள் விழுந்திருக்கும் இந்தச் சிந்தனைச் சிக்கல்தான் பெண்களை வாழவிடாமல் துரத்தியபடி இருக்கிறது. இந்தச் சிக்கலின் முடிச்சை அவிழ்க்க முனையாமல் வன்முறைகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை.

இந்த ஆண்மையச் சிந்தனை திடீரென ஓரிரு நாட்களில் உருவானதல்ல. பல நூறு ஆண்டுகளாகப் போதிக்கப்பட்டு வருவது. மக்களுக்கு நீதி சொல்லவும் நல்வழிகாட்டவும் என்ற போர்வையில் உருவாக்கப்பட்ட சாத்திரங்களும் மத நூல்களும் கற்பித்த பாகுபாடு இது. பெண்கள் ஒடுக்கப்பட வேண்டிய பட்டியலுக்குள் தள்ளப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் எப்போதும் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்பட வேண்டும் என வழிவழியாகப் போதிக்கப்பட்டு, அதன் நீட்சியாகத்தான் இன்று யாராவது பெண்ணுரிமை, பெண்ணியம் போன்றவை குறித்துப் பேசினாலே பலருக்கும் எரிச்சல் வருகிறது.

பிரித்துவைக்கும் பாகுபாடு

ஜனநாயக ஆட்சிக்குள்தானே வாழ்கிறோம். நம் அரசிய லமைப்புச் சட்டம் அனைவரும் சமம் எனச் சொல்கிறதே, நாம் ஏன் பழங்கதைகளை நம்பிக்கொண்டு பெண்களை ஒடுக்க வேண்டியதில்லை என்பதை ஏன் நாம் உணர்வதில்லை? அடுத்தவருக்கு அதை உணர்த்துவதில்லை? காரணம் தனக்குக் கீழே ஒரு சமூகமோ ஒரு பாலினமோ இருப்பதைத்தான் மனித மனம் விரும்புகிறது. எல்லோரும் சமம் என்று சொல்லிவிட்டால் அதிகாரத்தை யாரிடம் செலுத்துவது? ஏழை – பணக்காரன், படித்தவன் – படிக்காதவன், கிராமம் – நகரம், ஆண்டான் – அடிமை என்பது போன்ற பாகுபாடுகள் சிதையாமல் ஆதிக்கக் கட்டமைப்பு பார்த்துக்கொள்ளும். அப்போதுதான் அது உயிர்ப்புடன் இருக்க முடியும்.

மரத்துப்போன மனநிலை

புகைப்பதும் குடிப்பதும் ஒழுக்கமீறல்களாக ஒரு காலத்தில் கருதப்பட்டன. நாம் நாகரிகமடைந்துவிட்டோம் என்று சொல்லிக்கொண்டு, அதுபோன்ற பழக்கங்கள் வாழ்க்கையின் அங்கங்கள் என்கிற அளவுக்கு மாற்றிக்கொண்டோம். தினமும் குடிக்கிறானா, குடித்துவிட்டு அடிக்கிறானா என்பதில் தொடங்கி, “இப்போதெல்லாம் யார்தான் குடிப்பதில்லை?” என்ற சமாதான நிலைக்கு வந்துவிட்டோம். லஞ்சம், ஊழல், கொள்ளை, சாதி ஆணவப் படுகொலை என்று பலவும் இன்று இயல்பான குற்றங்களாகிவிட்டன. அந்த வகையில் பெண்கள் மீதான வன்முறையையும் சமூகச் செயல்பாடுகளில் ஒன்றென ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம். பாலியல் வன்முறை களுக்காக வெகுண்டெழ வேண்டியதற்குப் பதில், ‘அந்தப் பெண்ணை உயிருடனாவது விட்டுவிட்டுச் சென்றிருக்கலாமே?’ என்று யோசிக்கத் தொடங்கிவிட்டோம். சமூகத்தின் இந்த மரத்துப்போன மனநிலையும் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்க முக்கியக் காரணம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமமா?

தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்களில் ஒன்று ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பற்றிப் பேசும். அதில் வெளிநாட்டில் பொது இடங்களில் சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டும் அண்ணா, ‘குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சமே அவனைப் பண்பட்டவனாக வைத்திருக்கிறது’ என்று சொல்வார். போதுமான கழிப்பறைகள் இருந்தால் ஏன் இந்த அவலம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு குடிமகனுக்குச் சட்டத்தின் மீதிருக்கும் மதிப்பையும் நம்பிக்கையையும் இது உணர்த்துகிறது. ஆனால், இங்கே பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு அப்படியான அச்சத்தை நம் சட்டத் துறையும் நீதித் துறையும் ஏற்படுத்தியிருக்கின்றனவா? ஏற்படுத்தியிருக்கின்றன. யாருக்கு? ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வாழ்வின் அடித்தட்டில் இருக்கிறவர்களுக்கும் மட்டுமே அச்சத்தைத் தருகிறது.

