Published : 02 Dec 2019 01:10 PM
Last Updated : 02 Dec 2019 01:10 PM

எண்ணித் துணிக: வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம்

satheeshkrishnamurthy@gmail.com

ஒரு விஷயத்தை கடைசியில் சொல்வதால் அல்லது செய்வதால் மட்டுமே அதன் முக்கியத்துவம் குறைந்துவிடுவதில்லை. கோயிலில் சுவாமி விக்ரகத்தை குளிப்பாட்டி அலங்கரித்து மந்திரம் சொல்லி பூஜை செய்து பிரசாதம் படைத்து இறுதியில்தான் பல அடுக்கு தட்டில் கற்பூரம் ஏற்றி பிரகாசமாக தீபாரதனை காட்டுகிறார்கள். இறுதியில் செய்வதால் தீபாராதனையின் முக்கியத்துவம் குறைந்துவிடுகிறதா? அந்த கணத்தில் தானே நம்மால் பரிபூரணமாக தெவ்வீகத்தை உணரமுடிகிறது.

அந்த நேரத்தில்தான் கடவுளின் பாதாதிகேசமும் நம் கண்களுக்கு பரவசமாக காட்சியளிக்கிறது. நம் மனதில் பக்தி பரவசம் பிரவாகமாய் பெருக்கெடுக்கிறது! நிற்க. ஸ்டார்ட் அப் பற்றிய பகுதியில் எதற்கு சுவாமி புராணம்? அதற்குக் காரணம் இருக்கிறது. இப்பகுதியில் இதுவரை ஸ்டார்ட் அப் என்பது என்ன என்பது முதல் அதன் தன்மைகள் வரை, ஐடியா தேடும் வழிகள் முதல் முதலீடு பெறும் முறைகள் வரை, பிசினஸ் மாடல் வடிவமைக்கும் விதம் முதல் பார்ட்னர் தேவையா என்ற விவாதம் வரை பல சப்ஜெக்டுகளை சப்ஜாடாய் சந்தித்து சிந்தித்தோம்.

அத்தனையும் எதற்கு? உங்கள் ஸ்டார்ட் அப்பை பிரிதிஷ்டை செய்து ஐடியாவை விக்ரகமாக்கி பிசினஸ் மாடல் கொண்டு அலங்கரித்து வாடிக்கையாளர் பக்த கோடிகள் தரிசிக்க தீபாராதனை காட்டி அவர்களிடம் உங்கள் பொருளுக்கு விலை என்னும் அர்ச்சனை டிக்கெட்டை வசூலித்து பிராண்ட் என்னும் பிரசாதம் தருவதற்கு. இதை
சரியாய் செய்ய, உங்கள் தொழிலுக்கு அடிநாதமாய் அமைந்து உங்கள் பிசினஸின் உயிர் மூச்சாய் விளங்க, உங்கள் கம்பெனியின் அனைத்து செயல்களையும் வழி நடத்திச் செல்ல தேவை ஒரு தேவ மந்திரம். அதைப் பற்றி பேசவேண்டியிருகிறது. அதன் பெயர் மார்க்கெட்டிங்! மார்க்கெட்டிங் இன்றி ஓர் அணுவும் அசையாது.

பிராண்ட் இல்லையென்றால் பிழைக்கும் வழி தெரியாது. பிராண்டிங் இல்லாமல் எந்த தொழிலிலும் எந்த கொம்பனாலும் ஒன்றும் சாதிக்க முடியாது. மார்க்கெட்டிங், பிராண்ட், பிராண்டிங் என்று ஏன் பிரிக்கிறேன், மூன்றும் ஒன்று தானே என்று நினைப்பவர்கள் தங்கள் சிலபஸை மாற்றவேண்டியிருக்கிறது. மூன்றும் வெவ்வேறு. இவையும் இன்ன பிறவும் தான் இனி வரும் வாரங்களில் நாம் பார்க்கப் போவது. ஒன்றை மறக்காதீர்கள். உங்கள் தொழிலின் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம் மார்க்கெட்டிங்! ‘எந்த தொழிலுக்கும் அடிப்படை தேவை இரண்டு மட்டுமே: மார்க் கெட்டிங் மற்றும் புதுமையான சிந்தனைகள்.

தொழிலின் மற்ற அம்சங்கள் அனைத்தும் செலவுகள். மார்க்கெட்டிங் மட்டுமே வருவாய் ஈட்டித் தரும் கற்பக விருட்சம்’ என்றார் நிர்வாக மேதை ‘பீட்டர் டிரக்கர்’.ஒரு காலத்தில் தரமான பொருளை செய்தால் போதும், வாடிக்கையாளர்கள் தாமாகவே கடைக்கு க்யூ கட்டிகர்ம சிரத்தையாக வாங்கிச் சென்றார்கள். அக்காலம் மலையேறி மாமாங்கமாகிவிட்டது. ஸ்டார்ட் அப் தொடங்குகிறீர்கள்.

