Published : 19 Nov 2019 11:51 am

Updated : 20 Nov 2019 21:23 pm

 

Published : 19 Nov 2019 11:51 AM
Last Updated : 20 Nov 2019 09:23 PM

சம்சாரம் அது மின்சாரம்..!

humor-story

நாட்டுக்கு வெளிச்சம் தரது மின்சார வாரியம்ன்னா, வீட்டுக்கு வெளிச்சம் தரது சம்சார வாரியம்.

சர்வாதிகாரியோட சாம்ராஜ்யத்துலகூட சந்தோஷமா வாழ்ந்தவன் இருக்கான். ஆனா, சம்சார சாம்ராஜ்யத்துல நிம்மதியா வாழ்ந்தவன் இல்லை.


காலைல காய்கறி வெட்ட ஆரம்பிக்கும்போதே, கட்டினவனைத் திட்ட ஆரம்பிச்சாத்தான், இல்லத்தரசிகளுக்கு அந்த நாள் இனிய நாளா இருக்கும். மங்கள இசை முழங்க வேண்டிய நேரத்துலகூட எங்களை வசை பாடுறீங்களேம்மா? என்னம்மா இப்படிப் பண்ணுறீங்களேம்மா, ஆண்களை வெத்தலையா வாய்ல போட்டு மெல்லுறீங்களேம்மா.

பொழியும் வசவுகள்

கலிங்கப் போர்ல களைப்படைஞ்ச அசோகராட்டம் அங்கிட்டும் இங்கிட்டும் ஒத்தையாளா ஓடுறனே, ஒரு டீ போட்டு தரக் கூடாதான்னுதான் ஆரம்பிக்கும் தகராறு, அதுக்கப்புறம் நடக்கிறதெல்லாம் வார்த்தைகளால் வரைய முடியாத வரலாறு. கபடி ஆடுறவன் எதிராளி காலைப் பார்க்கிற மாதிரி, நாமளும் குண்டாவுக்குள்ள இருக்கிற பாலை மட்டுமே பார்ப்போம். மெகா சீரியல் மாதிரி அரை மணி நேரமா நகராம ஒரே சீன்ல இருந்த பாலு, ஒரு நொடி கண் அசருறப்ப, பாம் போட்ட பாற்கடல் மாதிரி பொங்கி வழியும், கணவர்களுக்கு வசவுகள் வடகிழக்குப் பருவ மழையா பொழியும்.

துபாய்ல வேலை செஞ்சு துட்டு சேர்த்து சொந்தமா நாலு காரு வாங்கிடலாம், ஆனா துணைவி சொன்ன வேலைய செஞ்சு நல்ல பேரு வாங்க முடியாது. ஏதாவது செய்ன்னு திட்டுறாங்க, செஞ்சாலும் இதையா செஞ்சீங்கன்னும் திட்டுறாங்க, மொத்தத்துல மரப் பலகைல போட்டு, நம்மளை மட்டன் பீஸா வெட்டுறாங்க. சமையலறையில் இருந்து திட்டு வர்றப்ப நாம அதை வாங்கிக்கிட்டே ‘உம்’ கொட்டணும், இல்லன்னா உள்ள இருந்து திட்டு வராது, பறக்கும் தட்டுதான் வரும். தங்களை அடிச்சு நொறுக்குனதைத் தாங்களே ‘அக்னாலஜ்மென்ட்’ கொடுக்குற ஒரே இனம் கணவர்கள்தான்.

வாழ்க்கை வகுத்த விதி

யாராவது கிணறு வெட்ட கூப்பிட்டாக்கூடக் கடப்பாரையைத் தூக்கிக்கிட்டு தைரியமா போற ஆளுங்ககூட, மனைவிங்க காய் வெட்ட கூப்பிட்டா கொஞ்சம் யோசிச்சுப் போவாங்க. கத்திரிக்காய கால் சென்டிமீட்டர் அதிகமா வெட்டிட்டீங்க, முருங்கைக்காயை மூணு மில்லிமீட்டர் குறைவா வெட்டிட்டீங்கன்னு வெட்டியும் தந்துட்டு திட்டையும் வாங்கிட்டு வரணும் என்பதே வாழ்க்கை வகுத்த விதி.

‘நியூ ஆபர்ஸ்’ ஏதாவது இருக்கான்னு நாம நியூஸ் பேப்பருக்குள்ள நுழைஞ்சு, நாலாம் பக்கத்து நாட்டு நடப்புல ஒளிஞ்சிருக்கும்போதுதான், குழந்தையைக் குளிப்பாட்டுங்கன்னு கோரிக்கை மனு தருவாங்க. குரங்கை கூட்டிக்கிட்டு வித்தை காட்டகூடப் போலாம், ஆனா குழந்தையைக் குளிப்பாட்ட மட்டும் போயிடக் கூடாது. குற்றாலம் போயிட்டுக் குளிக்காம வந்தவன்கூட இருக்கான், ஆனா குழந்தையைக் குளிப்பாட்ட போயிட்டு முழுசா நனையாம வந்தவன் இல்லை. ஆறு அடுக்கு அபிஷேகம் செஞ்ச கடவுள் சிலை மாதிரி, குளிக்கவச்சு குழந்தைங்களை நாம தூக்கிட்டு வந்தா, காதுல சோப்பு நுரை அப்படியே இருக்குன்னு நம்ம மேல, பேச்சுலையே பிரமோஸ் ஏவுகணை வச்சு தாக்கிட்டுப் போவாங்க. மனைவிகள் ஒரு வேலைய சொல்றப்ப ‘சரிம்மா பண்ணிடுறேன்’ன்னு ஆரம்பிக்கிற ஆண்களை, கடைசில ‘சரியா பண்ணிடுறேன்’ன்னு கதற வைக்கிறதுதான் பெண்களின் தனி டேலண்ட்.