பாலியல் குற்றங்களில் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் பெண்களைக் குடும்பமும் சமூகமும் எப்படி அணுகுகின்றன என்பதும் விவாதிக்கப்பட வேண்டியதே. உலகத்தின் மொத்தத் தூய்மையும் பெண்களிடம்தான் இருக்கிறது என்று கற்பிக்கப்பட்ட இந்தச் சமூகத்தில், வலிந்து கறைசுமத்தப்பட்ட அடையாளத்துடன் அந்தப் பெண்கள் இயல்பாக வாழ்ந்துவிட முடியுமா? ஏற்கெனவே உடலாலும் மனத்தாலும் ரணப்பட்ட பெண்களைக் குடும்பமும் சமூகமும் தங்கள் பங்குக்கு வதைப்பதுதான் இங்கே அதிகம். அவர்களுக்குத் தேவையான அரவணைப்பைப் பெரும்பாலான குடும்பங்கள் தருவதில்லை. காரணம், குடும்பங்களுக்குத் தங்கள் மகன்கள் அளவுக்கு மகள்கள் முக்கியமல்ல; மகள்களைவிட இந்தச் சமூகமும் அதன் நாலுபேரும்தான் முக்கியம். இந்தச் சமூகம் நம்மையும் நம் குடும்பத்தையும் புறக்கணித்துவிடுமோ, இழிவாகப் பேசிவிடுமோ என்ற பயத்திலேயே பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வீட்டில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை மூடிமறைத்துவிடுகின்றன. இது குற்றவாளிகள் மேலும் பெருக வழிவகுக்குமே தவிர குற்றங்களை ஒருபோதும் குறைக்காது.

கூட்டு முயற்சி அவசியம்

பாலியல் குற்றங்கள் பொதுவெளியில் பேசப்படும் போதெல்லாம் எழும் ஆண் விரோதப்போக்கு, சிக்கலுக்குத் தீர்வாகாது. அது அந்த நேரத்துப் பதற்றத்தைத் தணிக்கவோ ஆற்றுப்படுத்தவோ மட்டுமே உதவும். தெலங்கானா மருத்துவரின் பாலியல் வல்லுறவுப் படுகொலையைத் தொடர்ந்து சமூகச் செயற்பாட்டாளர் தாரா கிருஷ்ணசுவாமி, பாலியல் குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் ஆண்களுக்கு ஆலோசனைகள் சிலவற்றைச் சொல்லியிருந்தார். ‘எப்போதும் கையில் ஒரு விசிலை வைத்திருங்கள். ஒரு பெண்ணை வல்லுறவு செய்யத் தோன்றினால் உடனே அதை ஊதுங்கள்’ என அவர் பரிந்துரைத்தவற்றைப் படிக்கும்போது, ஆண்களுக்கு நல்ல சவுக்கடி எனத் தோன்றலாம். ஏன் எப்போதும் பெண்களுக்கே அறிவுரைகளும் ஆலோசனை களும் சொல்லப்படுகின்றன என்பதன் நீட்சிதான் இது.

அப்படியானால் மாற்றத்தை எங்கிருந்து தொடங்குவது? குழந்தை வளர்ப்பிலிருந்து அது தொடங்கப்பட வேண்டும். பெண்ணுக்கு அறிவுரை சொல்வதைவிட ஆணுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டும். பெண்ணைச் சக உயிராக மதித்து நடக்க ஆண்களைப் பழக்கப்படுத்த வேண்டும். குடும்பங்கள் தவறவிடுகிற விஷயத்தைப் பள்ளிகள் நேர்செய்ய வேண்டும். சமூகத்தின் பங்களிப்பும் அவசியம். என் வீட்டுக் கூரை எரியாதவரை எனக்கு எந்தக் கவலையும் இல்லை என்ற மனநிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்கள் எல்லாமே சமூகக் குற்றங்கள் என்பதால், சமூகத்தின் அங்கமான நமக்கும் அதில் பங்கு இருக்கிறது. எது நடந்தாலும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்காமல் குறைந்தபட்சம் நம் பகுதியில் நடக்கிற குற்றங்களுக்கு எதிராகவாவது குரல்கொடுக்க வேண்டும். அநீதி இழைக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதி கிடைக்க உதவ வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக எல்லா நிலைகளிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பெண்கள், ஆண்கள் நுகர வேண்டிய பண்டங்கள் அல்ல என்ற புரிதலைக் கூட்டுமுயற்சியில் உருவாக்கும்போதுதான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x