அதன் ஆதாரம் வாடிக்கையாளர் தேவை. அந்த தேவையை பூர்த்தி செய்யும் தீர்வு. அந்த தீர்வை போட்டியாளர்கள் மத்தியில் வித்தியாசப்படுத்தும் பிராண்ட். அந்த பிராண்ட் தன்மைகளை அனைவருக்கும் பறை சாற்றத் தேவையான பிராண்டிங். பிராண்டை மார்க்கெட்டில் கொண்டு சேர்க்கும் விநியோகம். பிராண்டை வாடிக்கையாளர்கள் வாங்க வற்புறுத்தும் வகையில் அமையும் விற்பனை மேம்பாட்டு செயல்கள். இவை அனைத்தையும் தெளிவாய் செயல்படுத்தும் தில்லாலங்கடி திட்டம் தான் மார்க்கெட்டிங்! மார்க்கெட்டிங் என்பது பொருள் பற்றியதல்ல, வாடிக்கையாளர் மனம் பற்றியது.

அதனாலேயே மார்க்கெட்டிங் தனிச் செயல் அல்ல. அது ஒரு செயல்முறை. மார்க்கெட் சூழலை ஆய்வு செய்யும் விதம் முதல் வாடிக்கையாளரை புரிந்துகொள்ளும் பதம் வரை, பொருளை பிராண்டாக்கும் சூட்சமம் முதல் அதற்கு உயிர் தரும் பிராண்டிங் செயல்கள் வரை பல படிகள் கொண்ட பரமபதம் மார்க்கெட்டிங். ஆக, பிராண்ட், பிராண்டிங், வினி
யோகம், விளம்பரம், விற்பனை மேம்பாடு என்ற பல விஷயங்களின் கலவை மார்க்கெட்டிங்.

மார்க்கெட்டிங் என்பது பொருளை விற்கும் கலை என்று பலர் நினைக்கிறார்கள். இது அக்கிரமத்துக்கு தப்பாட்டம். இன்னும் சொல்லப் போனால் விற்பனையை தேவையில்லாமல் செய்யவே மார்க்கெட்டிங். வாடிக்கையாளர் தேவையை சரியாய் புரிந்து போட்டியாளர்களுக்கு முன் அத்தேவையை பூர்த்தி செய்யும் பொருளை பிராண்டாக்கினால் நீங்கள் போய் விற்கவேண்டாம், வாடிக்கையாளர் தானே ஓடி வந்து உங்கள் பிராண்டை வாங்குவார். இதில் விற்பனை எங்கிருந்து வருகிறது? விற்பனையை தேவையில்லாமல் ஆக்கிவிட்டதே மார்க்கெட்டிங்!

வெற்றிபெற்ற ஸ்டார்ட் அப்ஸ் இதை சரியாய் புரிந்துகொண்டதால் தான் வெற்றி பெறுகின்றன. அனைவர் வீட்டிலும் கார் இல்லை ஆனால் அவசரம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அவசரத்துக்கு அவசியமானகாரை வீட்டு வாசலில் வந்து நிறுத்திய ‘ஓலா’ ஓஹோ என்றிருக்கிறது. அனைவரிடமும் சமையல் அறை இருந்தாலும் சமைக்க சவுகரியப்படுவதில்லை என்பதை தெரிந்துகொண்டு வாய்க்கு பிடித்ததை வேண்டிய நேரத்தில் பரிமாறிய ‘ஸ்விக்கி’ சவுக்கியமாய் சிரிக்கிறது.

தேவைப்படும் போது பொழுதுபோக்க பக்கதுணையாக தெரிந்தவர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் ஒன்றுக் கூட்டி அலாவலாவ வைத்த ‘ஃபேஸ்புக்’ ஃபேமஸாகியிருக்கிறது. யோசித்துப் பாருங்கள். இந்த மூன்று பிராண்டுகளின் வெற்றியின் ரகசியம் என்ன? இவை பிராண்டுகள் என்ற அந்தஸ்த்தைப் பெற்றதால். அந்த அந்தஸ்த்தைப் பெற மார்க்கெட்டிங்கை சரியாய் பிரயோகித்ததால்.

அதனால் தான் சொல்கிறேன். உங்கள் தொழிலின் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம் மார்க்கெட்டிங்!
சொல்ல மறந்துவிட்டேனே. சுவாமிக்கு கடைசியில்தான் தீபாரதனை என்று பீடிகை போட்டு மார்க்கெட்டிங் பற்றி எழுதத் துவங்கியதால் ‘மார்க்கெடிங் பற்றி பேசிவிட்டு இவன் இப்பகுதியை ஒரு வழியாய் முடித்துவிடப் போகிறான், அப்பாடா’ என்று மனப்பால் குடிக்காதீர்கள். லேசில் உங்களை விடுவதாய் இல்லை. ஸ்டார்ட் அப் பற்றி பேச இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது. அடுத்த வாரம் சந்திப்போம். அதற்கடுத்த வாரங்களும். மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x