Published : 09 Dec 2019 01:00 PM
Last Updated : 09 Dec 2019 01:00 PM

பங்குச் சந்தையின் ஸ்திரமற்ற சூழல் துணிச்சலாக முதலீடுகளை மேற்கொள்ளலாமா?

ஆர். தனசேகர்,
ஹாட் பெஸ்ட் பைனான்சியல் சர்வீசஸ்

கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. இதனால் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் கலக்க மடைந்துள்ளனர். அத்தகைய கலக்கம் நியாயமானதே. பெரும்பாலான சில்லரை முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டு இறுதியில்தான் பங்குச் சந்தையில் முதலீடு மேற்கொண்டிருப்பர். தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது பெரும்பாலானவர்களுக்கு முதலாவது முதலீடாகத்தான் இருக்கும்.

ஒரு முதலீட்டாளராக நீங்கள் எடுக்க வேண்டிய முக்கிய முடிவு என்னவெனில், சந்தை சரிவில் இருக்கும்போது பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, பங்குச் சந்தை உயரும்போது அதிக விலைக்கு விற்றுவிட வேண்டியதுதான். பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற சூழல் அதாவது ஏற்ற, இறக்க நிலை நிலவும்போது பெரும்பாலான முதலீட்டு ஆலோசகர்கள் இத்தகைய அறிவுரையைத்தான் வழங்குவர்.

ஆனால் இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில்தான் சிரமம் மேலோங்குகிறது. நீங்கள் சிறு முதலீட்டாளராயிருப்பின் பின்வரும் வழிமுறையைப் பின்பற்றலாம். பங்குச் சந்தையில் இப்போதுதான் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு சந்தை எப்போது சரிவைச் சந்திக்கும் என்பது தெரியாது. பங்குச் சந்தை எப்போது உயரும் என்பதையும் கணிக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்க சொத்துகளை நிர்வகிக்கும் நிறுவனங்களின் உதவியை நாடுவது ஒன்றே சிறந்த வழி. இவை பெரும்பாலும் பலவித பரஸ்பர நிதித் தி்ட்டங்களில் முதலீடு செய்ய பரிந்துரைக்கும். அதன் மூலம் பங்குச் சந்தை சரிவு உங்கள் முதலீ்ட்டை பாதிக்காது.

நிதித் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன?

பங்குச் சந்தை ஒழுங்கு அமைப்பான செபி, பரஸ்பர நிதித் திட்டங்களை முறையாக வகுத்து அவற்றை வகைப்படுத்தியுள்ளது. ஹைபிரிட் பரஸ்பர நிதி திட்டங்களில், சரிவிகித ஆதாய அல்லது டைனமிக் சொத்து பங்கீடு திட்டங்கள் அனைத்துமே திறந்த நிலையைக் கொண்டவை. இவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை தேவைக்கேற்ப பங்கு சந்தை அல்லது கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும். சொத்து ஒதுக்கீடு என்பதானது பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படாதது.

அதாவது உங்கள் முதலீட்டின் ஒரு பகுதியானது பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இதன்படி ஒரு சில பங்கு சரிவால் சரிவு ஏற்படுமாயின், சில பங்குகள் லாபம் ஈட்டும். அப்போது உங்கள் முதலீடு பாதிப்புக்குள்ளாகாமல் காக்கப்படும். ஈக்விடி மற்றும் கடன் பத்திர முதலீடுகளை மேற்கொள்ளும்போது பெருமளவிலான நஷ்டம் தவிர்க்கப்படும். ஏனெனில் பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களின் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டவை. சொத்து ஒதுக்கீடு அதாவது முதலீட்டை பிரித்து முதலீடு செய்வது ஒருவித உத்தியாகும்.

அதேபோல பங்குகளின் விலை குறைவாக இருக்கும்போது வாங்கி, பங்குச் சந்தை உயரும்போது அவற்றை விற்கலாம். ஆனால் சில்லரை முதலீட்டாளர்களுக்கு இது மிகப் பெரும் சவாலான விஷயம். ஏனெனில் பங்குச் சந்தை எப்போது சரிவைச் சந்திக்கும், எப்போது உயரும் என்பது புரிந்து கொள்ள முடியாத விஷயமாக உள்ளதே. ஆனால் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பான வழிகாட்டுதலை உங்களின் நிதி ஆலோசகர்கள்தான் வழங்க முடியும்.

சரிவிகித ஆதாய நிதி (Balanced Advantage Funds) முதலீடானது உங்கள் முதலீட்டை ஆபத்தற்ற அதேசமயம் சமவிகிதங்களில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. சரிவிகிதங்களில் ஈக்விடி மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது வரி விதிப்புக்குள்ளா வதிலிருந்தும் ஓரளவு காக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x