மறதி தண்டனை

ஷூ சாக்ஸைப் போட்டுவிட்டு அசிஸ்டென்ட் டைரக்டரா ஆரம்பிக்கிற நாம, ஸ்கூல் யூனிபார்மை இஸ்திரி போட்டு அசோசியேட் டைரக்டரா மாறினாலும், கடைசிவரை தலைல கொட்டும், தாறுமாறு திட்டும்தான். கணவர்களோட மறதி லிஸ்ட்ல முதலாவதா இருப்பது மளிகை லிஸ்ட். கஜினி சூர்யா மாதிரி உடம்பு முழுக்க பச்ச குத்திட்டுப் போனாலும், உளுந்தம்பருப்புக்குப் பதிலா துவரம்பருப்பை வாங்கிட்டு வந்து வழியலா சிரிக்கிறதுதான் ஆண்களோட சிறப்பு, அப்புறம் மனைவிகளுக்கு வராமையா இருக்கும் கடுப்பு? என்னாதான் செக் பண்ணி பேண்ட் சட்டையைத் துவைக்கப் போட்டாலும், என்னைக்காவது பணமோ ரசீதோ பாக்கெட்டுல மாட்டிக்கும். நாட்டைக் காட்டிக்கொடுத்தவனைக்கூட அப்படி திட்ட மாட்டாங்க. ஆனா ஒரு பத்து ரூபா நோட்டை மறந்தா துவைச்சு தொங்கவிட்டுடுவாங்க.

மனைவி ஊருக்குப் போயிட்டுத் திரும்பிவர தினங்கள், பாகுபலியோட நாம போருக்குத் தயாராகிற கணங்கள். வத்திப்பெட்டில எத்தனை குச்சி இருந்துச்சுன்னு ஆரம்பிச்சு, உப்பு ஜாடி ஏன் மூடல, போர் மோட்டார் ஏன் போடல, கரித்துணிய ஏன் துவைக்கல, காலண்டர் ஏன் கிழிக்கலன்னு அன்றைய நாள் முழுக்க நம்மீது வார்த்தைகள் வாள்தான். வாசல்ல புதுசா செருப்பு கிடக்க, கதவை மனைவி சிரிப்போடு திறந்தா, அவங்க சொந்தக்காரங்க வந்திருக்காங்கன்னு அர்த்தம். வாசல்ல புதுசா செருப்பு கிடக்க, கதவை மனைவி கடுப்போட திறந்தா, நம்ம சொந்தக்காரங்க வந்திருக்கான்னு அர்த்தம். முதல் சூழ்நிலைல நமக்கு மணிரத்னம் பட டயலாக்குல திட்டு கிடைக்கும், ரெண்டாவதுல விசு பட டயலாக்காட்டம் திட்டு கிடைக்கும். ‘இவருக்குப் பதிலா இவர்’ன்னு ஆள் மாத்தி ஆள் நடிக்கிற சீரியலைகூட சின்சியரா பார்ப்பாங்க, ஆனா அவசரத்துக்கு ஒரு நூடுல்ஸ் பாக்கெட்டை பிராண்ட் மாத்தி வாங்கி வந்துட்டா, விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிப்பாங்க.

வளையல் ஓசை மகிமை

கருந்தேள்கூடக் கருணை காட்டிட்டு நம்மளைக் கொத்தாம விட்டுடும், ஆனா கட்டின பொண்டாட்டிங்க புருஷனைத் திட்டாம இருக்க மாட்டாங்க. ஏழு அடில கேட் செஞ்சு வச்சாலும், அதைப் பத்திரமா பாக்கிறது நாலு அங்குலப் பூட்டுதான் என்பது பெண்களுக்கு நல்லாவே தெரியும், அதனாலதான் ஆயிரம் திட்டு கொடுத்தாலும், கணவர்களை விட்டுக்கொடுக்க மாட்டாங்க. குறை சொல்வது ஒரு கலை, அதில் திட்டிச் சொல்வது ஒரு வகை, அது பல மனைவிகளுக்குத் தியான நிலை.

ஒரு விஷயமோ வேலையோ பொறுப்பா ஆரம்பிச்சு சிறப்பா முடியணும் என்பதே மனைவிகளின் முதன்மையான எண்ணம், அதுக்காகக் கணவர்களைத் திட்டி திட்டி விரட்டுறது, கருங்கல்லைத் தட்டி தட்டி கலையான சிலையைச் செதுக்குற மாதிரி. அதனாலதான் அதைக் கணவர்கள் கேஷுவலா எடுத்துக்கிறாங்க, அவர்களுக்குத் தெரியும், வயலின் ஓசையைவிட வளையல் ஓசைதான் கேட்க இனிமை.

(சத்தம் கேட்கும்)
- 'தோட்டா’ ஜெகன் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com
ஓவியம்: வெங்கி

சம்சாரம் அது மின்சாரம்நகைச்சுவைக் கட்டுரைநகைச்சுவைப் பதிவுசம்சார வாரியம்

You May Like

More From This Category

More From this Author